search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையப்பர்"

    • நாளை சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார்.
    • தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    நேற்று 6-வது நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி, டவுன் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் இரவிலும் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இரவில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை (சனிக்கிழமை) 8-வது நாள் திருவிழாவில் மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார். இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் தேரை பார்வையிட்டு, தொடர்ந்து வீதி உலா செல்கிறார்கள்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணி அளவில் சுவாமி, அம்பாள் தேர்களில் எழுந்தருளுகிறார்கள். காலை 7.30 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்காக தேர்களை தயார் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது.
    • நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி நடந்தது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடக்கிறது

    விழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நந்திதேவர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. தொடா்ந்து அனுப்புகை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.

    பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரைவாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகனங்கள் பஞ்ச வாத்ய இசையில் மங்கள வாத்யங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

    கோவில் நின்ற சீர்நெடுமாறன் கலையரங்கத்தில் ஆன்மிக பக்தி சொற்பொழிவு, பேராசிரியர் ஞானசம்பந்தனின் தமிழ் இனிமை பட்டிமன்றம் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி நடந்தது. தேர் இழுப்பதற்கான வடம், லோடு ஆட்டோகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டு, தேரில் பொருத்தும் பணி நடைபெற்றது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

    • இன்று இரவு சுவாமி-அம்பாள் வீதிஉலா நடக்கிறது.
    • தேரோட்டம் 2-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் டவுன் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் வீதிஉலா வந்தனர்.

    மேலும் பக்தி இசை, பரதநாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா மற்றும் இரவில் பாடகி மகதியின் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். டவுன் ரதவீதிகளில் வந்து, மாநகராட்சி சார்பில் தேரோட்டம் அன்று செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    2-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இரவில் சுவாமி நெல்லையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், அஸ்திரதேவருக்கு சோடச உபசார தீபாராதனையும், தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடந்தது.

    பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரைவாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்சவாத்திய இசையில் மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.

    நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவையொட்டி நந்தினியின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், பிரியா பிரபுவின் பக்தி சொற்பொழிவும், பார்கவி சந்திரசேகரின் பக்தி இன்னிசையும், தாமிரசபை நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தாமோதர தீட்சிதரின் இன்னிசை சொற்பொழிவும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேர் 3-வது பெரிய தேர் என்ற பெருமை மிக்கதாகும். சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும். இந்த தேர் 85 அடி உயரமாகும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு, தேரில் கூண்டுகளை பிரித்து சுத்தம் செய்யும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று தேரில் சாரம் கட்டி சீரமைக்கும் பணி நடைபெற்றது. சுவாமி-அம்பாள் தேர்களில் சாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதபடி வேலியிட்டு காத்ததால் இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் ஏற்பட்டது.

    புண்ணிய திருத்தலத்தலமான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்தோ்த் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான 517-வது ஆனிபெருந்தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திரதேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.

    நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றிவர, ஆனிப் பெருந்திரு விழாவின் பூர்வாங்க பூஜைகளில் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ, கவுன்சிலர்கள் கிட்டு, உலகநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெறும். கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மீக கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியாக, ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற் பார்வையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆனிப்பெருந்திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தேரோட்டம் 2-ந் தேதி நடைபெறுகிறது.

    நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனிப்பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அம்பாள் தேர் சாரம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சுவாமி தேர் சீராக ஓடுவதற்கு தேவையான அடிப்படை வேலைகள் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தேர்களை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் டேங்கர் லாரியுடன் வந்தனர். அவர்கள் விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.திருவிழா, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • ஜூலை 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • தேர் அலங்காரம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் தேர், முருகர் தேர், நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர் ஒரே நாளில் ஓடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூலை 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    இந்த தேரோட்டத்திற்கு தேர் அலங்காரம் செய்யும் பணி மற்றும் தடி புதுப்பித்து தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மரத்தடிகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து அதை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
    • தெப்பக்குளத்தில் அஸ்திரதேவர்-அஸ்திரதேவி தீர்த்தவாரி நடந்தது.

    பாண்டியர்கால சிவாலயங்களில் மிகவும் பழமை வாய்ந்தது நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. 29-ந் தேதி வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் உள்ள உடையவர் லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், பாண்டியராஜா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் அஸ்திரதேவர்-அஸ்திரதேவி தீர்த்தவாரி நடந்தது.

    இரவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணிக்கு செங்கோலும், தக்கார் கவிதாவிற்கு சுவாமி பாதமும் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது தக்கார் சுவாமி பாதத்தை தலையில் சுமந்த படி வந்தார். முடிவில் செங்கோலை செயல் அலுவலரும், சுவாமி பாதத்தை தக்காரும் அம்பாள் எழுந்தருளிய ஆயிரம்கால் மண்டபத்தில் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் குறுக்குத்துறை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சண்முகர் வைர கிரீடம், வைர வேலுடனும், வள்ளி, தெய்வானை தங்க கிரீடங்களுடன் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த சண்முகர், வள்ளி, தெய்வானையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    4-ம் திருவிழாவான நேற்று சுவாமி மூங்கில் காடான வேணுவனத்தில், வேணுவனநாதர் சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதாவது பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வேணுவனம் என்று அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள மூங்கில் காட்டை கடந்து தினமும் பால் கொண்டு செல்வதை ராமகோன் என்பவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் இந்த வேணுவனத்தை தாண்டி செல்லும்போது குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் மரத்தால் கால் இடறி விழுந்து பால் கொட்டியது. இதை அவர் மன்னனிடம் தெரிவிக்கவே அந்த இடத்தில் வளர்ந்திருந்த மூங்கில் மரத்தை வெட்ட மன்னன் உத்தரவிட்டான்.

    இதைத்தொடர்ந்து மன்னனின் வேலையாட்கள் அந்த மூங்கில் மரத்தை வெட்டி அகற்றினர் அப்போது மூங்கில் மரத்திலிருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் மூங்கில் மரம் இருந்த பகுதியை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் தென்பட்டது. இதை காணும் பாக்கியம் பெற்ற ராமகோன், முற்றும் கண்ட ராமகோன் என்று அழைக்கப்பட்டார். இதையடுத்து பாண்டிய மன்னனின் முயற்சியால் வேணுவனநாதர் பெயருடன் நெல்லையப்பருக்கு மூலஸ்தான கோவில் அமைக்கப்பட்டது.

    இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர திருவிழாவில் 4-ம் நாள் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நெல்லையப்பர் கோவிலில் நடந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில், ராமகோன் பால் கொண்டு செல்வது, அவர் கால் இடறி விழுவது, தாமிரசபையின் உள்பிரகாரத்தில் உள்ள மூங்கில் மரத்தில் வெள்ளி கோடரியால் வெட்டுவது, மூங்கிலில் இருந்து ரத்தம் சொரிவது போன்று நிகழ்வு பக்தர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு உடையவர் லிங்கபூஜையும், 8 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    • 29-ந்தேதி வேணுவனநாதர் தோன்றி வரலாறு வாசித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கொடிபட்டம் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி உள்பிரகார தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கொடிமரத்திற்கு மஞ்சள், வாசனை பொடி, பால், தயிர், இளநீர், அன்னம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 4-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி வேணுவனநாதர் தோன்றி வரலாறு வாசித்தல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருநாளான அடுத்த மாதம் 4-ந் தேதி இரவு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • இரவில் பிள்ளையார் மூச்சுறு வாகனத்தில் உள்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 11-ந் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா நடப்பதற்கு முன்பாக, பிட்டாரத்தி கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து பிள்ளையார் திருவிழா, முதல் மூவர் திருவிழா நடைபெறும். பிட்டாரத்தி அம்மன் கோவிலில் திருவிழா முடிந்து, நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று சுவாமி சன்னதியில் உள்ள சிறிய கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் பிள்ளையார் மூச்சுறு வாகனத்தில் உள்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி சன்னதி முன்பு உள்ள பெரிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், இரவில் பிள்ளையார் மூச்சுறு வாகனத்தில் உள்வீதி உலாவும் வருதல் நடக்கிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பந்தல்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு நெல்லையப்பர் கோவில் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வருகிற ஆனி மாதம் தேர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமான பந்தல் கால் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருக்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

    கோவில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதியில் உள்ள வாசல் மண்டபம் அருகில் பந்தல்கால் நடப்பட்டது. இதை தொடர்ந்து பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.

    ஆனிப்பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக டவுன் புட்டாபுராத்தி அம்மன் கோவில் திருவிழா வருகிற 5-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), விநாயகர் திருவிழா 15-ந்தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து ஆனிப்பெருந்திருவிழா ஜூலை மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் 11-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    ×