search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கோவில் தேரோட்டம்: கவர்னரை புறக்கணித்த முதல்வர்
    X

    புதுவை கோவில் தேரோட்டம்: கவர்னரை புறக்கணித்த முதல்வர்

    புதுவை கோவில் தேரோட்டத்தை கவர்னரும், முதல்-அமைச்சரும் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைப்பது வழக்கம். ஆனால், கவர்னர் - முதல்வரிடையே உள்ள மோதல் இந்த நிகழ்ச்சியிலும் தென்பட்டது.

    வில்லியனூர்:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    நேற்று சட்டசபையில் கவர்னர் பிரச்சினை பற்றி விவாதம் நடந்தது. அப்போது ஆவேசம் அடைந்த முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னரை எம்.எல்.ஏ.க்கள், தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது என்று பேசினார்.

    இந்த நிலையில் புதுவையில் வரலாற்று சிறப்புமிக்க கோவிலான வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    மரபுபடி தேரோட்டத்தை கவர்னரும், முதல்- அமைச்சரும் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைப்பது வழக்கம். ஆனால், கவர்னர் - முதல்வரிடையே உள்ள மோதல் இந்த நிகழ்ச்சியிலும் தென்பட்டது.

    தேரோட்டத்தை தொடங்கி வைக்க கவர்னர் கிரண்பேடி இன்று காலை 7.20 மணிக்கு வந்தார்.

    ஆனால், அதற்கு முன்னதாகவே முதல்- அமைச்சர் நாராயணசாமி விழாவுக்கு வந்திருந்தாலும் கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வரவேற்க வில்லை. தனது கட்சி நிர்வாகிகளுடன் அவர் தனியாக நின்றிருந்தார்.

    சம்பிரதாயத்துக்காக தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான நமச்சிவாயம் கவர்னர் கிரண் பேடிக்கு வணக்கம் தெரிவித்தார்.

    அதன் பின்னர் கவர்னர் கிரண்பேடி தனியாக நின்றும், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தனியாக நின்றும் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    கவர்னர் கிரண்பேடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் அருகருகே நின்றிருந்தாலும் ஒருவருக் கொருவர் வணக்கம் கூட சொல்லிக்கொள்ள வில்லை.

    பின்னர் இருவரும் தனித்தனியாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    கோவில் விழாவில் இன்று நடைபெற்ற நிகழ்வின் மூலம் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதை பொதுமக்களே கண் கூடாக பார்த்தனர்.

    கவர்னர் வருகையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் வில்லியனூரில் வரலாறு காணாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×