search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோத்தபய ராஜபக்சே"

    • கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • கோத்தபய ராஜபக்சே 28-ந்தேதிவரை மட்டுமே சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும்.

    கொழும்பு :

    போராட்டக்காரர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 13-ந் தேதி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். மறுநாள், அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார்.

    அத்துடன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டை சிங்கப்பூர் அரசு வழங்கி உள்ளது. எனவே, அவர் 28-ந் தேதிவரை மட்டுமே அங்கு தங்கி இருக்க முடியும்.

    இந்நிலையில், நேற்று கொழும்பு நகரில் பேட்டி அளித்த இலங்கை போக்குவரத்து மந்திரியும், மந்திரிசபை செய்தித்தொடர்பாளருமான பந்துல குணவர்த்தனாவிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அவர் கூறியதாவது:-

    கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவோ அல்லது மறைந்து வாழ்வதாகவோ நாங்கள் கருதவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பி வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது பற்றியும் நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு பந்துல குணவர்த்தனா, ''அத்தகைய சூழ்நிலை உருவானால், கோத்தபய ராஜபக்சேவுக்கு எந்த தீங்கும் நேராதவாறு நாட்டில் உள்ள பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்'' என்று கூறினார்.

    தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வக்கீல்கள் சிலர், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்துக்காக கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக கைது செய்யுமாறு சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலிடம் குற்றவியல் புகார் கொடுத்துள்ளனர்.

    இதுவரை அதிபராக இருந்ததால், கோத்தபய ராஜபக்சேவுக்கு சட்ட பாதுகாப்பு இருந்தது. இப்போது சட்ட பாதுகாப்பு இல்லாததால் அவர் மீது புகார்கள் அளிக்கப்படுகின்றன.

    • கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.
    • கோத்தபய ராஜபக்சே கடந்த 14-ந் தேதி சிங்கப்பூருக்கு சென்றார்.

    சிங்கப்பூர்:

    இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 13-ந் தேதி இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கு எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூர் சென்றார். தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும், அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம் கூறியிருப்பதாவது:-

    தனிப்பட்ட பயணமாக கோத்தபய ராஜபக்சே கடந்த 14-ந் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.

    பொதுவாக இலங்கையை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள்வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்படும் அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

    இதற்கிடையே, சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மக்கள், இலங்கையில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஆட்சி மாற்றத்துடன் உறுதியான கொள்கை மாற்றமும் வர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிலர் ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அதற்கான பணத்தை சேமித்து, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு சைக்கிள் பயன்படும் என்பதால், வேறு சிலர் சைக்கிள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். நம்பகமான நபர்கள் மூலம் உதவி அனுப்புவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

    • கோத்தபயவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கப்பூரில் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • சட்டத்தை மீறி யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சிங்கப்பூர் போலீஸ் எச்சரித்துள்ளது.

    சிங்கப்பூர் :

    சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூருக்கு கடந்த வியாழக்கிழமை சென்றடைந்தார். அங்கிருந்தபடியே வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு நெருப்பு கொழுந்துவிடத் தொடங்கியுள்ளது. அவரது வருகைக்கு எதிராக ஓர் ஆன்லைன் மனுவை உருவாக்கியுள்ள தொழிலதிபர் ரேமண்ட், கோத்தபய மீது சிங்கப்பூர் போலீசில் பணமோசடி புகாரும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

    அவரது ஆன்லைன் மனுவுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோத்தபயவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபு ராமச்சந்திரன் என்பவரின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த சனிக்கிழமை அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    கோத்தபயவை அனுமதித்த சிங்கப்பூரின் முடிவை இலங்கையர்கள் பலரும் எதிர்த்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோத்தபய வருகைக்கு எதிராக, சட்டத்தை மீறி யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சிங்கப்பூர் போலீஸ் எச்சரித்துள்ளது.

    அதேவேளையில், தனிப்பட்ட பயணத்தை விரைவாக முடித்துக்கொண்டு கிளம்புமாறு கோத்தபயவை சிங்கப்பூர் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • நாட்டை விட்டு சென்ற கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தார்.
    • மாலத்தீவில் கோத்தபயவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.

