search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"

    • மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது
    • மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள புராதன சின்னங்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைகல் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அருகில் சென்று பார்த்து ரசிக்க, மத்திய தொல்லியல் துறை உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கிறது. ஒரு இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்று அனைத்து பகுதிகளையும் பார்வையிடலாம்.

    ஆனால் தொல்லியல்துறை வழிப்பாதையில் கலங்கரை விளக்கம், கடல்சார் அருங்காட்சியகம் அமைந்து இருப்பதால் அதையும் பார்க்கலாம் என கருதி சுற்றுலா பயணிகள் சென்றால் அனுமதிப்பது கிடையாது.

    இதற்கு கப்பல் போக்குவரத்து துறையினர்தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    தற்போது கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மத்திய அரசின் இரு துறைகளும் ஒரே கட்டணத்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    • மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
    • மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பணிகள் வந்து செல்கிறார்கள்.

    மாமல்லபுரம் நகருக்கு உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.25. கார்-ரூ.50, பஸ், லாரிகளுக்கு ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

    வாகன நுைழவு கட்டணம் வசூல் செய்யும் போது ஏற்படும் வாக்குவாதம், மோதல் காரணமாக சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். மாமல்லபுரத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் பொது நல வழக்குகளும் தொடரப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று முதல் மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணமோ, புராதன சின்னங்கள் அருகே வாகன நிறுத்துமிட கட்டணமோ செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    • மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை தொல்லியல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறது.
    • சப்த மாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் சிலைகளை, அதுவும் பல்லவர் கால வழிபாட்டின் பழைய சிலைகளை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்கு வடித்த குடைவரை கோவில்கள், குடைவரை மண்டபங்கள், ரதங்கள், பாறை சிற்பங்கள் உள்ளிட்ட புராதன சின்னங்களை கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர். இந்த கற்சிற்ப புராதன சின்னங்களை பார்வையிடுவதற்காக மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான, உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை தொல்லியல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறது. மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்திலேயே சப்த கன்னியர் வழிபாடு நடந்துள்ளதாகவும், இதற்காக பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமூண்டீஸ்வரி போன்ற சப்த கன்னியர்களுக்கு (7 கன்னிகள்) பல்லவர்கள் சிலைகள் அமைத்து வழிபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் குடியிருப்பு வளாக பகுதியில் உள்ள இந்த சப்த கன்னியர் புராதன சின்ன பகுதியில் சமூக விரோதிகள் சிலர் அங்குள்ள கம்பி வேலியை தாண்டி உள்ளே சென்று மது குடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் இதுவரை அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

    தற்போது மாமல்லபுரத்திற்கு குழு குழுவாக சுற்றுலா வரும் பொதுமக்களிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்த கன்னியர் 7 பேரின் சிலைகள் உள்ள இந்த புராதன சின்னத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து தற்போது மாமல்லபுரம் தொல்லியல் துறையின் சிறப்பு அனுமதி பெற்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் சப்த கன்னியர் புராதன சின்னத்தை ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த சப்த கன்னியர் புராதன சின்னம் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறும்போது:-

    சப்த மாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் சிலைகளை, அதுவும் பல்லவர் கால வழிபாட்டின் பழைய சிலைகளை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு சப்த கன்னியர் பூஜை செய்வதைதான் பார்த்திருக்கிறோம்.

    தற்போது நேரில் 7 தெய்வங்களின் சிலைகளை பார்த்து வழிபட்டு செல்வது மனநிறைவாக உள்ளது. இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

    இதனால் மாமல்லபுரத்தில் மற்ற புராதன சின்னங்களுக்கு வருவதுபோல் இங்கும் தற்போது சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கடற்கரை கோயில் வளாகத்தில் அவர்களை வரவேற்றார்.
    • சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் கொண்ட பொதுக் கணக்கு குழுவினர் மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் இன்று மாலை மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.

