search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுச்சான்றிதழ்"

    தனக்கு எதிராக பாலியல் புகார் செய்த மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    புதுச்சேரி பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர் குமாரவேல். இவர், அவரது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த மாணவி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் பேராசிரியரிடம் விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து கடந்த பிப்ரவரி 14-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி குமாரவேல் கல்லூரி தலைவரிடம் மனு கொடுத்தார்.

    இந்தநிலையில், அந்த மாணவி தனக்கு மாற்றுச்சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்று தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் மனு கொடுத்தார். இதை எதிர்த்து குமாரவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் தந்தால் விசாரணை மேலும் தாமதமாகும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார்.

    பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘புகார் கொடுத்த மாணவியை கல்லூரியைவிட்டு வெளியே செல்ல தடை விதிக்கும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார்.

    எனவே, மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை புதுச்சேரி மாநில சட்டப்பணி ஆணைக்குழுவிடம் 2 வாரத்துக்குள் செலுத்தவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார். #tamilnews
    ×