search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனம் பிரசாதம்"

    • உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்றே அழைத்து வந்தனர்.
    • கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.

    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணிய தலம் தான் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.

    அந்த காலத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்றே அழைத்து வந்தனர். தற்போது உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வேப்பமரக்காற்று மணமணக்க, பனைமரக்காற்று சலசலக்க வெண்மணல்கள் கம்பளம் விரிக்க, கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.

    பொதுவாக சிவலிங்கத்தின் மேற்பாகம் தான் சிவபெருமான். லிங்கம் பொருந்தி இருக்கக்கூடிய ஆவுடை பாகம் அம்பாளுடையது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வீற்றிருக்ககூடிய உவரி சுயம்புலிங்க சுவாமிக்கு ஆவுடை பாகம் இல்லை. ஆவுடை பாகம் இல்லாத இந்த சிவபெருமானை ஆதிபரம்பொருள் என்ற பொருளில் பெரியசாமி என்று அழைத்தனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் உலகையே காக்கும் பரமேஸ்வரராகிய சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக வந்தார். தொடக்க காலத்தில் உவரி மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக்கொடிகள் அதிகமாக படர்ந்து இருந்ததால் இந்த பகுதியை கடம்பவனம் என்று அழைத்தனர்.

    ஒரு சமயம் கோட்டபனை என்ற ஊரில் இருந்து பால் விற்பதற்காக தினமும் உவரி வழியாக செல்வது வழக்கம். தற்போது சுவாமி இருக்கக்கூடிய இடத்தின் அருகே வரும்போது கால் இடறிவிழுந்துகொண்டே இருந்தாராம். எனவே கால் இடற காரணமாக இருந்த கடம்பவேரை வெட்டி வீழ்த்தும் போது ரத்தம் பீரிட்டு வந்தது. அங்கிருந்த அனைவரும் பார்த்து பயந்து போனார்கள்.

    உடனே அசரிரீயாக தான் இங்கு வீற்றிருப்பதாகவும், இங்கு தனக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் சொன்னார். உடனே அங்கு இருக்கக்கூடிய பக்தர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அந்த இடத்தை தோண்டினார்கள். அப்போது அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவலிங்கத்தின் தலையில் வெட்டுபட்டு ரத்தம், வழிந்துகொண்டு இருந்தது.

    அப்போது மீண்டும் ஒரு அசரிரீ ஒலித்தது. அன்பர்களே... ரத்தம் வழியும் இடத்தில் சந்தனக்கட்டையால் சந்தனம் அரைத்து அந்த சந்தனத்தை வெட்டுபட்ட இடத்தில் பூசுங்கள். அப்போது ரத்தம் வழிவது நின்றுவிடும். உங்கள் பல தலைமுறைகளும், நம்மை அண்டியவர்களும் நோய்நொடிகள் அண்டாது வாழ்வார்கள் என்று சொன்னது.

    அதன்பிறகு அடியவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதேஇடத்தில் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினர். முதலில் பனை ஓலையில் கோவில் எழுப்பினார்கள். அதன்பிறகு மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு முன்பு முதலில் காவல் தெய்வமாக இருக்கக்கூடிய சிரட்டை பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வீற்றிருக்கக்கூடிய சுடலைமாடன் சுவாமிக்கு சிதறுதேங்காய் உடைத்த பிறகு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    உவரி சுயம்புலிங்க சுவாமியின் கோவிலின் தென்மேற்கில் கன்னிவிநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் முதலில் கடலில் நீராடிவிட்டு பின்பு ஆலயத்தின் பின்புறத்தில் இருக்கக்கூடிய தெப்பத்தில் நீராடிய பின்னர் கன்னி விநாயகரை வழிபட்ட பின்னர் தான் மூலவரான உவரி சுயம்புலிங்க சுவாமியை வழிபட வேண்டும்.

