search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க தாமரை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூய அன்பிற்கு முன்னால், பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.
    • உலகில் மதிப்பிட முடியாத ஒரே விஷயம், அன்பு மட்டும்தான்.

    புத்தர் மீது பேரன்பு கொண்ட தொழிலாளி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் பணிக்கு சென்றால் தான், அவரது குடும்பம் ஒரு வேளை உணவை சாப்பிட முடியும். அப்படிப்பட்டவருக்கு திடீரென்று இரண்டு தினங்களாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவரது குடும்பம் பட்டினியால் வாடியது. அவரை நம்பி பணம் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. எப்படியாவது ஒரு வேலைக்குச் சென்று பணம் கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன் வீட்டை விட்டு வெளியேறி, நடந்து சென்று கொண்டிருந்தார்.

     அப்போது ஒரு குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூவை பார்த்தார். அந்த தாமரைப் பூ, வழக்கமான தாமரை மலரைப் போன்று இல்லாமல், மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அதன் மீது சூரியஒளி பட்டதும், தங்கத் தாமரை போல மின்னியது.

    அபூர்வமான தோற்றத்தில் அழகும் நிறைந்திருந்த அந்த மலரை பறித்து சந்தையில் விற்றால் ஏதாவது பணம் கிடைக்கலாம் என்று எண்ணிய அந்த தொழிலாளி, உடனடியாக குளத்தில் இறங்கி அந்த மலரைப் பறித்தார். பின்னர் அந்த மலரை எடுத்துக் கொண்டு சந்தையை நோக்கி பயணித்தார்.

    அப்போது ஒரு வியாபாரி, தொழிலாளியின் எதிரில் வந்தார். தொழிலாளியின் கையில் இருக்கும் தாமரைப் பூவைக் கண்ட அவர், "இதை எனக்கு விற்கிறாயா? நான் 10 பொற்காசுகள் தருகிறேன்" என்றார். ஆனால் ஏனோ அதை அந்த வியாபாரியிடம் கொடுக்க அந்த தொழிலாளிக்கு எண்ணம் இல்லை. மறுத்து விட்டு, மீண்டும் சந்தையை நோக்கி பயணப்பட்டார்.

    இப்போது வழியில் ஒரு செல்வந்தன் வந்தார். அவரும் அந்த தொழிலாளியின் கையில் இருந்த அழகான தாமரை மலரை பார்த்து விட்டு, "இதை எனக்குத் தா.. அதை என் வீட்டில் பாதுகாக்க விரும்புகிறேன். அதற்காக உனக்கு 50 பொற்காசுகளைத் தருகிறேன்" என்றார்.

    அதைப் பெற்றுக் கொண்டால், தன் குடும்பம் வெகு நாட்கள் பசியாறும் என்றாலும், ஏனோ தொழிலாளியின் உள்ளு ணர்வு 'வேண்டாம்' என்று தடுத்தது. செல்வந்தருக்கும் அந்த பூவை கொடுக்காமல் பயணத்தைத் தொடங்கினார்.

    மீண்டும் வழியில் வந்து அந்த மலரை ஒருவர் கேட்டார். அவர் அந்த நாட்டின் மன்னன். "நான் இந்த பூவை, நம் ஊருக்கு வந்துள்ள புத்தருக்கு கொடுக்க விரும்புகிறேன். எனவே இதை என்னிடம் கொடு. உனக்கு தேவையான பொன்னையும், பொருளையும் தருகிறேன்" என்றார்.

    மன்னன் புத்தரைப்பற்றி சொன்னதும், தொழிலாளியின் மனம் மகிழ்ந்தது. வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த தன் அன்புக் கடவுள், தன் ஊர் வந்திருப்பதை அறிந்ததும், அபூர்வமான தாமரையை தானே புத்தருக்கு வழங்க வேண்டும் என்று அவரது மனம் உந்தித்தள்ளியது. மன்னனுக்கும் மறுப்பு சொல்லிவிட்டு, நேராக புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார், தொழிலாளி.

    தன் கையில் இருக்கும் தாமரைப் பூவை ஒருமுறை பார்த்தார். பின்னர் தன் எதிரில் இருக்கும் புத்தரை பார்த்தார். இரண்டின் பிரகாசமும் ஒன்று போலவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால், எதையோ சாதித்துவிட்ட புத்தரின் முகத்தில், தங்க நிறத்திலான தாமரையை விடவும் கொஞ்சம் பிரகாசம் அதிகம் தான். இதனால், தான் கொண்டு வந்த மலரை, புத்தரின் காலடியில் சமர்ப்பித்தார். அவரின் திருவடிகளை தொட்டு வணங்கினார்.

    தொழிலாளியின் தோள்களை தொட்டு தூக்கி விட்ட புத்தர், "உன் வறுமை என்னவென்று உனக்கு நன்றாகத் தெரியும். அது எனக்கும் தெரியும். அப்படி இருக்கையில், இந்த மலருக்காக பலரும் உன்னிடம் அதிக விலை கொடுக்க முன்வந்தனர். ஒரு கட்டத்தில் மன்னனும் கூட இந்த மலரைக் கேட்டார். அவருக்கு நீ இந்த மலரைக் கொடுத்திருந்தால், உன் குடும்பம் இன்னும் சில தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் வகையிலான பொன், பொருள் கூட உனக்கு கிடைத்திருக்கக்கூடும். ஆனால் அவற்றை எல்லாம் தவிர்த்து, என் காலடியில் இந்த மலரை சமர்ப்பிக்க என்ன காரணம்?" என்று கேட்டார்.

     அதற்கு பதிலளித்த தொழிலாளி, "இந்த உலகத்தை அன்பாலும், ஞானத்தாலும் வென்றவர் நீங்கள். குளத்தில் இருந்து பறித்தபோது, இதை ஒரு மலராகவும், என் குடும்பத்தில் பசியை போக்கும் பொருளாகவும் தான் நான் பார்த்தேன். ஆனால் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும், இந்த மலர் அன்பால் நிரப்பப்பட்ட என் இதயமாக மாறிவிட்டது. என் இதயத்தை சமர்ப்பிக்க ஏற்ற இடம் உங்கள் திருவடியைத் தவிர வேறு எதுவும்' இல்லை" என்றார்.

    அவரை புத்தர் தன் மார்போடு இறுகத் தழுவிக்கொண்டார். "இனியவனே.. தூய அன்பிற்கு முன்னால், பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. இந்த உலகில் மதிப்பிட முடியாத ஒரே விஷயம், அன்பு மட்டும்தான். வறுமையில் இருந்தாலும் இந்த உலகத்தின் அரசன் நீதான். நிம்மதியாகப் போ.. உன் வாழ்க்கை வளமாகும்" என்று அருளாசி கூறி அனுப்பினார். அவர் சொன்னது போலவே பின்னாளில் அந்த தொழிலாளியின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது.

    ×