search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பணை கட்டக்கோரி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கடலூர் & நாகை மாவட்ட விவசாயிகள் போராட்டம்
    X

    தடுப்பணை கட்டக்கோரி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கடலூர் & நாகை மாவட்ட விவசாயிகள் போராட்டம்

    கடலூர் மாவட்டம் மேலத்திருக்களிப்பாலை நாகை மாவட்டம் அளக்குடி இடையே கடல் நீர் ஆற்றின் உள்ளே வராமல் தடுக்க தடுப்பணை கட்டக்கோரி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கடலூர் & நாகை மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ம.ஆதனூர் & குமாரமங்கலம் இடையே கதவணை கட்ட வேண்டும். கொள்ளிடத்தில் கடலூர் மாவட்டம் மேலத்திருக்களிப்பாலை(கவரப்பட்டு)& நாகை மாவட்டம் அளக்குடி இடையே கடல் நீர் ஆற்றின் உள்ளே வராமல் தடுக்க தடுப்பணை  கட்ட வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள கடலூர், நாகை ஆகிய 2 மாவட்ட மக்களின் குடிநீர் பாசன ஆதாரங்களை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அனைத்து விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். தங்களது கோரிக்கை நிறைவேறாததால் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
    நாகை&கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் கடலூர் மண்டல தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் மதிவாணன், உழவர் முன்னணி தலைவர் கென்னடி, பா.ம.க. மாநில துணைதலைவர் சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், நாகை மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வடக்கு மாவட்ட தலைவர் விஸ்வநாதன், கொள்ளிடம் கீழணை பாசன சங்க செயலாளர் அன்பழகன், துணைதலைவர் லட்சுமிகாந்தன், பொருளாளர் கவிசந்திரன் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷ மிட்டனர். தொடந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காய்கறிகளை வெட்டி, அவர்களே அங்கே சமையல் செய்து சாப்பிட்டனர். தகவல் அறிந்து மாலை 3.30 மணிக்கு கோட்டாட்சியர் விஜயலட்சுமி அங்கு விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இந்த மாத இறுதிக்குள் கதவணை, தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையேற்று தற்காலிகமாக போராட்டத்தை விலக்கி கொள்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×