search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருசநாடு"

    • குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
    • பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் அரசரடி, பொம்முராஜபுரம், நொச்சியோடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில் மின்சாரம், சாலைவசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.

    இப்பகுதி வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடம் என கூறி எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர். வனத்தை சேர்ந்து வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வாங்கி செல்லக்கூட முடியவில்லை.

    மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சேதம் அடைந்த தங்கள் வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கூட வனத்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தராததால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு இங்கு வர வேண்டாம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கருப்புக் கொடி ஏற்றப்பட்ட கிராமங்களுக்கு ஆண்டிபட்டி தாசில்தார் காதர் செரீப் தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் ஊருக்கு வரும் கட்சியினர் அதன்பிறகு தங்களை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    ×