search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களின் ஆன்லைன் படிப்புகளின் நன்மைகள்
    X

    மாணவர்களின் ஆன்லைன் படிப்புகளின் நன்மைகள்

    இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...
    இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலையிலும் உள்ள பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறும் வாய்ப்பை வழங்குகின்றன ஆன்லைன் படிப்புகள். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல, ஏராளமான படிப்புகளை இணையதளம் வழியே வழங்குகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மட்டும் 3 மில்லியன் மாணவர்கள் முழுமையான ஆன்லைன் படிப்புகளையும், 6 மில்லியன் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள துறை சம்பந்தமான ஏதாவது ஒரு சான்றிதழ் படிப்பையும் ஆன்லைன் வழியே படிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 2016 வரையான புள்ளிவிவரத்தின்படி 7.3 சதவீத மாணவர்கள் இணையப்படிப்பிற்கு திரும்பி உள்ளனர். இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...

    1. ஏராளமான படிப்புகள் :

    ஆன்லைனில் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. நீண்ட காலம் படிக்க வேண்டிய படிப்புகளைக்கூட குறுகிய கால படிப்பாக வழங்குகின்றன இணையதள கல்வி. பல புதுமையான படிப்புகளும் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெறும் ‘தியரி’ பாடங்களாக மட்டும் படிக்காமல், தொழில்நுட்பம் முதல் மருத்துவ சான்றிதழ் படிப்புகள் வரை பல படிப்புகளும் இணையதளத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இணைய கல்வி வழங்குவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பல சிரமங்கள் குறைவதால், அவைகளும் ஆன்லைன் படிப்புகளை ஊக்குவிக்கின்றன. எண்ணற்ற படிப்புகளை இணையம் வழியாக அறிமுகப்படுத்தி வருகின்றன. சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் நர்சிங் முதல் நியூரோசயின்ஸ் வரை அனைத்து வகை பாடங்களையும் இணையதள கல்வியாக வழங்குகின்றன. இவற்றில் குறிப்பிட்ட ஒரு பிரிவை மட்டும் குறுகிய கால டிப்ளமோ படிப்பாக படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    2. செலவு மிச்சம் :

    ஆன்லைன் படிப்புகள் மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பலவிதமான செலவுகளை கட்டுப்படுத்துவதாக விளங்குகின்றன. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்காக இடமாறிச் சென்று வாடகைக்கு குடியேறுவது அல்லது அதிகம் செலவு செய்து சென்று திரும்புவது போன்ற பணவிரயத்தை தவிர்க்கிறது. பயணச் செலவு, எரிபொருள் செலவை மிச்சப்படுத்துகிறது. மேலும் பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கான செலவையும் தவிர்த்து விடுகிறது. இதனால்தான் கல்லூரிகள் இணையப் படிப்பை அறிமுகம் செய்வதை விரும்புகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் இணையப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.

    3. தடைகள் இல்லை :

    விரும்பிய பாடத்தை விரும்பிய சூழலில் இருந்து கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட உடையணிந்து கல்லூரிக்கு வர வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பிற்கு ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் இணையப் படிப்புகளில் இல்லை. இரவு உடையில் தூங்கி எழுந்த உடனேயே பாடத்தை படிக்கத் தொடங்கிவிடலாம். சொந்த வேலைகளை பகலில் முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும் முன்பும் சிறிது நேரம் பாடம் படிக்கலாம். பாடங்களும், விளக்க உரைகளும் இணையத்தில் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பதால் ஒவ்வொரு பாடமாக படித்துவிட்டு அடுத்த பாடத்திற்கு நகர்ந்து செல்லலாம். காலையில் பரபரப்பாக எழுந்து கிளம்பி, போக்குவரத்து நெரிசலில் சிக்குவது போன்ற சிரமங்கள் இல்லை. முக்கியமான வேலைகளால் பாடவகுப்பை தவறவிடுவது, அல்லது பிரியமானவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவது போன்ற சூழல் இல்லை.

