search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பித்தம் அதிகரிப்பால் பாதிப்பு"

    • ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர்.
    • பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது.

    நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர் ஆகும். இது நமது வயிற்றில் வலது மேல் பகுதியில் இருக்கும் கல்லீரலில் உருவாகி, அதன் அடியிலுள்ள பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, நாம் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பை உடைத்து, நுண் கொழுப்புப் பொருளாக மாற்றி, பின்னர் உடலிலுள்ள பலவிதமான உயிரணுக்களுக்கும் தேவைப்படும் சக்தியாக மாற்றி அளிக்கிறது.

    பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது. அப்படி இல்லை என்றால், வாந்தி, குமட்டல், தலைசுற்றல், அஜீரணம், ஏப்பம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    ரசாயனப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பது, சுத்தமில்லாத எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சில மருத்துவ ரீதியான நோய்களின் போதும் பித்த வாந்தி வருவதுண்டு.

     பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் வாந்தி இருந்தால், அது பித்தநீர் கலந்த வாந்தி தான். பித்த நீர் அதிகமாக சுரக்கிறது என்றால், மேல் வயிற்றில் வலி இருக்கும். நெஞ்செரிச்சல் இருக்கும். நாக்கு கசக்கும். வாந்தி வருகிற மாதிரி இருக்கும். இருமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.

    நீங்கள் சாப்பிட்ட உணவில் அதிக அளவில் கொழுப்பு இருந்தால் உங்களது கல்லீரலில் பித்த நீரும் அதிக அளவில் சுரக்கும். இது பித்த அமில நீராகி உங்களது குடலுக்குள் செல்லும். இது உடலுக்கு நல்ல தல்ல.

    பித்த அமில நீர் அதிகமான அளவில் சுரக்காமல் இருக்க...

    * கொஞ்சம் கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிட வேண்டும்.

    * சாப்பிட்டவுடன் சுமார் அரை மணி நேரமாவது சாயாமல் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கவும் கூடாது.

    * கொழுப்பு சத்துள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

    * மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.

    * அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

    * படுக்கையின் தலைப்பகுதி சற்று தூக்கலாக இருக்க வேண்டும்.

    * நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், வெண்ணெய், எண்ணெய் அதிக அளவில் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.

    ×