search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மீனாட்சி அம்மன் கோவில்"

    • வருகிற 30-ம் தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந் தேதி திக்விஜயமும் நடக்க உள்ளது.
    • சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடத்தக்கது சித்திரை திருவிழா ஆகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (23-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் சுவாமி சன்னதியின் முன்உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருள்வர்.

    பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடக்கும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். முன்னதாக இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.

    விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். வீதிஉலாவின்போது 4 மாசி வீதிகளிலும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    வருகிற 30-ம் தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந் தேதி திக்விஜயமும் நடக்க உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது. மறுநாள் (3-ந் தேதி) மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. 4-ந் தேதி சித்திரைத் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவிலின் 4 கோபுரங்களும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது.

    அதனை தொடர்ந்து 3-ந்தேதி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அழகர் மலையில் இருந்து புறப்பாடாகி மதுரை வரும் கள்ளழகர் 5-ந் தேதி அதிகாலையில் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள்.

    • கடந்த 2020-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானைக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டது.
    • கடந்த 4 நாட்களாக எழுந்து நடக்க முடியாமல் படுத்த நிலையில் யானை உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் இருந்து பார்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டது. 26 வயதான இந்த யானை கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பார்வதி யானைக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருவிழாவின்போது காலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானைக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாய்லாந்து மருத்துவ குழுவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் யானை பார்வதிக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து யானைக்கான சிகிச்சை குறித்து காணொலி மூலம் ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.

    இதற்கிடையே கோவில் யானை பார்வதிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக யானை நடைபயிற்சிக்கு செல்லவில்லை.

    தொடர்ந்து யானைக்கு கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக எழுந்து நடக்க முடியாமல் படுத்த நிலையில் யானை உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.
    • ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

    மதுரை:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.

    மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமான நிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
    • உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் தக்கார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 11 உபகோவில்களின் உண்டியல்கள் கோவில் வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ. 1 கோடியே 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 கிடைத்தது.

    0.540 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 323 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் தக்கார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • ஆண்டுதோறும் சராசரியாக 4 தடவைகள் கிரகணங்கள் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சி காலம், சாயரக்ஷை பூஜைகள் ஆகியவை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.

    மதுரை:

    சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழும். அப்போது நிலவின் நிழலை சூரியன் மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழலை சந்திரன் மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் சராசரியாக 4 தடவைகள் கிரகணங்கள் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது. அதாவது இன்று மாலை 5:23 மணி முதல் 6:23 மணி வரை நிகழும். அந்த நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சி காலம், சாயரக்ஷை பூஜைகள் ஆகியவை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பிறகு பக்தர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திம காலம் மாலை 5:51 மணிக்கு சுவாமிகளுக்கு தீர்த்தம் வழங்கி, கிரகணகால அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு சந்திரசேகர் புறப்பாடு நடக்கிறது.

    இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்படும். எனவே இங்கு வழக்கமாக நடத்தப்படும் கோலாட்ட உற்சவம், சுவாமி புறப்பாடு ஆகியவை இன்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்கு பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை 8 மணி நேரம் மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி உப ஆலயங்களான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முத்தீஸ்வரர் கோவில், பைரவர் கோவில், கீழமாசி வீதி தேரடி கருப்பண்ண சுவாமி கோவில், ஏழுகடல் காஞ்சன மாலை அம்மன் கோவில், விநாயகர் கோவில், கீழஆவணி மூலவீதி காலபைரவர் கோவில்,

    தெற்கு மாசி வீதி தென்திருவாலய சாமி கோவில், வீரபத்திர சுவாமி கோவில், சிம்மக்கல் வடக்குவாசல் அனுமார் கோவில், ஆதி சொக்கநாதர் கோவில், செல்லாத்தம்மன் கோவில், திருமலைராயர் படித்துறை காசி விஸ்வநாதர் கோவில், புட்டுத்தோப்பு கடம்பவனேஸ்வரர் கோவில்,

    செல்லூர் பரிபூரண விநாயகர் கோவில், திருவாபுடையார் கோவில், நாகமலை புதுக்கோட்டை சித்தி விநாயகர் கோவில், ஆமூர் ஐயம்பொழில் ஈஸ்வரன் கோவில், சுண்ணாம்பூர் மகா கணபதி கோவில், திருவாதவூர் பிடாரி அம்மன் கோவில், திருமறை நாதர் கோவில், கொந்தகை தெய்வ நாயகப் பெருமாள் கோவில் ஆகிய 23 கோயில்களிலும் இன்று மாலை நடை சாத்தப்படும் என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில், கோவிலின் உள்ளே செல்லும் பகுதியில் அதிகளவில் கடைகள் உள்ளன.
    • கோவில் ஊழியர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், மூடிய கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் படி அறநிலையத்துறை உத்தரவிட்டது.

    மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில், கோவிலின் உள்ளே செல்லும் பகுதியில் அதிகளவில் கடைகள் உள்ளன. அந்த கடைகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது.

    கோவில் ஊழியர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், மூடிய கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    கிழக்கு கோபுர பகுதியில் 53 கடைகள் அகற்றப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 12 கடைகளை அகற்றக்கூடாது என்று கோர்ட்டு இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. அந்த கடைகள் அகற்றப்படவில்லை.

    ×