    கொழும்பு:

    முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. அதிபர் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. 13ம் தேதி ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலத்தீவு சென்ற அவர் அங்கிருந்தபடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தார். அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், அவசர நிலையை பிரகடனம் செய்தார் ரணில்.

    இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே மாலத்தீவில் கோத்தபயவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து தனிப்பட்ட பயணமாக அவர் சிங்கப்பூரில் நுழைய அனுமதித்துள்ளதாகவும், அவர் அடைக்கலம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.
    • மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

    இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

    இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறியதால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பியதால், இன்று சிங்கப்பூர் செல்வதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

    தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது.
    • மாலத்தீவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டுள்ளார்.

    மக்கள் போராட்டத்தால் ஆட்சியை இழந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டுவெளியேறியதும் ராணுவத்தின் பாதுகாப்பில் கொழும்பு புறநகரில் தங்கி இருந்தார்.

    அங்கிருந்து முதலில் அவர் துபாய் செல்ல முடிவு செய்தார். ஆனால் விமான நிலையத்திலும், கடற்படை தளத்திலும் மக்கள் குவிந்ததால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவரால் தப்பி செல்ல இயலவில்லை. இதற்கிடையே சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகளிடம் அவர் உதவி கேட்டார். ஆனால் அந்த நாடுகளில் இருந்து சாதகமான பதில் வரவில்லை.

    கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அமெரிக்க குடியுரிமையை திரும்ப பெற்றார். என்றாலும் அமெரிக்க அரசை தொடர்பு கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சி கேட்டார்.

    ஆனால் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை பரிசீலிக்க கூட அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கொழும்பில் இருந்து வெளியேற எந்த ஒரு உதவியும் செய்ய இயலாது என்று அமெரிக்காவும் கைவிரித்தது. இதனால் எப்படி நாட்டை விட்டு வெளியேறுவது என்று கோத்தபய குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

    சொந்த கட்சியிலும், ராணுவத்திலும் ஒரு பிரிவினர் தனக்கு எதிராக செயல்படுவதை கண்கூடாக பார்த்த கோத்தபய ராஜபக்சே உயிருடன் தப்ப முடியுமா என்று தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். கொழும்பு புறநகரில் அவர் ஒரே இடத்தில் தங்காமல் ரகசிய இடங்களுக்கு மாறிக் கொண்டே இருந்தார்.

    ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் அவரை சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். மக்கள் போராட்டத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கொழும்பில் அவர் படாதபாடுபட்டார். எனவேதான் வெளி நாட்டுக்கு தப்பி செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

    அமெரிக்கா உதவ மறுத்த நிலையில் அடுத்து இந்தியாவின் உதவியை ராஜபக்சே நாடினார். விமானம் மூலம் தப்புவது கடினம் என்பதை உணர்ந்த அவர் கடல் வழியாக தப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். கப்பல் மூலம் இந்தியா வந்து பிறகு துபாய் செல்ல அனுமதி கேட்டார்.

    ஆனால் அதற்கு இந்திய வெளியுறவுத்துறை சாதகமான பதில் சொல்லவில்லை. இதையடுத்து சரக்கு விமானத்தில் இந்தியா வருவதாகவும், இந்தியாவில் இருந்து தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசுக்கு தூதுவிட்டார்.

    அவரது இந்த கோரிக்கையையும் இந்தியா ஏற்கவில்லை. இதனால் உள்ளூர் அரசியல்வாதிகளிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு விமானத்தை வாங்கி கொண்டு மாலத்தீவு சென்று சேர்ந்திருக்கிறார்.

    இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சேவை அந்த நாட்டு ராணுவத்தினர் ரகசிய தீவு ஒன்றுக்கு அழைத்து சென்று உள்ளனர். அந்த தீவில் உள்ள பங்களாவில் கோத்தபய ராஜபக்சேவும், அவரது மனைவியும் தங்கி உள்ளனர்.

    மாலத்தீவு மக்களுக்கு இன்று காலை இந்த தகவல் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலத்தீவில் கணிசமான அளவுக்கு இலங்கை தமிழர்கள் உள்ளனர். அவர்களும் கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு அதிருப்தி வெளியிட்டனர்.

