search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு வாதம்"

    ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் செய்தார். #Amrutha #Jayalalithaa
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.



    இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளடர் ராஜகோபாலன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரகாஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன், தீபக் சார்பில் எஸ்.எல்.சுதர்சனம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதன் விவரம் வருமாறு:-

    மனுதாரர் வக்கீல்:- என்.டி.திவாரி வழக்கில், ஒருவரை மரபணு சோதனைக்கு செல்லவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இதுபோன்ற சோதனைக்கு உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு. மரபணு சோதனையில் பெற்றோர் என்று நிரூபணம் ஆகவில்லை என்றால், அதனால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதமுடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் கூறியுள்ளது.

    தீபக் வக்கீல்:- மனுதாரர் அம்ருதாவுக்கு தற்போது 37 வயது. அவரிடம் கண்டிப்பாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பள்ளிச்சான்றிதழ் என்று ஏதாவது ஒரு ஆதாரமாவது இருக்கும். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை மட்டும் தாக்கல் செய்துள்ளார்.

    மனுதாரர் வக்கீல்:- இவர்களை பொறுத்தவரை சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என்ற இருவர் மட்டுமே வாரிசு. 3-வதாக பிறந்த சைலஜா என்பவரை இவர்கள் ஏற்கவில்லை. ஆனால் சந்தியாவுக்கு அவரது கணவர் இறந்த பின்னர் சைலஜா பிறந்ததால் அவரை பெங்களூருவில் வைத்து வளர்த்துள்ளார்.

    அரசு பிளடர்:- சைலஜா உயிருடன் இருந்தபோது இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தியதால் அவர் மீது ஜெயலலிதா கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

    மனுதாரர் வக்கீல்:- பின்னர் அந்த வழக்கை வலியுறுத்த விரும்பவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறியதால், அந்த அவதூறு வழக்கு தள்ளுபடியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. சைலஜாவுக்கும், சாரதி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதனால் தனக்கு பிறந்த குழந்தையை அவர்களது குழந்தையாக வளர்க்கும்படி ஜெயலலிதா ஒப்படைத்துள்ளார். அதேநேரம் இந்த உண்மையை சைலஜா சாகும்வரை அம்ருதாவிடம் சொல்லவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாரதி இறக்கும் தருவாயில் உண்மையை கூறியுள்ளார்.

    அதன்பின்னர் தான் ஜெயலலிதா தன் தாய் என்று அம்ருதாவுக்கு தெரியவந்துள்ளது. மனுதாரரின் பிரச்சினை இரண்டு தலைமுறைக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஒரு குழந்தை யாருக்கு பிறந்தது என்று அறிவியல் தான் உறுதியான முடிவை அறிவிக்கும். சட்டம் இதுபோல அறிவிக்க முடியாது. அதனால் மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் தான் மனுதாரர் யாருடைய மகள்? என்று தெரியவரும். அதனால் அம்ருதா, தீபா ஆகியோரது ரத்தமாதிரிகளை கொண்டு மரபணு சோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

    தீபக் வக்கீல்:- தீபக்கின் பாட்டி சந்தியா 1971-ம் ஆண்டு உயில் எழுதிவைத்துள்ளார். அதில் சைலஜாவின் பெயரே இல்லை.

    நீதிபதி எஸ்.வைத்தியநாதன்:- சைலஜா படித்துள்ளாரா? அவர் சந்தியாவின் மகள் என்று வெளியில் ஏன் சொல்லவில்லை?

    மனுதாரர் வக்கீல்:- அவர் நன்றாக படித்தவர். இந்துஸ்தான் விமான நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பல கேள்விகள் இவர்களது வாழ்க்கையில் உள்ளது.

    நீதிபதி:- ஆமாம், சைலஜா யார்? என்பதில் கேள்விக்குறி. அம்ருதா யார் மகள்? என்பதும் கேள்விக்குறி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்திலும் கேள்விக்குறி. எல்லாவற்றிலும் கேள்விக்குறி தான்.

    மனுதாரர் வக்கீல்:- அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பது உண்மை. எனவே மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும். அதில் நிரூபிக்கவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை மனுதாரர் சந்திக்க தயாராக உள்ளார்.

    அட்வகேட் ஜெனரல்:- இந்த வழக்கு ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்து தொடரப்பட்டுள்ளது. இதில் கூட்டுச்சதி உள்ளது. 1980-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி அம்ருதா பிறந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூலை 6-ந்தேதி நடந்த 27-வது ‘பிலிம்பேர்‘ விருது நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அந்த வீடியோ காட்சியை பாருங்கள். (இவ்வாறு கூறி அந்த வீடியோ காட்சியை ‘லேப்-டாப்பில்‘ நீதிபதிக்கு போட்டுக்காட்டினார்) நிறைமாத கர்ப்பிணியாக ஜெயலலிதா இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது எதுவுமே உண்மை இல்லை. அனைத்து விவரங்களும் நகைச்சுவையாக உள்ளது.

    1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவை சந்தித்தாகவும், போயஸ் கார்டனில் அதிக நாட்கள் வசித்ததாகவும் மனுதாரர் கூறுகிறார். ஆனால் ஒரு புகைப்படம் கூடவா அவருடன் எடுத்திருக்கவில்லை? 242 வினாடிகள் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசியதாக ரசீதை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த போனில் ஜெயலலிதாவிடம் தான் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

    நீதிபதி வைத்தியநாதன்:- இந்த வழக்கை பார்த்தாலே ஒரு சினிமா படம் போல் உள்ளது. ‘கிளைமாக்ஸ்’ காட்சியை நான் எழுத வேண்டும்.

    இவ்வாறு கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.  #Amrutha #Jayalalithaa  #tamilnews 
    ×