search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்மாழ்வார் மோட்ச உற்சவம்"

    • பன்னீராயிரம் திருப்பணி யாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
    • நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார்.

    திருவாய்மொழியின் கடைசி பதிகத்தில், நம்மாழ்வார் மோட்சத்துக்கு செல்லும் வழியையும், அங்கே தமக்குக் கிடைத்த வரவேற்பையும் பாடியிருக்கிறார். இந்த உற்சவத்தை நம்மாழ்வார் மோட்ச உற்சவம் என்பார்கள். அன்று பெருமாள் வழக்கம்போல் புறப்பட்டு வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தம் சாதித்து, தீர்த்தவாரி நடத்தி, திருமாமணி மண்டபம் சேர்வார். பிறகு திருமஞ்சனம் கண்டருள்வார். அன்று அவருக்கு பன்னீராயிரம் திருப்பணி யாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.

    நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல், வெள்ளை உடுத்தி, பன்னிரு திருநாமம் சாற்றி, துளசி மாலையும் தரித்து, சேவை சாதிப்பார். இரண்டு அர்ச்சகர்கள், தங்கள் சரீரத்தைப் போர்வையால் போர்த்திக் கொண்டு ஆழ்வாரை திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொள்வார்கள்.

    சத்ர சாமரங்கள் அவருக்குப் பிடிக்கப்படும். மோட்சத்துக்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தை (ஒளி வழியை) விவரிக்கும், "சூழ் விசும்பு'' என்ற ஒன்பதாம் திருவாய்மொழி சேவிக்கப்படும். நம்மாழ்வார் திருமேனியை எடுத்துச் சென்று பெருமாளின் திருவடியில் வைப்பார்கள்.

    அங்கே, திருவாய் மொழியின் கடைசி பதிகமான `முனியே நான்முகனே முக்கண்ணப்பா' என்ற பதிகம் பாடப்படும். ஆழ்வாரின் மீது திருத்துழாய் (துளசி) வைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆழ்வாரை துளசியால் மூடிவிடுவார்கள். இந்தப் பதிகம் பூர்த்தியானவுடன், பெருமாள் ஆழ்வாருக்கு தம்முடைய கஸ்தூரி திருமண்காப்பையும் மாலையையும் அருளுவார்.

    அதற்கு பிறகு, ''எங்களுக்கு ஆழ்வாரை கொடுத்தருள வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்ய, மூடியிருந்த துளசியை நீக்கிவிட்டு, மறுபடியும் ஆழ்வாரை யதாஸ்தானம் செய்ய, கைகளில் ஏந்திக் கொள்வார்கள். மதுரகவிகளின் கண்ணி நுண்சிறுத்தாம்பு என்கின்ற பாசுரம் சேவையாகும்.

    பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து சன்னதிக்குப் புறப்படும்போது பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விலாமிச்சை வேர் சப்பரத்தில் எழுந் தருளுவார். மல்லாரி என்கின்ற ராகம் வாசிக்கப்படும். ஒய்யார நடைபோடுவார். அப்பொழுது பலவிதமான வாத்தியங்கள் இசைக்கப்படும். கடைசியாக வாசிக்கப்படுவது வீணை. இந்த வாத்தியத்துடன் நாழி கேட்டான் வாசலில் இருந்து படியேற்றம் ஆகி சன்னதிக்குச் செல்வார்.

    ×