search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகக்கவசம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மெரினா உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 1060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

    அதன்படி பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைத்தெருக்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியது.

    சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று காலை முதல் பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மத வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் கண்காணித்தனர்.

    மேலும் பஸ்களில் வரும் பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மெரினா உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

    இதுதொடர்பாக சுகாதார நல அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் கூறியதாவது:-

    முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் இன்று காலை முதலே சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் முககவசம் அணியாதவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    பொது இடங்களுக்கு மக்கள் காலையில் குறைவாகவே வருவார்கள். பிற்பகலுக்கு பிறகே பொது இடங்களில் அவர்கள் கூடுவார்கள். எனவே அவர்கள் முககவசம் அணியாவிட்டால் உடனடியாக ரூ.500 அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் உடனே அவர்களிடம் வழங்குவார்கள். கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை மார்க்கெட், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தியேட்டர், வணிகவளாகம், தங்கசாலையில் உள்ள தியேட்டர், ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் இன்று காலையிலேயே சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

    திருவொற்றியூரில் தேரடி பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், திருவொற்றியூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இன்று முதல் நாள் என்பதால் பல இடங்களில் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினார்கள்.

    சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைத்தெருக்கள் வணிக வளாகங்களில் அதிகாரிகள் இன்று காலை முதலே கண்காணித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மேலும் சென்னை கோயம்பேடு பஸ்நிலையம், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளிலும் அதிகாரிகள் இன்று காலை முதலே கண்காணித்து வருகிறார்கள்.

    பரங்கிமலை சுரங்கப்பாதை, ஆலந்தூர் காய்கறி மார்க்கெட், ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள வணிக வளாகம், மேற்கு கரிகாலன் தெரு-புளுபைக் சந்திப்பு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்கினார்.

    மேலும் இன்று அபராதம் விதிக்கும் நடைமுறைகள் தொடங்கி இருப்பதால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து 'முககவசம் அணியுங்கள் அல்லது ரூ.500 அபராதம் கட்ட வேண்டும்' என்றும் எச்சரித்தனர். இந்த அறிவிப்பை கேட்டதும் பொதுமக்கள் முககவசம் அணிந்தனர்.

    • வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
    • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதுபோன்ற இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 3ம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

    தினசரி 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அண்டை மாவட்டங்களான கோயம்புத்தூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி சராசரியாக 10 நபர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவதால் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

    எனவே நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம். நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தி கொள்ளாதவர்கள் உரிய நேரத்தில் தங்களது தவணைக்குரிய தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இது–வரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிம், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது
    • கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 3 பேருக்கு புதியதாக கொரோனா ஏற்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இதுவரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிம், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 18-45வயதிற்குட்பட்ட 342100 நபர்களில் இதுவரை 349213 நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 344444 பேருக்கும் போடப்பட்டுள்ளது. 15-18 வயதிற்கு உட்பட்ட 34800 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 35116 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 30807 நபருக்கும் போடப்பட்டுள்ளது. 12-14 வயதிற்கு உட்பட்ட 22100 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 24563 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 17702 நபருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 658900 நபர்களில் 680307 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 670221 இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டுள்ளது.

    கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

    இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.

    எனவே, கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொது இடங்களில் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

    இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை.
    • கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு.

    கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் அம்மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

    ×