search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவையாறு"

    • காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது.
    • திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டம் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது.

    கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர் திருக்காட்டுப்பள்ளி, சாத்தனூர், மருவூர், வடுககுடி, தில்லைஸ்தானம் ஆகிய பகுதிகளை கடந்து திருவையாறுக்கு வந்தது.

    திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலைஊற்றி தீபாராதனை காண்பித்தனர். பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

    • கவர்னருக்கு சபா சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
    • 700-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு 176-வது ஆராதனை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதனை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இசை கலைஞர்கள் பாடல்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வந்தனர்.

    விழாவில் கடைசி நாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்பம் பகுள பஞ்சமி நாளை முன்னிட்டு காலை 5 மணிக்கு சவிதா ஸ்ரீராமின் புல்லாங்குழல் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு உஞ்சவிருத்தி பஜனை பாடியபடியும், மேளதாளங்கள் முழங்கவும் பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் விழா தொடங்கியது.

    முன்னதாக, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என். ரவி காலை 7.45 மணிக்கு விழாவை தொடங்கி வைத்தார். அவருக்கு சபா சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தியாகராஜர் சுவாமிகளை வழிப்பட்டு தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் விழா மேடையில் பேசினார். இசை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார்.

    இதில் தியாகபிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.கே. வாசன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து 9 மணிக்கு பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது.

    இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசிராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட 700-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று மாலை திருமெஞ்ஞானம் மீனாட்சிசுந்தரம், மன்னார்குடி வாசுதேவன் ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது.

    தஞ்சைக்கு கவர்னர் வருகையை முன்னிட்டு அவர் வந்து சென்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.
    • நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக நில எடுப்பு செய்யப்பட்டுள்ள கீழத்திருப்பூந்துருத்தி, கண்டியூர் கிராம விவசாயிகள் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள், சப்இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா, செந்தில்குமார், நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர், வருவாய் ஆய்வாளர் மற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதி கீழத்திருப்பூந்துருத்தி சுகுமார் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் விவசாய சங்க பிரதிநிதி சுகுமார் பேசும்போது திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.

    மேலும் நில எடுப்புக்கு நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    வட்டாட்சியர் பேசும்போது நில எடுப்பு சட்டத்தின்படியே நிலத்திற்கான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வழங்கிட இயலும் என தெரிவிக்கப்பட்டது.

    சுகுமாறன் தலைமையில் கலந்துகொண்ட விவசாயிகள் நில எடுப்பு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்பில் உள்ள நில எடுப்பு செய்த உத்தரவின் நகல் தேவை என்றும், அதன் பின்னரே விவசாயிகள் தரப்பில் உரிய முடிவு எடுத்திட இயலும் என்று தெரிவித்தனர்.

    வட்டாட்சியர் வருவாய் கோட்ட அலுவலரிடம் கலந்துபேசி இதற்கான முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவித்து. எதிர்வரும் 23-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    மரூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 3 ஏழைக் குடும்பத்தினருக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் இலவச வீடுகள் கட்டி வழங்கியது.

    திருவையாறு:

    திருவையாறு அருகே மரூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 3 ஏழைக் குடும்பத்தினருக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் இலவச வீடுகள் கட்டி நேற்று வழங்கியது. இந்நிகழ்ச்சிக்கு துரை.சந்திரசேகரன் எம்எல்.ஏ. தலைமை வகித்து புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

    எய்டு இந்தியாதொண்டு நிறுவனத்தின் இணைச்செயலாளர் முனைவர் தாமோ தரன் முன்னிலை வகித்தார்.

    இதில் திருவையாறு பேரூராட்சி துணைத்த லைவர் நாகராஜன்,ஒன்றியக் கவுன்சிலர்சிவஞானம், ஊராட்சி மன்றத்தலை வர்கள் மரூர் மணிகண்டன், சாத்தனூர் அகிலா சாமிநா தன், மகாராஜபுரம்சுஜாதா பாஸ்கர், எய்டு தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    • திருவையாறு ஆஞ்சநேயர் கோவிலில் சம்வத்சராபிஷேகம் நடந்தது.
    • மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலின் 7 ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. கணபதி ஹோமம் நடந்தது. மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா ஆராதனை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் வருசாபிஷேகம் தரிசனம் செய்து அருள் பெற்றார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இரவு பல வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு துளசி தல அர்ச்சனை செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் வீதிஉலா வந்தருளினார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயில் டிரஸ்டி குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

    ×