    முன்னதாக நேற்று பாண்டிச்சேரி சென்ற அவர்கள் இன்று மதியம் கோவளம் வந்து அங்குள்ள பிஷர்மேன்கோ நட்சத்திர விடுதியில் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் மார்ச் இறுதி ஆண்டுக் கணக்கு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கடற்கரை கோயில் வளாகத்தில் அவர்களை வரவேற்றார். சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் தாசில்தார், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது
    • பேரூராட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நகர பகுதி வீதிகளில் நாளுக்கு நாள் மாடுகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மாடுகளின் கூட்டத்தில் வாகனங்கள் புகுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. விபத்துகளில் சிக்கி மாடுகளும், வாகன ஓட்டிகளும் உயிரிழந்த சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது.

    இதை தடுக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • கண்காட்சி திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உலோக, கற்சிற்பங்களை வெளிநாட்டினர் பலர் பணம் கொடுத்து வாங்கி சென்றனர்.
    • மரச்சிற்ப கண்காட்சி திடல்களையும், கைத்தறி மூலம் பட்டு சேலை உருவாக்கும் அரங்கையும் செய்முறை விளக்கத்துடன் பார்த்து ரசித்தனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் நடந்த ஜி20 மாநாடு கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என 120 பேர் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். ஐந்துரதம் பகுதியில் அவர்களை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் ஆகியோர் தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, நாதஸ்வர இசையுடன் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.

    அப்போது வெண்ணை உருண்டைக்கல் வளாகத்தில் தப்பாட்டம் குழுவினர் இசைத்து கொண்டிருந்தபோது, தப்பாட்ட கலைஞர்களிடம் மேளங்களை வாங்கி வெளிநாட்டு விருந்தினர்கள் தப்பாட்டம் இசைத்து மகிழ்ந்தனர். ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்த பிறகு, மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் அங்கு நுழைவு வாயில் பகுதியில் தரையில் வரையப்பட்ட வண்ண கோலங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்தனர்.

    பிறகு கடற்கரை கோவிலுக்குள் வந்த வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் பாரம்பரிய வேட்டி அணிந்து மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களின் வரலாற்று தகவல்களை முழு விவரங்களுடன் எடுத்து கூறினர்.

    அவர்களின் வரலாற்று தகவல்களை உற்று நோக்கி கேட்டறிந்த வெளிநாட்டினர் ஒவ்வொரு சிற்பங்களின் வடிவமைப்பு, அதன் தொன்மைகள், அது உருவாக்கப்பட்ட ஆண்டு குறித்த முழு விவரங்களை கேட்டு வியப்படைந்தனர். பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும்போது ஜொலிக்கும் மின் விளக்கு வெளிச்சத்தில் கடற்கரை கோவிலின் அழகை வெளிநாட்டினர் பலர் ரசித்து குழு, குழுவாக நின்று அங்கு தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தனர்.கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட உலோக, மரச்சிற்ப கண்காட்சி திடல்களையும், கைத்தறி மூலம் பட்டு சேலை உருவாக்கும் அரங்கையும் செய்முறை விளக்கத்துடன் பார்த்து ரசித்தனர்.

    பின்னர் கண்காட்சி திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உலோக, கற்சிற்பங்களை வெளிநாட்டினர் பலர் பணம் கொடுத்து வாங்கி சென்றனர். அப்போது சிற்பங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்று கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி, மாமல்லபுரம் சிற்பகலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் வெளிநாட்டினருக்கு விளக்கினர்.

    வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக ஐந்துரதம் பகுதியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா, மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.

    இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அப்பகுதிகளை இன்று மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு படை, கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் அப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    • மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அவர்கள் செல்லும் பகுதிகள் அனைத்தையும் சுத்தமாக வைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
    • தொல்லியல்துறை சார்பில் புதிதாக புல்வெளி அமைத்தல், புராதன சின்னங்கள் பகுதியில் புதிய மணல் வெளி அமைத்தல்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் வருகிற 31-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை ஜி20 மாநாடு நடை பெறுகிறது.

