search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி சாலை - விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும் - பழனியப்பன்
    X

    8 வழி சாலை - விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும் - பழனியப்பன்

    8 வழி பசுமை சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad

    பாப்பிரெட்டிப்பட்டி:

    8 வழி சாலைக்கு நிலம் அளவிடும் பணிகள் தருமபுரி மாவட்டம் மஞ்சவாடி கணவாய் பகுதியில் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு நிலம் அளவிடும் பணிகளை பார்வையிட்டார்.

    அதன்பிறகு அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    இந்த திட்டம் தேவையற்றது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரன் கருத்து கூறி இருக்கிறார். இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயன்தராது என்றும், இந்த திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார். அவரது கருத்தையே நானும் கூறுகிறேன்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் முலம் விவசாயம் செய்து வருகின்றனர். மஞ்சவாடி பகுதியில் தென்னை, வாழை மற்றும் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பண பயிர்களால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. எனவே விவசாயிகள் வயிற்றில் அடித்து அவர்களது நிலங்களை பறித்து இந்த பசுமை வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும். 8 வழி திட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்ல சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

     


    சேலத்தில் இருந்து சென்னை செல்ல ஏற்கனவே விழுப்புரம் வழி சாலை, தருமபுரி வழி சாலை உள்ளது. மேலும் அரூர் சாலையும் உள்ளது. இந்த சாலைகளை விரிவுப்படுத்தி சாலைகளை சரி செய்தாலே போதும்.

    ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு சாலைகள் முடிக்கப்படாமல் பாதியில் உள்ளது. அவைகளை இந்த அரசு பணி நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும். அதை விடுத்து விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிப்பது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாகவின் கொள்கைக்கு எதிரானது.

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அம்மா மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தார். அந்த திட்டங்களை துணிச்சலுடன் தடுத்து நிறுத்தினார். உதாரணமாக கெயில் திட்டம் ஆகும். ஆனால் தற்போது நடக்கும் எடப்பாடி அரசு தூத்துக்குடி துப்பாக்கி சூடு படுகொலைக்கு பின்பு போராடும் மக்களை மிரட்டி அச்சுறுத்தி திட்டங்களை திணிக்கிறது. எனவே இந்த அரசை மக்களும், விவசாயிகளும் எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தை அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து அரசு பரிசீலக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad

    Next Story
    ×