    இதற்கிடையே மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தையூப் சாஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது. அவரை உடனே வெளியேற்ற வேண்டும்" என்று கூறி உள்ளார்.

    மாலத்தீவில் உள்ள சில கட்சி தலைவர்கள் கூறுகையில், "கோத்தபய ராஜபக்சேவுக்கு அகதி அந்தஸ்து வழங்ககூடாது" என்று வலியுறுத்தி உள்ளனர். மாலத்தீவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டுள்ளார்.

    • மாலத்தீவுக்கு செல்ல விரும்பினால் அதை மறுத்திருக்க முடியாது எனவும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    • சபாநாயகர் நஷீத்தின் கோரிக்கையின் பேரில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோத்தபயவுடன் 13 பேர் ஏஎன்32 விமானத்தில் மாலத்தீவு சென்றதாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பிச் செல்வது தொடர்பாக மாலத்தீவு பாராளுமன்ற சபாநாயகரும் முன்னாள் அதிபருமான மொஹமட் நஷீத் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ராஜபக்சே இன்னும் இலங்கையின் அதிபராக இருக்கிறார். அவர் ராஜினாமாவோ அல்லது வாரிசுக்கு தனது அதிகாரங்களையும் ஒப்படைக்கவில்லை என்றும் அதனால் அவர் மாலத்தீவுக்கு செல்ல விரும்பினால் அதை மறுத்திருக்க முடியாது எனவும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மாலத்தீவில் இராணுவ விமானத்தை தரையிறக்குவதற்கான கோரிக்கைகள் மாலத்தீவில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டதாகவும், பின்னர் சபாநாயகர் நஷீத்தின் கோரிக்கையின் பேரில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கோத்தபய தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
    • மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் சென்றார்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.

    போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். சில போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே தங்கி உள்ளனர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது. இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே 13ந்தேதி ராஜினாமா செய்வார் என அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்திருந்தார்.

    அதிபர் கோத்தபயா இலங்கையில் இருந்து வெளியேறியதாக நேற்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது உண்மையில்லை என்றும் கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.

    இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
    • கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

    அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினார்கள்.

    மக்கள் போராட்டம் எழுச்சியாக மாறியதால் கடந்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பு ஏற்றார். என்றாலும் பொருளாதார குழப்பத்தை சீர்படுத்த முடியவில்லை.

    இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று முன்தினம் கொழும்பில் லட்சக்கணக்கில் திரண்டனர். அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்து கைப்பற்றினார்கள். ஜனாதிபதி அலுவலகமும் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    மக்கள் கொலை வெறியுடன் திரண்டு வந்ததால் உயிர் பிழைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்களாவை காலி செய்து விட்டு தப்பி ஓடினார். அவர் வெளிநாட்டுக்கு ஓடி இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், "ஏற்கனவே அறிவித்த படி ஜூலை 13-ந்தேதி பதவியில் இருந்து விலகுவேன்" என்று தெரிவித்து உள்ளார்.

    பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறினாலும் கொழும்பில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். 13-ந்தேதி வரை நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட பிரதிநிதிகள் கெடுவிதித்துள்ளனர்.

    கொழும்பு காலி முகதிடலில் இன்று காலை நிருபர்களை சந்தித்தபோது அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டனர். ஜனாதிபதிக்கு பதில் பிரதமர் ஆட்சி அதிகாரத்தை செய்ய வேண்டும் என்று விதி இருந்தாலும் அதை அனுமதிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

    மேலும் ரணில் விக்கிரமசிங்கேவும் உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகிய பிறகு அனைத்து கட்சிகளை யும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புதிய ஆட்சியை உருவாக்க சிலர் நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.

    இது தவிர இலங்கையில் அமைய உள்ள இடைக்கால அரசாங்கம் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதற்கு மாறாக சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்க எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் முயற்சி செய்தால் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.

    அனைத்து கட்சிகள் கொண்ட ஆட்சி அமைந்தால் அது இன்னொரு ஊழலுக்கு வழிவகுத்து விடும் என்றும் அதற்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

    போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்த தோடு புதிய ஆட்சி தொடர்பாகவும் நிபந்தனைகள் விதிப்பதால் இலங்கையில் மாற்று அரசு அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. புதிய அரசு எப்போது எப்படி அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

    இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே கொழும்பில் இல்லாததால் அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாக பொதுமக்கள் அதிபர் மாளிகையில் தங்கியிருந்து பொழுதை போக்கினார்கள்.

