search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய குடிநீர் திட்டம்"

    • வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு.
    • திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் இன்று புதிய குடிநீர் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் , 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1362 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு. அது திருப்பூரை மனதில் வைத்துதான் சொல்லப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு பெரியார் மண்ணான ஈரோட்டில் ரூ.310 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தேன். இன்று விழாவில் பங்கேற்க வரும் போது மகளிர் சுய உதவி குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். எனது இல்லத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரித்த பொருட்கள்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட மகளிர் சுய உதவிக்குழு பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்.

    சட்டமன்றத்தில் பேசும் போது உறுப்பினர்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார். ஏனென்றால் அந்த அளவுக்கு பொருட்கள் தரமாக இருப்பதுதான். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்-முறையாக திருப்பூர் வந்துள்ளேன். திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.

    தமிழகத்தின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக முதல்வர் உள்ளார். மாநில நிதி சுமையை மீறி திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். மற்ற மாநிலத்தவர்கள் ஜி.எஸ்.டி என்பது என்னவென்று தெரியாமல் படித்து கொண்டிருந்த போது அதன் பாதகங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்கள் திருப்பூர் மக்கள் தான்.

    நாம் மத்திய அரசுக்கு 5 ஆண்டுகளில் கொடுத்த வருவாய் ரூ. 6 லட்சம் கோடி. ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி கொடுத்தது ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி மட்டுமே. 1 ரூபாய்க்கு 23 பைசா மட்டுமே தருகின்றனர்.

    அமைச்சர் கே.என் நேரு கழகத்திற்கு மட்டும் முதன்மை செயலாளர் அல்ல. மக்களின் களப்பணியில் முதன்மையானவர். திராவிட இயக்கம் , திராவிட மாடல் அரசு அன்றைய தேவையை சிந்திப்பது மட்டுமல்ல. எதிர்கால தேவையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2024க்கு மட்டுமல்ல 2040 ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திருப்பூருக்கு குடிநீர் உள்ளிட்ட திட்டத்தை வழங்கியுள்ளோம்.

    தொழில்துறையினர் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநாட்டு அரங்கம் மிகப்பெரிய அளவில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் திருப்பூர் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

    மகளிருக்கு உதவித்தொகை , அரசு பேருந்தில் இலவச பயணம் , கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை , இல்லம் தேடி கல்வி என அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர். தெலுங்கானாவில் இருந்து வந்து நம் திட்டங்களை பார்த்து செல்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையிலும் நாம் சாதித்து வருகிறோம். இதற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகிறது.

    இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை தருகிறது. பாராட்டும் நன்மதிப்பும் எட்டு திக்குகளில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நீங்கள் பயனாளிகள் அல்ல. இந்த அரசின் பங்கேற்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முதல்வரின் முகமாக இங்கு இருக்கிறீர்கள். அரசின் திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×