search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரிழிவு"

    • கருவுற்றிருக்கும் பெண்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
    • முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு பழம்.

    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு பழம். பலாப்பழ சுளையின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் அதில் இருக்கும் வைட்டமின் ஏ (கரோட்டினாய்ட்ஸ்). ஒரு கப் பலாப்பழத் துண்டுகளில் 143 கலோரிகள், 35 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் புரதச்சத்து, 3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.

    இதில் மிக அதிகமான அளவு வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. பலாப்பழத்தின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 60 ஆகும். இது ஒரு மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவாகும். பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட் மிக அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

    இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் (446 கிராம்) சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தின் கொட்டை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பலாப்பழம் மாவை சாப்பிடலாம்.

    ஏனெனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் எபாக்சைடு, பிளாவினாய்ட்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் பீட்டா செல்களை இன்சுலின் சுரக்கச் செய்து சர்க்கரை அளவை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பலாப்பழம் கர்ப்பப்பை சுருக்குதலை ஏற்படுத்திக் கருச்சிதைவை உண்டாக்கலாம். அதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கவலையுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
    • தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும்.

    இரவு தூங்குவது முதல் காலையில் விழித்து எழுவது வரையிலான இடைப்பட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடாததால் நீண்ட நேரம் வயிறு காலியாக இருக்கும். அதன் காரணமாக காலையில் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும். அதனை சீராக பராமரிப்பதற்கு குளுகோகன், எபிநெப்ரின் மற்றும் கார்டிசோல் ஆகிய மூன்று ஹார்மோன்கள் போராடும்.

    இவற்றுள் கார்டிசோல், மன அழுத்த ஹார்மோனாகும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கும் இந்த ஹார்மோன் அதிகாலை வேளையில் அதிகமாக சுரக்கும். பகல் பொழுதை நெருங்கும்போது படிப்படியாக குறையும். நள்ளிரவில் வெகுவாக குறைந்துவிடும். பின்பு காலையில் அதிகரித்துவிடும். எனவே நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மன அழுத்தத்தில் இருந்தால் இந்த ஹார்மோன் காலை வேளையில் சட்டென்று அதிகரித்துவிடும்.

    குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகுதல், வேலையையும், குடும்ப வாழ்க்கையையும் சம நிலையில் நிர்ணயிக்க தவறுதல், கடன் நெருக்கடி உள்பட பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்திற்கு வித்திடுகின்றன. அதே நிலை நீடிக்கும்போது ஒருவித பயம், வெறுமை போன்ற உணர்வுகள் வெளிப்படும்.

    அப்படிப்பட்ட மன நிலையில் தூங்கச் சென்றால் காலையில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக வெளியேறிவிடும். அதனால்தான் நோயாளிகள் கவலையுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் பொருந்தும்.

    ஏனெனில் காலை வேளையில் கார்டிசோல் அளவு அதிகரித்தால் இன்சுலின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குத்தான் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரிக்கும்போது கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் சரியாக வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகக்கூடும். அவை தயாரிக்கும் இன்சுலினின் அளவு குறையலாம். அதன் தாக்கமாக உடலில் குளுக்கோஸ் அளவும் குறையக்கூடும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பது, நீரிழிவு நோயாளிகளை மட்டுமல்ல மற்றவர்களையும் பாதிக்கலாம். அதிகாலை வேளையில் கார்டிசோல் ஹார்மோனின் அதிகரிப்பு காரணமாக ஏற்படும் அழுத்தத்தின் தாக்கமாக உயர் ரத்த அழுத்தம், பதற்றம், மாரடைப்பு, மூளை பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோய்கள், உடல் வலி, மன அழுத்தம் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற பாதிப்பு கொண்டவர்களுக்கு நிலைமை மோசமாகக்கூடும்.

    கட்டுப்படுத்துவதற்கான வழிகள்

    * அதிகாலையில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தடுக்க யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.

    * ஆன்டி-ஆக்சிடெண்டுகள் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

    * நீரிழிவு நோயாளிகள் சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    * இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தூக்கமின்மை பிரச்சினை இருந்தால் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்.

    * மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பிற போதை பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

    * தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும்.

    * தினமும் போதுமான நேரம் ஓய்வு எடுப்பது அவசியமானது.

    இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிர்ணயித்துக்கொள்வது, அது பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    • இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது.
    • இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது.

    கொத்தவரங்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். கொத்தவரங்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, போலேட் ஆகியவையும் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் கொத்தவரங்காயில் 35 கலோரிகள் தான் இருக்கிறது.

    மேலும் இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் ) மிகக் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தயக்கமின்றி சாப்பிடலாம்.

    இதன் விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் உள்ள நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ரத்தத்தில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், இது பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்கக்கூடிய திறன் படைத்தது.

    இதில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. போலேட் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இத்தகைய நன்மைகளைப் பெற்றிருக்கும் கொத்தவரங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும்போது வயிறு சம்பந்தப்பட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • வெந்தயத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.
    • வெந்தயம் கர்ப்பப்பையில் சுருக்குதல் உண்டாக்கி கருச்சிதைவு ஏற்படலாம்.

    நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். வெந்தயத்தில் உள்ள கேலக்ட்டோமேனான் என்ற நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை வயிற்றில் குறைத்து, குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.

    மேலும் வெந்தயத்தில் உள்ள ஹைட்ராக்சி லியூஸின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இது 2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

    வெந்தயத்தில் உள்ள ட்ரைகோணலின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் திறம்பட செயல்பட உதவுகிறது. வெந்தயத்தை மென்று சாப்பிட்டால் அல்லது 10 கிராம் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை குடித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    வெந்தயத்தில் உள்ள சப்போனின் என்ற ஒரு வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெந்தயத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெந்தயம் கர்ப்பப்பையில் சுருக்குதல் உண்டாக்கி கருச்சிதைவு ஏற்படலாம். மேலும் வார்பெரின் போன்ற மருந்துகளுடன் வெந்தயம் எதிர் செயல் புரிவதால் இம்மருந்துகளை உட்கொள்பவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது
    • கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியகூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    பிறக்கும்போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலை, 'நியோநேட்டல் டயாபட்டீஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது மரபணு காரணங்களால் ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் கிளைபன்கிளைமைட் போன்ற மருந்துகளால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இது சில குழந்தைகளுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுத்தினாலும் ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாகும் முன் தானாகவே குணமாகி விடுகிறது.

    டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இருப்பினும் கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியகூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    1) 'இன்சுலின் பம்ப்' உட்செலுத்திக்கொள்வது: இதன் மூலம் தினமும் மூன்று அல்லது நான்கு முறை இன்சுலின் போட வேண்டிய நிலையை மாற்றலாம்.

    2) கணைய மாற்று அறுவை சிகிச்சை: டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. எனினும் இதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் வசதி இல்லாதவர்களால் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடிவதில்லை.

    3) ஐலட்ஸ் செல் மாற்று அறுவை சிகிச்சை: இந்த முறை சிகிச்சையும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. இது கணைய ஐலட்ஸ் செல்களை உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று கல்லீரலில் உள்ள போர்டல் தமனியில் செலுத்தப்படுகிறது.

    4) ஸ்டெம் செல் சிகிச்சை (குருத்தணு சிகிச்சை): டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் மனித ஸ்டெம் செல்கள் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களாக மாற்றப்பட்டு, இன்சுலின் அதிகமாக சுரந்து, அதன் மூலம் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

    5) செயற்கை கணையம் (ஆர்டிபிசியல் பேன்க்கிரியாஸ்): இதில் இன்சுலின் பம்ப் மற்றும் குளுக்கோஸ் மானிட்டரைக் கொண்ட ஒரு மூடிய லூப் அமைப்பு, ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயலியுடன் இணைந்து செயலாற்றுகிறது.

    6) பயோனிக் பேன்க்ரியாஸ்: இதில் பொருத்தப்படும் செயற்கை கணைய இயந்திரம், ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணித்து ஏற்ற தாழ்வுகளை சரிசெய்கிறது.

    • நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    கர்ப்பகாலத்தின் ஹார்மோன்கள், இன்சுலின் செயல்பாட்டை எதிர்த்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை, கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள். இது பொதுவாக கர்ப்பத்தின் 24 முதல் 28-வது வாரங்களுக்கு இடையில் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    *கார்போஹைட்ரேட் மிக அதிகமாக உள்ள உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை, தினை, சோளம் போன்ற தானிய வகைகளை உட்கொள்ள வேண்டும்.

    *நன்கு வேக வைத்த பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    *பால், மீன், முட்டையின் வெள்ளை, போன்ற புரதங்கள் மற்றும் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவாக உள்ள கொய்யா, மாதுளம், சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.

    *நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும் சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு போன்ற பாலூட்டிகளின் இறைச்சி), பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    *தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    *ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

    *மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றையும் செய்யலாம்.

    *துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    நீரிழிவு நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பனிக்குடநீர் அதிகமாக இருப்பதால் கருக்கலைப்பு ஏற்படும் அபாயம், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இல்லாதபோது அதிகரிக்கிறது.

    • சில தனித்துவமான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன.
    • பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம்.

    நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம். பெண்களில் நீரிழிவு அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம். எல்லா நோய்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொடுப்பதில்லை. நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இந்த நோய் பெண்கள் மற்றும் ஆண்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. அதனால்தான், இந்த நோயின் பொதுவான அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம்.

    பெண்களில் நீரிழிவு அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தால், ஆண்களைப் போலவே அதே அறிகுறிகளையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். இருப்பினும், சில தனித்துவமான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன. இரண்டையும் புரிந்துகொள்வது நீரிழிவு நோயைக் கண்டறிந்து ஆரம்ப சிகிச்சையை எடுக்க உதவும்.

    தனித்துவமான பெண்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:

    * யோனி மற்றும் வாயில் பூஞ்சை தொற்று மற்றும் யோனி மீது ஒரு சொறி

    * சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்

    * பாலியல் செயலிழப்பு

    * பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பெண்களுக்கு நீரிழிவு அறிகுறிகள் ஆண்களால் கூட அனுபவிக்கப்படலாம்:

    * பெரும்பாலும் தாகமும் பசியும் இருக்கும்

    * அடிக்கடி சிறுநீர் கழித்தல்

    * எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் எடை அதிகரிப்பு வியத்தகு அளவில் உயர்கிறது

    * சுறுசுறுப்பான, சோர்வான மற்றும் மந்தமானதாக தோன்றுகிறது

    * மங்கலான பார்வை

    * காயம் மெதுவாக குணமடைகிறது

    * குமட்டல்

    * தோல் தொற்று

    * மடிப்புகளைக் கொண்ட உடல் பாகங்களில் கருப்பு புள்ளிகள்

    * இனிப்பு மூச்சு அல்லது அசிட்டோன்

    * கால்களிலும் கைகளிலும் சுவைக்க குறைந்த உணர்திறன்

    டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலான அறிகுறிகள் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். உங்கள் நீரிழிவு நோயை சரியாகக் கட்டுப்படுத்த வழக்கமான இரத்த சர்க்கரை சோதனை சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும்.

    நீங்கள் வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தில் இருந்தால்:

    * 45 வயதுக்கு மேற்பட்ட வயது

    * அதிக எடை அல்லது பருமனான

    * நீரிழிவு நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டிருங்கள்

    * 4 கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுங்கள்

    * கர்ப்பகால நீரிழிவு நோய்

    * உயர் இரத்த அழுத்தம் வேண்டும்

    * அதிக கொழுப்பு உள்ளது

    * வாரத்திற்கு மூன்று முறைக்கு குறைவாக உடற்பயிற்சி செய்யுங்கள்

    * பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற இன்சுலின் பயன்பாடு தொடர்பான பிற சுகாதார நிலைமைகளைக் கொண்டிருங்கள்

    * இதய நோய் அல்லது பக்கவாதம் வரலாறு இயற்கையாகவே, ஒரு பெண்ணின் உடல் நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் அதிக சவால்களை உருவாக்குகிறது.

    * மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இது பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.

    * பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.

    * உடலில் உள்ள குளுக்கோஸ் பூஞ்சை தொற்று ஏற்படுத்தும்.

    • தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது.
    • மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர்.

    தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது. இதன் விளைவு மக்கள் சுகர் பிரீ உணவுப் பொருட்களை மட்டுமே நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இந்த சுகர் பிரீ உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதா இல்லையா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் சர்க்கரை நோயாளிகள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சாப்பிடும் பிஸ்கட்டிலிருந்து, காபி டீ என எல்லாவற்றிற்கும் சுகர் பிரீயைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

    சர்க்கரை சத்து பொதுவாக மாவு போன்ற கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. ஆனால் மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர்.

    சுகர் பிரீ மாத்திரைகள் அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் இனிப்பு சுவை கொண்டவையாக இருந்தாலும் இவை கொடுக்கும் கலோரிகள் குறைவு. ஆஸ்பார்டேம், சுக்ரலோஸ், சாக்ரைன், ஸ்டிவ்யோசைடு, லீவுலோஸ் போன்றவை நீரிழிவு நோயாளிகளால் பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டிகள்.

    நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தினமும் பயன்படுத்தும் செயற்கை இனிப்பூட்டியின் அளவு மிகக் குறைவு என்பதால் பக்க விளைவு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம்.

    பினைல்கீட்டோன்யூரியா நோய் உடையவர்கள் ஆஸ்பார்டேம் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும். சல்பா அலர்ஜி உடையவர்கள் சாக்ரைன் உள்ள செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏற்படுவதால் அதை தவிர்க்க வேண்டும். அதேபோல் சுக்ரலோஸ் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியா அழிந்து குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.

    நிபுணர்களின் கூற்றுப்படி சுகர் பிரீயில் இயற்கையான பொருட்கள் இருந்தால் பாதுகாப்பானது. அதில் கெமிக்கல்கள் கலக்கும் போது மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. கெமிக்கல்கள் நிறைந்த சுகர் பிரீ எலும்புகளையும் பாதிக்க வல்லது. எனவே சுகர் பிரீயை வாங்குவதற்கு முன் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலை படித்துக் கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் தூக்கமின்மை நேரலாம்.
    • நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் விழித்திரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார்.

    கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியுமா? (மு.பெனாசிர் பேகம், தூத்துக்குடி)

    பதில்: ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்கு உள்ளே செல்ல இன்சுலின் தேவைப்படுகிறது. பொதுவாக செல்களின் வெளிப்புறத்தில் உள்ள சவ்வு உறை (மெம்ப்ரேன்) நீரை வெறுக்கும் (ஹைட்ரோபோபிக்) தன்மையுள்ளது. ஆனால் குளுக்கோஸ் நீரை விரும்பும் (ஹைட்ரோபிலிக்) தன்மையுள்ளது. இதனால் குளுக்கோஸால் செல்களுக்குள்ளே நேரடியாக செல்ல முடிவதில்லை.

    இது செல்களுக்குள் மூன்று முக்கியமான புரதங்களின் மூலம் தான் செல்லமுடியும். அவை: 1. சோடியம் சார்ந்தில்லாத குளுக்கோஸ் டிரான்ஸ்போர்டர் (ஜி.எல்.யு.டி)புரதம், 2. சோடியம் சாராத குளுக்கோஸ் சிம்போர்டர்ஸ் (எஸ். ஜி. எல்.டி) புரதம், 3. குளுக்கோஸ் யுனிபோர்ட்டர் (ஸ்வீட் புரதம்)

    பெரும்பாலான செல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புரதங்கள் இருக்கும். பொதுவாக செல்களின் உள்ளே இருக்கும் ஜி.எல்.யூ.டி புரதம் செல்களின் மேலே வெளிப்படுவதற்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் இல்லாமல் செல்களுக்கு உள்ளே குளுக்கோஸ் செல்ல முடிவதில்லை. அதனால் தான் 'செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரியும் சாவி' என்று இன்சுலின் அழைக்கப்படுகிறது.

    கேள்வி: சர்க்கரை நோயினால் இரவு நேரங்களில் தூக்கமின்மை நேருமா? (உஷா, காஞ்சிபுரம்).

    பதில்: நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் தூக்கமின்மை நேரலாம். ஏனென்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடுவதால் தூக்கம் தடைபடுகிறது. அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது (சர்க்கரை தாழ்நிலை) தூக்கமின்மை, கெட்ட கனவுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தம் அல்லது மனநல பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகம். மன அழுத்தத்தால் இவர்களால் சரியாக தூங்க முடிவதில்லை.

    நீரிழிவு நோயினால் நரம்பியல் பாதிப்பு (டயாபட்டிக் நியூரோபதி) ஏற்படும்போது கை, கால்களில் வலி, மதமதப்பு, எரிச்சல், தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

    நீரிழிவு நோயாளிகளில் 21 சதவீதத்தினருக்கு ஏற்படும் 'ரெஸ்ட்லஸ் லெக் சின்ட்ரோம்' (ஆர்.எல்.எஸ்) எனப்படும் நரம்பு கோளாறில் தூக்கத்தில் கால்களில் விரும்பத்தகாத உணர்வு ஏற்பட்டு, கால்கள் அமைதியற்ற விதத்தில் தானாகவே நடுங்குவதால் தூக்கம் தடைப்பட்டு தூக்கமின்மை ஏற்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 77 சதவீதம் பேர் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    கேள்வி: எனக்கு 20 வருடமாக சர்க்கரை நோய் இருக்கிறது. நான் இன்னும் மாத்திரைகள் எடுத்து கொண்டு தான் இருக்கிறேன். இதனால் எனது சிறுநீரகம் பாதிப்பு அடையுமா?. எனக்கு வயிற்றில் எரிச்சலும் அதிகமாக இருக்கிறது. இது எதனால்? (கண்ணன், தஞ்சாவூர்)

    பதில்: நீங்கள் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியான அளவு எடுத்துக்கொண்டால் மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது. உங்களுக்கு ஒரு வேளை நீரிழிவு நோயாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரை மாத்திரைகளின் அளவையோ அல்லது மாத்திரைகளையோ மாற்றலாம். சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது அதன் வேலைப்பளுவை குறைப்பதற்காக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும் சர்க்கரை மாத்திரைகள் அளவை குறைத்தோ அல்லது வேறு மாத்திரைகளையோ பரிந்துரைக்கலாம். மேலும் எஸ்.ஜி.எல்.டி2 இனஹிபிட்டர் மாத்திரைகள் சிறுநீரக பிரச்சினையை மேலும் மோசமடையாமல் தடுக்கிறது என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உங்களுக்கு வயிறு எரிச்சல் ஏற்படுவதற்கு வயிற்றுப்புண் (கேஸ்ட்ரைட்டிஸ்), நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய இரைப்பை வாதம் (கேஸ்ட்ரோபெரிஸிஸ்) அசிடிட்டி, அமிலப் பின்னோட்ட நோய் (ரிப்லக்ஸ்) போன்றவை காரணமாக இருக்கலாம். வயிறு எரிச்சல் இருப்பதால் நீங்கள் ஏற்கனவே மெட்பார்மின் மாத்திரைகள் உட்கொள்பவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று மெட்பார்மின் மாத்திரையின் அளவை குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதற்கு பதிலாக வேறு மாத்திரைகளை மாற்றிக் கொள்ளலாம்.

    கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லை என்றால் கண் பார்வை பாதிக்கப்படும் என்கிறார்கள். ரத்த சர்க்கரையின் அளவை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தால் கண் பார்வை மீண்டும் நார்மல் ஆகிவிடுமா? (சரவணன், சென்னை)

    பதில்: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால் விழித்திரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் விழித்திரையில் உள்ள ரத்தநாளங்கள் சேதம் அடைவதால் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் விழித்திரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பிற்கு இது முக்கிய காரணமாக திகழ்கிறது. பொதுவாக விழித்திரை நோய் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகிறது. மீண்டும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இது மீளக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. விழித்திரை நோய் பாதித்த ஆரம்ப கட்டத்தில் வேண்டுமானால் இதிலிருந்து மீள்வது சாத்தியம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் விழித்திரை நோய் மேலும் மோசமடைவதை வேண்டுமானால் தாமதிக்கலாம்.

    • ஒரு ஆப்பிளில் 104 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை இருக்கிறது.
    • ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம்.

    ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் (Antioxidants) அதிகமாக உள்ளது.

    ஆப்பிளில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் குறிப்பாக குயிர்செட்டின் (Quercetin), பிளோரிசின் (Phlorizin), கிளோர்ஜெனிக் ஆசிட் (Chlorgenic acid) ஆகியவை இன்சுலின் எதிர்மறை நிலையை (Insulin Resistance) குறைத்து இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்தி, கணையத்தின் பீட்டா செல்களை இன்சுலினை அதிகமாக சுரக்க செய்கிறது.

    ஆப்பிளில் உள்ள அதிகமான நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே அதிகமாகாமல் தடுக்கிறது. ஒரு ஆப்பிளில் 104 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை இருக்கிறது. ஆப்பிளில் அதிகமான அளவு மாவுச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகமான அளவு சாப்பிடக்கூடாது. வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் தோலில் இருப்பதால் தோலுடன் சேர்த்து தான் ஆப்பிளை சாப்பிட வேண்டும். ஜூஸ் வடிவில் குடிக்க கூடாது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒரு முட்டையில் கார்போஹைட்ரேட் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது.
    • ஒரு முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை ஒரு மிகச்சிறந்த உணவாக இருப்பதற்கு கீழ்கண்டவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தக்கூடிய கார்போஹைட்ரேட் ஒரு முட்டையில் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. (0.5 கிராம்). இதில் உள்ள அதிகமான அளவு புரதம் (புரோட்டீன்) (ஏறக்குறைய 7 கிராம்) செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்ட உடனே ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது. முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி12 ஆகியவையும் தசை மற்றும் நரம்புகளுக்கு தேவையான பொட்டாசியம், தோலுக்கு முக்கியமான வைட்டமின் பயோடின், மூளை வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் கோலின் ஆகியவை அதிக அளவில் இருக்கிறது .

    ஒரு முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது. இதில் 15 கலோரிகள் வெள்ளைப் பகுதியிலும், 60 கலோரிகள் முட்டையின் மஞ்சள் பகுதியிலும் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டை சாப்பிடலாம். மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை பகுதி மட்டும் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிடலாம்.

    முட்டையில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் இதை ஒரு முழுமையான புரதம் (கம்ப்ளீட் புரோட்டின்) என்று அழைக்கிறார்கள். ஒரு முட்டையின் மஞ்சளில் கிட்டத்தட்ட 184 கிராம் கொலஸ்ட்ரால், 5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அதை தவிர்ப்பது நல்லது. முட்டையை அவித்து சாப்பிடுவது நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? என்று அறிந்து கொள்ளலாம்.
    • கால் விரல் காயம் ஆறவில்லையென்றால் விரல் எடுக்கிற நிலைமை வருமா? என்று அறிந்து கொள்ளலாம்.

    கேள்வி: சர்க்கரை நோயாளிகளுக்கு புற்றுநோய் உள்ளதா என்று எந்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்? (பன்னீர்செல்வம், வேலூர்)

    பதில்: நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகம், கருப்பையகம் (எண்டோமெட்ரியம்) ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டவர்களில் ஆண்களுக்கு 19 சதவிகிதம் அதிகமாகவும், பெண்களுக்கு 27 சதவிகிதம் அதிகமாகவும் இருப்பதாக கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறிய ரத்தத்தில் கீழ்கண்ட டூயுமர் மார்க்கர் பரிசோதனைகளை செய்யலாம்.

    கல்லீரல் புற்றுநோய்: ஏ.எப்.பி. (ஆல்பா பீட்டோ புரோட்டின்), கணையப் புற்றுநோய்: சி.ஏ 19-9, பெருங்குடல் புற்றுநோய்: சி.ஈ.ஏ. (கார்சினோ எம்பிரியானிக் ஆன்டிஜன்), மார்பக புற்றுநோய்: சி.ஏ 15-3, சி.ஏ (27-29), சி.ஏ 125, கருப்பையக புற்றுநோய் (எண்டொமெட்ரியல் கேன்சர்): சி.ஏ 125, ரத்த அணுக்கள் பரிசோதனை (கம்ப்ளீட் ஹீமோகிராம்), எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எலும்பு ஸ்கேன், எம்.ஆர்.ஐ, பெட் ஸ்கேன் (பாசிட்ரான் எமிஸ்ஸன் டோமோகிராபி) போன்ற பரிசோதனைகளையும் மருத்துவர் ஆலோசனை பெற்று புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்து பார்க்கலாம்.

    கேள்வி: எனக்கு 5 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என் கால் கட்டை விரலில் அடிபட்டு காயம் ஆறாமல் இருக்கிறது. இதனால் என் கால் கட்டை விரல் எடுக்கிற நிலைமைக்கு வருமா? (க. நளினி, மாமண்டூர்)

    பதில்: பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு புண் ஆறாமல் இருப்பதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உங்களுடைய கால் கட்டை விரலில் இழைய அழுகல் (கேங்கரீன்) ஏற்பட்டால் மட்டுமே, வேறு வழியில்லாமல் கால் விரலை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர் துண்டிக்க நேரலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து தொற்று ஏற்படும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் குறைந்து கேங்கரீன் உண்டாகும். ஆனால், நீங்கள் ரத்த சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் இதை தடுக்கலாம். புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல் போன்றவையும் கேங்கரீன் வராமல் தடுப்பதற்கு சில வழியாகும். மேலும் புண் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனை பெற்று இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ளலாம்.

    ஏனென்றால், இன்சுலின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் இன்சுலின் கெரடினோசைட்ஸ் மற்றும் என்டோதீலியல் செல்களை மற்ற திசுக்களில் இருந்து புண் ஆறாமல் இருக்கும் இடத்திற்கு இடம் பெயரச்செய்து புண் சீக்கிரமாக ஆறுவதற்கு உதவி புரிகிறது

    கேள்வி: எனக்கு 18 வருடமாக சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு மூட்டு வலி இருப்பதால் வாக்கிங் போக முடியவில்லை. எனவே சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு வேறு வழி ஏதும் இருக்கிறதா? (கிருஷ்ணசாமி, மேநல்லூர், திருவண்ணாமலை)

    பதில்: உங்களுக்கு மூட்டு வலியால் வாக்கிங் போக முடியாததால் ஆல்டர்நேட்டிவ் எக்ஸர்சைஸ் (மாற்று உடற்பயிற்சி) செய்யலாம். நீங்கள் ஆர்ம் ஸ்விங்க் எக்ஸர்சைஸ் (கைகளை வீசி செய்யும் உடற்பயிற்சி), உடம்பின் மேல் பகுதி உடற்பயிற்சி (அப்பர் பாடி எக்ஸர்சைஸ்), யோகா அல்லது தியானம் செய்யலாம்.

    நீங்கள் வாக்கிங் போயிருந்தால் எரிந்திருக்ககூடிய கலோரிகளை ஈடு செய்ய, குறைந்த கலோரி உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உணவு கட்டுப்பாட்டின் மூலம் ரத்த சராசரியின் அளவை (எச்.பி.ஏ1சி) அதிகமாக்காமல் தடுக்கலாம்.

    கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகவும், புரதச்சத்து உணவுகள், காய்கறிகள், குறைந்த கிளைசீமிக் இண்டக்ஸ் உள்ள பழங்கள், கீரைகள, முட்டையின் வெள்ளைக்கரு, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு இறைச்சி (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி) போன்றவற்றையும், எண்ணெயில் பொறித்த அல்லது வறுத்த உணவுகள், துரித உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கலாம்.

    உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார்.

    கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

    உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×