search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சர்க்கரை நோயாளிகளின் சந்தேகங்களும்... தீர்வும்...
    X

    சர்க்கரை நோயாளிகளின் சந்தேகங்களும்... தீர்வும்...

    • சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? என்று அறிந்து கொள்ளலாம்.
    • கால் விரல் காயம் ஆறவில்லையென்றால் விரல் எடுக்கிற நிலைமை வருமா? என்று அறிந்து கொள்ளலாம்.

    கேள்வி: சர்க்கரை நோயாளிகளுக்கு புற்றுநோய் உள்ளதா என்று எந்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்? (பன்னீர்செல்வம், வேலூர்)

    பதில்: நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகம், கருப்பையகம் (எண்டோமெட்ரியம்) ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டவர்களில் ஆண்களுக்கு 19 சதவிகிதம் அதிகமாகவும், பெண்களுக்கு 27 சதவிகிதம் அதிகமாகவும் இருப்பதாக கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறிய ரத்தத்தில் கீழ்கண்ட டூயுமர் மார்க்கர் பரிசோதனைகளை செய்யலாம்.

    கல்லீரல் புற்றுநோய்: ஏ.எப்.பி. (ஆல்பா பீட்டோ புரோட்டின்), கணையப் புற்றுநோய்: சி.ஏ 19-9, பெருங்குடல் புற்றுநோய்: சி.ஈ.ஏ. (கார்சினோ எம்பிரியானிக் ஆன்டிஜன்), மார்பக புற்றுநோய்: சி.ஏ 15-3, சி.ஏ (27-29), சி.ஏ 125, கருப்பையக புற்றுநோய் (எண்டொமெட்ரியல் கேன்சர்): சி.ஏ 125, ரத்த அணுக்கள் பரிசோதனை (கம்ப்ளீட் ஹீமோகிராம்), எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எலும்பு ஸ்கேன், எம்.ஆர்.ஐ, பெட் ஸ்கேன் (பாசிட்ரான் எமிஸ்ஸன் டோமோகிராபி) போன்ற பரிசோதனைகளையும் மருத்துவர் ஆலோசனை பெற்று புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்து பார்க்கலாம்.

    கேள்வி: எனக்கு 5 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என் கால் கட்டை விரலில் அடிபட்டு காயம் ஆறாமல் இருக்கிறது. இதனால் என் கால் கட்டை விரல் எடுக்கிற நிலைமைக்கு வருமா? (க. நளினி, மாமண்டூர்)

    பதில்: பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு புண் ஆறாமல் இருப்பதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உங்களுடைய கால் கட்டை விரலில் இழைய அழுகல் (கேங்கரீன்) ஏற்பட்டால் மட்டுமே, வேறு வழியில்லாமல் கால் விரலை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர் துண்டிக்க நேரலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து தொற்று ஏற்படும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் குறைந்து கேங்கரீன் உண்டாகும். ஆனால், நீங்கள் ரத்த சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் இதை தடுக்கலாம். புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல் போன்றவையும் கேங்கரீன் வராமல் தடுப்பதற்கு சில வழியாகும். மேலும் புண் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனை பெற்று இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ளலாம்.

    ஏனென்றால், இன்சுலின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் இன்சுலின் கெரடினோசைட்ஸ் மற்றும் என்டோதீலியல் செல்களை மற்ற திசுக்களில் இருந்து புண் ஆறாமல் இருக்கும் இடத்திற்கு இடம் பெயரச்செய்து புண் சீக்கிரமாக ஆறுவதற்கு உதவி புரிகிறது

    கேள்வி: எனக்கு 18 வருடமாக சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு மூட்டு வலி இருப்பதால் வாக்கிங் போக முடியவில்லை. எனவே சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு வேறு வழி ஏதும் இருக்கிறதா? (கிருஷ்ணசாமி, மேநல்லூர், திருவண்ணாமலை)

    பதில்: உங்களுக்கு மூட்டு வலியால் வாக்கிங் போக முடியாததால் ஆல்டர்நேட்டிவ் எக்ஸர்சைஸ் (மாற்று உடற்பயிற்சி) செய்யலாம். நீங்கள் ஆர்ம் ஸ்விங்க் எக்ஸர்சைஸ் (கைகளை வீசி செய்யும் உடற்பயிற்சி), உடம்பின் மேல் பகுதி உடற்பயிற்சி (அப்பர் பாடி எக்ஸர்சைஸ்), யோகா அல்லது தியானம் செய்யலாம்.

    நீங்கள் வாக்கிங் போயிருந்தால் எரிந்திருக்ககூடிய கலோரிகளை ஈடு செய்ய, குறைந்த கலோரி உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உணவு கட்டுப்பாட்டின் மூலம் ரத்த சராசரியின் அளவை (எச்.பி.ஏ1சி) அதிகமாக்காமல் தடுக்கலாம்.

    கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகவும், புரதச்சத்து உணவுகள், காய்கறிகள், குறைந்த கிளைசீமிக் இண்டக்ஸ் உள்ள பழங்கள், கீரைகள, முட்டையின் வெள்ளைக்கரு, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு இறைச்சி (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி) போன்றவற்றையும், எண்ணெயில் பொறித்த அல்லது வறுத்த உணவுகள், துரித உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கலாம்.

    உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார்.

    கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

    உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    Next Story
    ×