search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா முனி பூஜை"

    • அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் குண்டம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நள்ளிரவு நடந்தது.

    நேற்று காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் தொடங்கியது. இதில் 41 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்தில் பூக்கள் தூவப்பட்டு வழிபாடு நடந்தது.

    குண்டத்துக்கு தேவை யான விறகுகளை கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல கிராமங்களில் இருந்து மக்கள் பால்குடும் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர். சிலர் தங்கள் கைகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குண்டம் இறங்கியது காண்போரை பரவசப்படுத்தியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான உதவிகளை செய்தனர்.

    குண்டம் திருவிழாவை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில், குண்டம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணி அம்மனை தரிசனம் செய்தனர்.

    கோவை, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனைமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குண்டம் திருவிழாவை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி காலை கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை நடக்கிறது. 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.

    ×