search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரிவேட்டை"

    • அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இன்று மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    சாணார்பட்டியை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே அக்கரைபட்டியில் காளியம்மன், ஞானவிநாயகர், கன்னிமார், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, சாமி சாட்டுதல் மற்றும் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    திருவிழாவின் பாரம்பரிய நிகழ்ச்சியான பாரிவேட்டை நேற்று மாலையில் நடந்தது. இதில், ஒருவர் புலி வேடம் அணிந்திருந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் வேட்டி அணிந்து, முண்டாசு கட்டியபடி கைகளில் கம்பு, ஈட்டியுடன் வந்து புலி வேடம் அணிந்தவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து பாரிவேட்டை நிகழ்ச்சியை தத்ரூப காட்சியை அரங்கேற்றினர்.

    பண்டைக்காலத்தில் அந்த பகுதி, அடர்ந்த வனமாக இருந்ததால் கிராம மக்கள் தங்களது பாதுகாப்புக்காக விலங்குகளை வேட்டையாடியதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். திருவிழாவில் அக்கரைபட்டி, கம்பிளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர்.
    • சுமார் 5 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்காரர் தெய்வத்தை குலதெய்வமாக வணங்கும் 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து 3 நாட்களுக்கு பின்னர் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனைசிறுவயல் கிராமத்தில் உள்ள குளத்தில் நீராடி ஆயுதங்களுடன் பாரிவேட்டைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்தாண்டும் இந்த விழா நடைபெற்றது.

    முன்னதாக நாயத்தான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டு அரண்மனைசிறுவயல் குளத்தில் நீராடிய பின்னர் அங்குள்ள பாரிவேட்டை திடலில் கிராம அம்பலக்காரர்கள் அமர்ந்து வழிபாடு நிகழ்ச்சியை நடத்தினர்.

    அதன் பின்னர் அவர்கள் பாரிவேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களுடன் வேட்டைக்கு சென்றனர். அவர்களை பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பில் பாரிவேட்டைக்கு தடை விதிக்கப்பட்டதால் சம்பிரதாயத்திற்காக சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்று வந்தனர். அதன் பின்னர் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் அரண்மனைசிறுவயல் கிராமத்தில் இருந்து புறப்பட்டு தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று 15 நாட்கள் வரை விரதம் கடைபிடிப்பது வழக்கம்.

    அவ்வாறு விரதம் இருக்கும் இந்த நாட்களில் வீடுகளில் எண்ணெய் பயன்படுத்தி சட்டியில் சமைப்பதோ அல்லது தாளிப்பதோ கிடையாது. மேலும் அவர்கள் வெளியூர் பயணங்களுக்கும் செல்வதில்லை என்று அந்த ஊர் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • நம்பெருமாளுக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார் சகிதம் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.

    நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் உள்ள கனு மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள் மாலை 4.30 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு, பாரிவேட்டை நடத்தியபடி தெற்குவாசல் பகுதி ராஜகோபுரம் வரை வந்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார்.

    இதில் திரளான பக்தர்கள் தெற்குவாசல் கடைவீதியில் இருபுறங்களிலும் காத்திருந்து, குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
    • நிறைவு நாளன்று வல்லபை மஞ்சமாதா அம்மனின் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தின் சார்பில் 18-வது ஆண்டு நவராத்திரி விழா இன்று அதிகாலை கணபதி ஹோமம் மற்றும் அஷ்டாபிசேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வல்லபை மஞ்சமாதா அம்மனுக்கு காப்புக் கட்டும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதுகுறித்து கோவில் தலைமை குருக்கள் மோகன் கூறுகையில், நவராத்திரி விழாவையொட்டி 10-நாட்களுக்கும் வல்லபை மஞ்சமாதா தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பார். நாள்தோறும் மாலை கொலு மண்டபத்தில் குழந்தைகளின் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    நிறைவு நாளன்று வல்லபை மஞ்சமாதா அம்மனின் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். தினசரி பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான வல்லபை வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுமங்கலி பூஜை நடைபெறும். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்றார்.

    விழா ஏற்பாடுகளை ரகுநாதபுரம் வல்லபை அயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ×