search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் சென்னை பசுமை சாலை"

    விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழித்து சாலை வசதி வேண்டாம் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #GreenWayRoad

    போளூர்:

    சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இதற்காக 1,100 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்த உள்ளது. போளூர் பகுதியில் ராந்தம், பெலாசூர், விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், அல்லியாளமங்கலம் காப்பு காட்டு பகுதியிலும் பசுமை வழிச் சாலை செல்கிறது.

    இந்த நிலையில் பசுமைச்சாலை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பா.ம.க. சார்பில் போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கருத்து கேட்டார். இதில் விளாப்பாக்கம், ராந்தம், பெலாசூர், பில்லூர், காம்பட்டு, ஆத்துரை, உலகம்பட்டு உள்பட பல கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில் விவசாயிகள் ‘நிலத்தை கையகப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் எங்களது மூதாதையர் நிலம் வருமா?, நிலம் இல்லை என்றால் கூலி வேலைக்கு சென்று எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது. குழந்தைகளின் கல்விக்கு என்ன செய்வது. சாலை வேண்டாம், நிலம் தான் வேண்டும்’ என்று ஒட்டு மொத்தமாக கண்ணீர் மல்க தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் மக்கள் கேட்கும் திட்டத்தை தான் கொண்டு வர வேண்டும். 8 வழி பசுமைச் சாலை வேண்டும் என்று யார் கேட்டார்கள். சென்னை மக்களும் கேட்கவில்லை, சேலம் மக்களும் கேட்கவில்லை. சென்னையில் இருந்து சேலத்திற்கு 3 வழியாக சாலைகள் உள்ளன. சென்னை- சேலம் ஊளுந்தூர்பேட்டை வழியாகவும், வாணியம்பாடி வழியாகவும், கிருஷ்ணகிரி வழியாகவும் செல்லலாம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பசுமைச்சாலை திட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்களிடம் சரி, யாரிடமும் கருத்து கேட்பது இல்லை. மக்கள் சொத்தை அபகரிக்கிறது. பசுமையை அழிக்கிறது. சென்னை- சேலம் சாலைகளை அகலப்படுத்தினாலே போதும், புதிய பசுமைசாலை தேவையில்லை. விவசாயிகளாகிய உங்கள் கருத்துகளை பதிவு செய்து அறிக்கை தயாரித்து மத்திய, மாநில அரசு நெடுஞ்சாலைத் துறையிடம் அளித்து நல்ல தீர்வு கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad

    சேலம் பசுமை வழி சாலை விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #GreenWayRoad

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில் புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

    ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     


    ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GreenWayRoad

    8 வழி பசுமை சாலையில் தேசிய நீர்வழி பாதையும் அமைத்து அதை அந்தந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் இணைக்க அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #FarmersComment #GreenWayRoad
    பாப்பரெட்டிப்பட்டி:

    சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5 ஆயிரம் ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் அரசு நிலம் ஆயிரம் ஹெக்டேர் ஆகும். 4 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வழியாக இந்த பாதை செல்லும். சேர்வராயன், கல்வராயன் மலை உள்பட 8 மலைகள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த சாலை அமைக்கும் பகுதியில் 120 ஹெக்டேர் வனப்பகுதியும் வருகிறது. இந்த சாலையில் மொத்தம் 23 பெரிய பாலங்களும், 156 சிறு பாலங்களும், 9 மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலங்களுக்கு கீழ் 22 வாகன கீழ் வழிச்சாலையும், 2 பாலங்களுக்கு கீழ் இன்னொரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. வனப் பகுதியில் 3 சுரங்கப் பாதைகளும், 8 சுங்க சாவடிகளும் அமைக்கப்படும்.

    லாரிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பசுமை வழி சாலையில் தேசிய நீர்வழி பாதையும் அமைத்து அதை அந்தந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் இணைக்க அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மழைக்காலங்களில் நீர்வழிப்பாதையில் செல்லும்போது அவற்றை ஏரி, குளங்களில் தேக்கினால் விவசாயத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் கூறினர்.

    கர்நாடக அரசு அணைகளில் தேங்கும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்பி வருகிறது. அதுபோல தமிழக ஆறுகளில் இருந்து விணாக கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் சேமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #FarmersComment #GreenWayRoad
    தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 957 ஏக்கர் நிலத்தில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது. #GreenWayRoad

    தருமபுரி:

    சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை சாலை ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகியமாவட்டங்களில் நிலங்களை அளவிட்டு கற்களை நடும் பணி நடந்து வந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர்தூரத்திற்கு நிலங்களை அளவிடும்பணி நடந்தது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருளப்பட்டியில் தொடங்கி கோபி நாதம்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, முக்கா ரெட்டிப்பட்டி, சாமியாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, சின்னமஞ்சவாடி, கோம்பூர், பெரியமஞ்சவாடி ஆகிய பகுதிகளில் இந்த பணி கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது.

