search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பிரதேச சட்டசபை"

    • காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை  முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரத்தை எழுப்பினர். இதேபோல் மகாகல் லோக் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் சத்புரா பவன் தீ விபத்து உள்ளிட்ட பிரச்சனைகளையும் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

    இரண்டாவது நாளாக இன்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். காங்கிரஸ் கொண்டு வந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இந்த கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட துணை பட்ஜெட் உட்பட பட்டியலிடப்பட்ட அலுவல்களை சபாநாயகர் எடுத்துக் கொண்டார். அதன்பின்னர் சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைக்கும் தீர்மானத்தை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    சனிக்கிழமை வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியினரின் அமளியால் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இதுவே நடப்பு சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் ஆகும்.

    ×