    இங்கு வரக்கூடிய ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணிய தடைசெய்யப்பட்டுள்ளது. கன்னிவிநாயகருக்கு கண்டிப்பாக சிதறுதேங்காய் உடைக்க வேண்டும். உவரி சுயம்புலிங்க சுவாமியின் சன்னதியில் சந்தனம் தான் பிரசாதமாக வழங்கப்படும். அதுவும் உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சாற்றிய சந்தனம் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் 48 நாட்கள் தங்கி இருந்து கடலில் நீராடி ஈசனாகிய சிவபெருமானை வழிபட்டு கருவறை தீபத்திற்கு நெய் சேர்த்து அங்கு பிரசாதமாக தரக்கூடிய சந்தனத்தை வாங்கி உண்டுவந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். அடுத்ததாக உவரி சுயம்புலிங்க சுவாமியின் கோவிலின் வெளிப்புறத்தில் தனி சன்னதியில் முன்னோடி சுவாமி இருக்கிறார்.

    இவர் பைரவரின் சொரூபமாக அருள்பாலிக்கிறார். முன்னோடி சுவாமி கோவிலை அடுத்து தனி கோவிலில் பிரம்மசக்தி அம்மன் அருள்பாலிக்கிறார். பிரம்மசக்தி அம்மனை பஞ்சமி, புதன்கிழமை, மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, விசாகம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களில் கருவறை தீபத்திற்கு நல்லெண்ணெய் ஊற்றி வெண் தாமரை மலர்கொண்டு பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    பிரம்மசக்தி சன்னதியை தொடர்ந்து சிவனணைந்தபெருமாள் சன்னதியும் உள்ளது. சிவபெருமானுடன் பெருமாள் பெண் உருவம் கொண்டு அணைந்ததால் சிவனணைந்த பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிவனணைந்தபெருமாள் சன்னதியில் உள்ள மரத்தின் கிளையில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

    அதன்பிறகு பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் போன்ற சன்னதிகளும் இந்த கோவிலில் இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய இசக்கி அம்மனுக்கு எண்ணெய் மஞ்சனம் கலவையை சாற்றி வேண்டுதல் வழிபாடு செய்கிறார்கள். எண்ணெய் மஞ்சனம் என்பது இசக்கியம்மனுக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி சாற்றி வழிபடுவது ஆகும்.

    ஆலயத்தின் மேற்கு திசையில் ஆலயடி சாஸ்தா கோவில் உள்ளது. இங்கேயும் கண்டிப்பாக சென்று வழிபட வேண்டும். இங்கே வன்னிமரத்தின் அடியில் பூரணபுஸ்கலையுடன் சாஸ்தா அருள்பாலிக்கிறார். இங்கு சித்ராபவுர்ணமி, பங்குனி உத்திரம், ஆடி அமாசாசை, விசாக நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் எல்லோரும் பொங்கலிட்டு தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் மாதாந்திர விழா என்ற சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று இரவு வாகனபவனி நடக்கும். தைப்பூச நாளில் இங்கு தேரோட்டம் நடைபெறும். தேரோட்டம் முடிந்து மறுநாள் பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவு தெப்பத்திருவிழாவு சிறப்பாக நடைபெறும்.

    அதுமட்டுமில்லாமல் பிரதோசம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளிலும், வாராந்திர திங்கட்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் உண்டு. பொதுவாக சிவன் கோவில்களில் சூரியபூஜை ஓரிரு நாட்கள் இருக்கும். ஆனால் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் இங்கு சூரியபூஜை நடக்கிறது.

    அதாவது மார்கழி மாதம் முழுவதும் இந்த தலத்தில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை சூரிய பகவான் வழிபடுகிறார். சூரிய திசை நடக்கக்கூடியவர்கள் மார்கழி மாதம் காலையில் சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு துன்பங்கள் எல்லாம் நீங்கி வாழ்வில் வளம் வீச வளமும், நலமும் பெறுகின்றனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் காலை 6 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    ×