    விவசாயிகள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் பதட்டம் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று நிலத்தை அளந்தாலும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்த நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளை சம்மதிக்க வைத்தனர்.

    நில அளவிடும் பணி நேற்று மாலையுடன் முடிந்தது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 957 ஏக்கர் நிலத்தில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது.இனி அடுத்தக்கட்டமான சர்வே எண்களை வைத்து சரி பார்ப்பார்கள்.

    அதன்பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்டு திட்டப்பணிகள் தொடங்கும். #GreenWayRoad 

    8 வழி பசுமை சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad

    பாப்பிரெட்டிப்பட்டி:

    8 வழி சாலைக்கு நிலம் அளவிடும் பணிகள் தருமபுரி மாவட்டம் மஞ்சவாடி கணவாய் பகுதியில் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு நிலம் அளவிடும் பணிகளை பார்வையிட்டார்.

    அதன்பிறகு அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    இந்த திட்டம் தேவையற்றது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரன் கருத்து கூறி இருக்கிறார். இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயன்தராது என்றும், இந்த திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார். அவரது கருத்தையே நானும் கூறுகிறேன்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் முலம் விவசாயம் செய்து வருகின்றனர். மஞ்சவாடி பகுதியில் தென்னை, வாழை மற்றும் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பண பயிர்களால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. எனவே விவசாயிகள் வயிற்றில் அடித்து அவர்களது நிலங்களை பறித்து இந்த பசுமை வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும். 8 வழி திட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்ல சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

     


    சேலத்தில் இருந்து சென்னை செல்ல ஏற்கனவே விழுப்புரம் வழி சாலை, தருமபுரி வழி சாலை உள்ளது. மேலும் அரூர் சாலையும் உள்ளது. இந்த சாலைகளை விரிவுப்படுத்தி சாலைகளை சரி செய்தாலே போதும்.

    ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு சாலைகள் முடிக்கப்படாமல் பாதியில் உள்ளது. அவைகளை இந்த அரசு பணி நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும். அதை விடுத்து விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிப்பது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாகவின் கொள்கைக்கு எதிரானது.

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அம்மா மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தார். அந்த திட்டங்களை துணிச்சலுடன் தடுத்து நிறுத்தினார். உதாரணமாக கெயில் திட்டம் ஆகும். ஆனால் தற்போது நடக்கும் எடப்பாடி அரசு தூத்துக்குடி துப்பாக்கி சூடு படுகொலைக்கு பின்பு போராடும் மக்களை மிரட்டி அச்சுறுத்தி திட்டங்களை திணிக்கிறது. எனவே இந்த அரசை மக்களும், விவசாயிகளும் எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தை அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து அரசு பரிசீலக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad

    பசுமை வழிச்சாலைக்கு புதிய நிபந்தனைகள் விதித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #GreenWayRoad

    சென்னை:

    சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

    தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் தொடங்கும் இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக சேலம் புறநகர் பகுதி வழியாக சென்று இணைகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்ராயன் மலை, சேலம்-தர்மபுரியில் சேர்வராயன் மலைப்பகுதியில் இந்த சாலை செல்கிறது. இந்த சாலைக்காக 5 மாவட்டங்களிலும் விவசாய நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்படுகின்றன.

    இந்த சாலையில் வனப்பகுதி பாதிக்கப்படும், ஏராளமான மரங்களும் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் இயற்கை விவசாயமும் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஆங்காங்கே விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட கலெக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.


    அரசியல் கட்சிகளும் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு பதிலாக அந்த நிதியை கொண்டு ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்றார்.

    இதற்கிடையே சேலம்- சென்னை பசுமை வழிச் சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் வனம்- சுற்றுச்சூழல் துறை அமைச் சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய நிபந்தனைகள் விதித்துள்ளது.

    இது சம்பந்தமாக திட்டத்தின் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டு இயக்குனர் ரகு குமார் கோடாலி சென்னை கிண்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை-சேலம் 277 கி.மீ. தூர பசுமை வழி சாலைக்கு வனம்-சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பான முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வனம்- சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் மேற் கொள்ளப்படும்.


    மேலும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். பொதுமக்கள் எந்த வகையில் பிரச்சினைகள் எழுப்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்.

    மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாக திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அறிக்கை தாக்கல் செய்து அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னை- பெங்களூர் இடையே 265 கி.மீ. தூர எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை நிறைவேற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருந்தது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் கர்நாடகத்தில் பொது மக்கள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் நிறைவேற்ற முடியாமல் நிற்கிறது.

    இதற்கு பதிலாகத்தான் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை நிறைவேற்றப்பட்ட பின்பு 2-வது கட்டமாக கோவை வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு கேரள மாநிலம் கொச்சி வரை நீடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் இந்த திட்டத்துக்கு ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பொதுமக்கள் கருத்து கேட்ட பின்பே நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.
    #GreenWayRoad

    ×