search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திவாகரன் கல்லூரி மாணவிகள் - ஊழியர்கள் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட்
    X

    திவாகரன் கல்லூரி மாணவிகள் - ஊழியர்கள் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட்

    திவாகரன் கல்லூரி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் தம்பி திவாகரன் வீட்டில் கடந்த 9-ந் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதேபோல் மன்னார்குடி மன்னை நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீடு, மாவட்ட செயலாளர் காமராஜ் வீடு, மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் என சுமார் 20 இடங்களில் சோதனை நடந்தது.

    இந்த சோதனை நேற்றுமுன்தினம் இரவு வரை நடந்தது. 4 நாட்களாக நடந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதை 15 பண்டல்களாக கட்டி கார்களில் சென்னைக்கு நேற்று கொண்டு சென்றனர்.

    முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் திவாகரனை கல்லூரிக்கு அழைத்து சென்று சுமார் 14 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது.

    இதனால் திவாகரனை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.


    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது கருப்பு பணத்தை மாற்றுவதற்காக கல்லூரி மாணவிகள்- ஊழியர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய ஆதாரங்களையும், வங்கியின் ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

    கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்களை மூட்டையாக கட்டி கல்லூரியில் உள்ள ஒரு அறையில் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    இந்த ஆவணங்களில் சில வங்கிகளின் பெயர்களும் இருப்பதால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடமும் விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளர்.

    Next Story
    ×