    4. வசதிகளும், நெகிழ்வு திறனும் :

    இணைய படிப்புகள் மாணவர்களின் வசதிக்கேற்றதாக வடிவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது மட்டும் படிக்கலாம். பொருளாதார நெருக்கடியால் வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டிய சூழல் கொண்டவர்களுக்கு, ஏற்றது இணைய கல்வி. அப்படி படித்தாலும் இடைவெளி விழுதல், இடைநிறுத்தம் (‘டிஸ்கண்டினியூ’ மற்றும் ‘கேப்’) போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய வகுப்புகள் என்று எதுவும் கிடையாது. நூலகங்களுக்குச் சென்றும், நேரடி பயணம் மேற்கொண்டும் சேகரிக்க வேண்டிய தகவல்கள் எதுவுமில்லை. இதனால் தங்கள் தேவைகள் எதையும் ஒத்திவைத்துவிட்டு படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அன்றைய வேலை முடித்த பின்னர் ஓய்வு நேரத்தில் படிக்க முடியும். இத்தகைய நெகிழ்வுத்தன்மைகளால் இணைய படிப்பை மாணவர்களும் விரும்புகிறார்கள்.



    5. வகுப்பறை அச்சம் குறைகிறது :

    சிறந்த கல்வித்திறன் பெற்ற மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு மற்றவர் மத்தியில் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூச்சம் இருக்கும். ஆசிரியரின் முகம் பார்த்து பதிலளிக்க சங்கடப்படும் அவஸ்தை, இணையதள படிப்பில் இல்லை. மற்ற மாணவர் முன்பு அவமானப்பட வேண்டிய சூழலும் ஏற்படுவதில்லை. சந்தேகங்கள், கேள்விகள் எதுவானாலும் எளிதான உரையாடல்கள் மூலம் முடிந்துவிடுவது மாணவர்களுக்கு திருப்தியைத் தரும்.

    6. இடைவெளியைத் தவிர்க்கும் :

    குடும்பச் சூழல், பொருளாதார சூழல், உடல் ஒத்துழைக்காமை போன்ற பல சூழல்களால் படிப்பை இடை நிறுத்த வேண்டிய அவசியம் இணைய கல்வியில் இல்லை. புயல்மழை, வெள்ளம், போராட்டம் போன்ற காரணங்களால் கல்லூரி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டாலும் இணையதள கல்வி பாதிக்கப்படுவதில்லை. சில பாட வகுப்புகள், கலந்துரையாடல்களை எந்தச் சூழலிலும், எங்கு இருந்தாலும் எதிர்கொண்டுவிட முடியும்.

    7. தொழில்நுட்பத்திறனை வளர்க்கும் :

    இணையம் வழியே படிப்பது மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்ப்பதாக அமையும். குறிப்பாக பாடங்கள் தொடர்பான கோப்புகளை தயாரிப்பது, அனுப்புவது, கலந்துரையாடுவது போன்ற பணிகளால் , கணினியின் அடிப்படை அறிவு முதல், நவீன தொழில்நுட்பத் திறனையும் வளர்க்க முடியும். மொழிபெயர்ப்பு திறன் மற்றும் பல வேலைவாய்ப்புத் திறன்களும் அதிகரிக்கும்.

    8. இருப்பிடம் பிரச்சினையில்லை :

    பணி இடமாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் இணையதள கல்வியை பாதிப்பதில்லை. தங்களுக்கோ, பெற்றோருக்கோ இடமாறுதல் பெறும் அவசியம் நேர்ந்தாலும் பாதிப்பின்றி கல்வி கற்க முடியும். கோடைப் பயணம் சென்றாலும், தற்காலிக பணிக்குச் சென்றாலும் இனிதே இணையப் படிப்பை தொடரலாம்!

    இத்தகையை சிறப்புகளால் இணையதள கல்வி ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவருகிறது. ஆன்லைன் படிப்புகளை படிக்கும் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நீங்கள் வேலை பார்ப்பவராகவோ, உங்கள் படிப்பு தொடர்புடைய ஏதேனும் ஒரு சான்றிதழ் படிப்பு படிக்க ஆசைப்பட்டு நேரமின்மை மற்றும் வசதியின்மையால் அவதிப்பட்டாலோ, இணையதளம் மூலம் அந்த படிப்பை படித்து வெற்றி பெறலாம்! 
    Next Story
    ×