    இதில் பங்கேற்கும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்கிறார்கள். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அவர்கள் செல்லும் பகுதிகள் அனைத்தையும் சுத்தமாக வைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. சாலையோர விளக்கு கம்பங்களில் தேசிய கொடியின் வண்ணத்தில் சீரியல் விளக்குகள், சுவரில் தமிழ் கலாச்சார வரைபடங்கள் என அலங்கார பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தொல்லியல்துறை சார்பில் புதிதாக புல்வெளி அமைத்தல், புராதன சின்னங்கள் பகுதியில் புதிய மணல் வெளி அமைத்தல், இரும்பு கிரில்களுக்கு வண்ணம் தீட்டுதல், இரவு ஒளி விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதனால் விழாக்கோலம் காண மாமல்லபுரம் தயாராகி வருகிறது.

    • சென்னையில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது.
    • இதில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைச் சுற்றிப் பார்க்க உள்ளனர். அப்பகுதியின் அருகில் கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் அதில் இருந்து கதிர்வீச்சு ஏதும் உள்ளதா? இருந்தால் அதன் அளவு என்ன? கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து இன்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    அவர்கள் கொண்டு வந்திருந்த கதிர்வீச்சு கண்டறியும் விசேஷ கருவியை வைத்து கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, ஐந்து ரதம் பகுதியில் சோதனை இட்டனர். அதில் கதிர்வீச்சு அளவு 0.0 என காண்பிக்கப்பட்டதாக கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • பார்கோடை ஸ்கேன் செய்தால் சுற்றுலா இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.
    • புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா இடத்தில் மாமல்லபுரம் இடம் பிடித்து வருகிறது.

    இந்நிலையில் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்லும் முன் அப்பகுதி விபரங்களை ஆடியோ வழியாக அறிந்து கொள்வதற்கு வசதியாக புதிதாக பார்கோடு ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. தொல்லியல்துறை மற்றும் சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் 'ஸ்டோரி டிரையல்ஸ் ஆடியோ டூர்' என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் புதிய பார்கோடு ஒன்றை உருவாக்கி ஐந்துரதம், கடற்கரை கோயில் பகுதியில் முதற்கட்டமாக அறிமுகம் செய்து ஒட்டி வைத்து உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் இந்த பார்கோடை தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால் அருகில் உள்ள முக்கிய புராதன சின்னங்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், போன்ற இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.

    இதனால் சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் உதவியின்றி புராதன சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் சுற்றுலா தலம் குறித்து முழுவதும் அறிந்து கொண்டு வேகமாக தங்களது பயணத்தை முடிக்க முடியும்.

    இந்த புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்கள் குறித்து முழுமையாக சரியான தகவலை பெற முடிகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.
    • தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாமல்லபுரம்:

    ஜி20 கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி வருகிற 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (பிப்ரவரி 1-ந் தேதி), 2-ந் தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

    அவர்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பா டுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது வெளி நாட்டினரை வரவேற்க எந்தந்த இடத்தில் கலைநிகழ்ச்சி குழுவினர் இருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து ஆேலாசனை வழங்கினார். அப்போது சென்னை வட்ட தொல்லி யல்துறை கண் காணிப்பாளர் காளிமுத்து, கோட்டாட்சியர் சஜ்ஜீவனா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
    • ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை.

    மாமல்லபுரம்:

    இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் சுசோகி ஹிரோசி மாமல்லபுரத்துக்கு நேற்று சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோவிலுக்கு வந்த அவரை மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு அவருடன் டெல்லியில் இருந்து வந்த ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் அவருக்கு மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய அரிய தகவல்களை ஜப்பான் நாட்டு மொழியில் விளக்கி கூறினார்.

    பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார்.

    கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். ஜப்பான் தூதரின் பெண் உதவியாளர் தங்கள் நாட்டு தூதரை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து தங்கள் நாட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவரை மகிழ்ச்சி படுத்தினார்.

    நேற்று காணும் பொங்கல் விசேஷ தினம் என்பதால் தனக்காக இங்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்புக்காக யாரும், தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும், அவர்கள் வழக்கம் போல் சுற்றி பார்க்கட்டும் என்றும், நானும் அவர்களுடனேயே சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன் என்று தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளிடம் பெருந்தன்மையுடன் அவர் தெரிவித்தார்.

    அதனால் ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. அவர்கள் வழக்கம்போல் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது.

    ×