search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்புணர்வுகள் தரும் நன்மைகள்"

    • மனிதனின் வாழ்க்கை மகத்தானது.
    • பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

    உயிரினங்களில் மனிதனின் வாழ்க்கை மகத்தானது, அந்த மகத்துவத்தை நாம் வீணாக்கி விடக்கூடாது. நமது வாழ்க்கையை நாம்தான் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

    இன்றைக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு மூல காரணமே பொறுப்புகளை உணர்ந்து நடக்காததுதான். இதனால்தான் நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள்:

    "நீங்கள் அனைவருமே பொறுப்பாளர்கள்தான். உங் கள் பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விசாரணை செய்யப் படுவீர்கள். தலைவர் ஒரு பொறுப்பாளர், கணவன் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளர், மனைவி தன் கணவனுக்கும், தம் பிள்ளைகளுக்கும் பொறுப்பாளி. ஆக ஒவ்வொருவரும் பொறுப்பாளர்தான். நீங்கள் அனைவருமே உங்களது பொறுப்புகளைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்". (நூல்: புகாரி)

    சுய நலம் சுருங்கி பொது நலம் விரியும்போதுதான் பொறுப்புகள் தானாகவே வரத் தொடங்கி விடும் என்பதை பின்வரும் வரலாற்றுச் செய்தி சுட்டிக் காட்டுகிறது:

    "சுலைமான் நபியின் ராணுவம் வெகுதூரத்தில் வருவதை உணர்ந்து கொண்ட தலைமை எறும்பு பொறுப்புணர்வுடன் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இப்படிப் பேசியதாம், 'எறும்புகளே... நீங்கள் உங்களது புற்றுகளுக்குள் புகுந்து கொள்ளுங்கள். சுலைமானும், அவரது படையினரும் சற்றும் அறியாமல் உங்களை உறுதியாக மிதித்து நசுக்கி விடவேண்டாம்". (திருக்குர்ஆன் 27:18)

    ஆறறிவற்ற ஒரு எறும்பு தன் இனத்தைக் காப்பதில் கண்ணும் கருத்துமாக பொறுப்புணர்வுடன் இருந்திருக்கிறது என்பதைத்தான் இதிலிருந்து நாம் விளங்க முடிகிறது. எதையும் முன்கூட்டியே கணிக்கும் இத்தகைய பொறுப்புணர்வு உள்ளவர்கள்தான் இன்றைக்கு தேசம் முழுவதும் தேவைப்படுகிறார்கள்.

    மனம் எப்போதும் தீமையைத்தான் தூண்டிக் கொண்டிக்கும். இதனால்தான் நபிகள் நாயகம் சொன்னார்கள்: 'நடைபாதையில் கிடக்கும் நோவினைப் பொருட்களை அகற்றுவதும் இறை விசுவாசத்தின் ஓர் அங்கம்'.

    தங்களுக்கான பொறுப்புகளை ஒவ்வொருவரும் சரியாக செய்தாலே போதும் உலகத்தின் எல்லா செயல்பாடுகளும் மிகச்சரியாக இயங்க ஆரம்பித்து விடும்.

    திருக் குர்ஆன் கூறுகிறது:

    `மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட தீயசெயல் களின் காரணத்தால் கடலிலும், தரையிலும் `நாசமும், குழப்பமும் தோன்றின. தீமைகளில் இருந்து அவர்கள் திரும்பி விடும் பொருட்டு' அவர்கள் செய்தார்களே தீவினைகள்; அவற்றில் சிலவற்றை இவ்வுலகிலும் அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்கிறான்'. (திருக்குர்ஆன் 30:41)

    `என் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லையில் எங்கோ ஓரிடத்தில் ஆடொன்று பாதிக்கப்பட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு' என்று கலீபா உமர் சொன்னது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது. இன்றைக்கு இத்தகைய பொறுப்பாளர்கள்தான் மிகஅதிகமாக நாட்டுக்கு தேவைப்படுகிறார்கள்.

    ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன...? அவரவர் தமக்குரிய பொறுப்புகளை மறந்து `இதற்கு நான் பொறுப்பல்ல... இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை... அவர்தான் அதற்கு பொறுப்பு... எனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது...' என்றெல்லாம் சொல்வதுண்டு.

    பொறுப்பு என்பது தட்டிக்கழிப்பதல்ல, எதையும் தைரியமுடன் எதிர்கொள்வதுதான் உண்மையான பொறுப்பு. இறைநம்பிக்கையும், மனவலிமையும் உள்ளவர்களால்தான் எந்தப் பொறுப்பையும் துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.

    'எவர் தமது இரு தாடைக்கும், தொடைக்கும் மத்தியில்உள்ளவைகளுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவர் சுவனத்தில் நுழைவதற்கு நான் முழுப்பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்' என நபிகள் நாயகம் சொல்லியதன் பொருளையும், அதன் பொறுப்பையும் நாம் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டும்.

    ஏனெனில் இந்த இரண்டும் தான் பெரும்பாலான பிரச்சினை களுக்கு முதன்மைக் காரணமாக இருக்கிறது. அதில் இருந்து விலகி சற்று பாதுகாப்பாக இருப்பது என்பது சிரமமான ஒன்றுதான். அந்த சிரமத்தை எவர் பொறுப்புடன் ஏற்றுக்கொள்கிறாரோ அவருக்குத் தான் அந்த சொர்க்கம் தயாராக இருக்கிறது. அதை பெற்றுத்தருவதற்கு நானும் தயாராக இருக்கிறேன் என்று நபிகள் நாயகம் தைரியமாகச் சொன்னார்கள்,

    குழந்தைப் பருவத்தில் இருந்தே நமது பிள்ளைகளுக்கு பொறுப்பு என்றால் என்ன? அதை எப்படி நிறைவேற்ற வேண்டும்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும், நாம் அவற்றை செய்து காட்டவும் வேண்டும்.

    ஒரு முறை, 'இந்தக் குழந்தைக்கு ஹஜ் கடமையா?' என்று ஒருவர் நபிகள் நாயகத்திடம் கேட்டபோது சட்டென `ஆம்' என்று சொன்னார்கள். காரணம், அந்தப் பிள்ளைக்கு அதற்கான பொறுப்புணர்வை குழந்தைப் பருவத்திலேயே ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான். இதே போன்று தான் `ஏழு வயதில் உங்கள் பிள்ளைகளை தொழ ஏவுங்கள். பத்து வயதில் தொழுகையை விட்டதற்காக அடியுங்கள்' என்றும் சொன்னார்கள்.

    இன்றைக்கு நமது பிள்ளைகளை எப்படி வளர்த்து வருகிறோம் என்பதுடன், நாம் எப்படி வாழ்ந்து வருகிறோம் என்பதும் சிந்தித்துப் பார்க்கத்தக்கது. பொறுப்பாக நடப்பது மட்டும் பொறுப்பல்ல, பொறுப்பில்லாமல் சிலர் நடக்கும் போது அதை சரிசெய்வதும் கூட இன்னொரு வகையான பொறுப்புதான். சொல்லப்போனால் தவறுகளை சரிசெய்வதுதான் பெரும் பொறுப்பு.

    வாருங்கள் நமது பொறுப்புகளை உணர்வோம்...! பிறரது உணர்வுகளை மதிப்போம்...!

    ×