search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்தீஸ்வரர் கோவில்"

    • விநாயகர் மனித முகத்துடன் காட்சி தருகிறார்.
    • விநாயகர் என்றாலே யானை முகத்தில் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது.

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் வடக்கே திலதர்ப்பணபுரி என்கிற செதலபதி என்ற கிராமம் உள்ளது. இங்கு அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் எங்கும் தரிசிக்க முடியாத வகையில் தும்பிக்கை இல்லாமல், இரண்டு கைகளுடன் விநாயகர் மனித முகத்தில் காட்சி தருகிறார். விநாயகர் என்றாலே யானை முகத்தில் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது. மனிதமுக விநாயகர் செதலபதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் மட்டுமே விநாயகர் மனித முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். இதுபற்றிய புராண வரலாறு உங்களுக்காக...

    பார்வதி தேவி தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை உருவாக்கி அதற்கு விக்னேஸ்வரன் என்று பெயரிட்டாள். ஒரு நாள் மனித முகத்துடன் இருந்த விக்னேஸ்வரரை அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தார். விக்னேஸ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு வந்த சிவபெருமானையும், பார்வதிதேவியின் இருப்பிடத்திற்குள் அனுமதிக்கவில்லை. பார்வதியின் கணவர் என்று கூறியும் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

    இதனால் சிவனுடன் வந்த நந்தீஸ்வரர் விக்னேஸ்வரனுடன் சண்டையிட்டார். அவரையும் மற்ற பூத கணங்களையும் விரட்டி அடித்தார் விக்னேஸ்வரன். கோபம் அடைந்த சிவபெருமான் விக்னேஸ்வரன் தலையை வெட்டிவிட்டார். விவரம் அறிந்து ஓடிவந்த பார்வதி தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று அழுதாள்.

    உடனே சிவன் தன் பூதகணங்களிடம் வடக்கு நோக்கி யார் படுத்திருகின்றனரோ அவரின் தலையை கொய்து வாருங்கள் என்று ஆணையிட்டார். அப்போது யானை ஒன்று வடக்கு நோக்கி படுத்திருக்க, அதன் தலையை பூதகணங்கள் கொய்து எடுத்து வந்தனர். சிவன் அந்த யானைத் தலையை குழந்தைக்கு பொருத்தி உயிர்ப்பித்தார். அத்துடன் அந்த குழந்தையை தன் பூதகணங்களுக்கு தலைவனாக்கி கணபதி என்று பெயர் வைத்தார்.

    மேலும் பக்தர்கள் எந்த பூஜை செய்தாலும் கணபதியை வழிபட்டபின் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தையும் அளித்தார். வி என்றால் வெற்றி, நாயகர் என்றால் தலைவர், இவ்வாறு விக்னேஸ்வரன், விநாயகர் என்ற வெற்றி நாயகன் ஆனார் என்று புராண வரலாறு கூறுகிறது.

    இதேபோல மற்றொரு புராண வரலாறும் உண்டு. கஜமுகாசுரன் என்பவன் யானை முகத்துடன் அட்டகாசம் செய்தான். அவனை வென்ற கணபதி, அவனது முகத்தை தனக்கு பொருத்தி கொண்டதாகவும் தகவல் உண்டு. விநாயகருக்கு யானைமுகம் கிடைப்பதற்கு முன் மனிதமுகம் கொண்ட விநாயகருக்கு செதலபதியில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த விநாயகருக்கு ஆதிவிநாயகர் என்ற திருநாமமும் உண்டு. ஆதிவிநாயகர், வலதுகாலை தொங்கவிட்டு, இடதுகாலை மடித்து வைத்து, இடதுகையை இடது காலின் மீது வைத்தும், வலதுகையை சற்றே சாய்த்து அபய முத்திரை காட்டியபடி காட்சி அளிக்கிறார்.

    தல வரலாறு:

    ராமபிரான் இத்தலத்துக்கு வந்து தன் தந்தை தசரதருக்காகவும், ஜடாயுக்காகவும் இந்த தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தார். இதன் காரணமாக இந்த ஆலய சிவலிங்கத்திற்கு முக்தீஸ்வரர் என்றும், திலதர்ப்பணபுரி என்றும் அழைக்கப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்). ராமபிரான் பிண்டம் பிடித்து சிரார்த்தம் செய்துள்ளார். அந்த பிண்டங்கள் பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது.

    ஆலய சிறப்புகள்:

    அமாவாசை மட்டுமல்லாமல் எந்த நாளிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். சூரியனும், சந்திரனும் சேரக்கூடிய நாள் தான் அமாவாசை. தர்ப்பணம் கொடுக்க மிகச்சிறந்த நாள். இந்த செதலபதி முக்தீஸ்வரர் திருக்கோவிலில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் இறைவனை வணங்கியுள்ளனர். இதனை குறிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் சூரியன், சந்திரன் ஆகியோர் ஒன்றாக நிற்கும் சன்னதி உள்ளது.

    இந்த ஆலயத்தில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் எப்போதும் சேர்ந்து இருப்பதால் இதனை நித்ய அமாவாசை என்பார்கள். இதனால் இந்த ஆலயத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுக்க நாள், கிழமை, திதி, நட்சத்திரம் என எதையும் பார்க்க வேண்டிய தேவையில்லை. எந்த நாளாக இருந்தாலும் இங்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்து கொள்ளலாம்.

    எப்படி செல்வது:

    திருவாரூர் மாவட்டத்தில் செதலபதியில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 22 கிமீ தூரத்தில் பூந்தோட்டம் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து 4 கிமீ தூரத்திலுள்ள கூத்தனூர் ஊருக்கு சென்று, அதன் அருகில் உள்ள செதலபதி என்ற ஊரை அடையலாம்.

    இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதி ஆலயமும், அங்கிருந்து சற்று தொலைவில் சிவ பார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி ஆலயமும் உள்ளன.

    ×