    • பொதுமக்கள் போராட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது.

    கொழும்பு :

    விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் வெற்றிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கொண்டாடிய இலங்கை சிங்கள மக்கள், இப்போது நாட்டின் நிலவுகிற வாழ்வாதார நெருக்கடிக்கு அதே ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கூறி போர்க்கொடி உயர்த்தி இருப்பது வரலாற்று திருப்பமாக மாறி இருக்கிறது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் ஒட்டிக்கொண்டிருந்தது, அவரது குடும்பத்தை நெருப்பாற்றில் தள்ளி விடும், மக்கள் போராட்டம் உச்சம் தொடும் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழங்கியதும், தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்தபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலிலும், ராணுவத்தினரின் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றிலும் 102 பேர் படுகாயம் அடைந்து கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக்கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேயும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து, பிரதமர் பதவி ஏற்று 2 மாதங்கள் கூட முழுமை அடையாத நிலையில் ரணில் விக்ரம சிங்கே பதவி விலகுகிறார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் நாளை மறுதினம் (13-ந் தேதி) ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அதிபருடன் தொடர்பில் உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

    அதிபர் பதவியை கோத்தபய புதன்கிழமை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய முழு கடையடைப்பில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் நேற்று கூட்டாக நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளன.

    பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் மாளிகைக்கு போராட்டக்காரர்களில் சிலர் தீ வைத்ததில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் வீடியோ பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டது. அந்த வீடியோ பதிவு, ரணில் விக்ரம சிங்கேயின் மாளிகை எரிந்த காட்சிகளையும், சேதம் அடைந்த செடான் கார், ஓவியங்கள், கலைப்படைப்புகள் மாளிகை மற்றும் அதன் வளாகத்தில் சிதறிக்கிடந்ததையும் காட்டின.

    பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மாளிகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 3 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேலும் பலர் கைதாவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதமர் மாளிகை தீ வைக்கப்பட்டிருந்தபோது அந்த பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், அதுபற்றி விசாரணை நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில், இலங்கை மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கு அல்லாடுகின்ற சூழ்நிலையில், அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போராட்டக்காரர்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பணத்தை அவர்கள் கைப்பற்றினர். மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் சிக்கியதாகவும், அந்த பணத்தை உள்ளூர் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    நேற்று 2-வது நாளாக அதிபர் மாளிகைக்கு மக்கள் அலை, அலையாக வந்து, ஆர்ப்பரித்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாதவரையில், அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறப்போவதில்லை என்பதில் போராடும் மக்கள் உறுதியுடன் உள்ளனர். இதுபற்றி மாணவர் தலைவர் லகிரு வீரசேகர கூறும்போது, "எங்கள் போராட்டம் ஓய்ந்து விடவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகிச்செல்கிறவரையில் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்" என தெரிவித்தார். பொதுமக்கள் போராட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இலங்கையின் முதலீட்டுத்துறை மந்திரி தம்மிகா பெரைரா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள் அவர் பதவி விலகி உள்ளார். இதேபோன்றுஇந்தியா அனுப்பிய யூரியா உரத்தை ஏற்றுக்கொண்ட சிறிது நேரத்தில் விவசாய மந்திரி மகிந்த அமரவீரா பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்காரா, பந்துல குணவர்த்தனே ஆகிய 3 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி விலகினர்.

    இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது. இந்த நிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ராணுவம் நேற்று கேட்டுக்கொண்டுள்ளது. இதையொட்டி ராணுவ தளபதி சவேந்திர சில்வா வெளியிட்ட அறிக்கையில், "தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகி உள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து இலங்கை மக்களும் ஆயுதப்படைகள் மற்றும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே எங்கே ஓட்டம் பிடித்தார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. அவர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தனி விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியதாக ஒரு தகவல் வெளியானது. மற்றொரு தகவல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பல்களில் கடற்படை பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தது.

    ஆனால் இப்போது அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் 'லிப்ட்' மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பதுங்கு குழியை அதிபர் மாளிகை சிறப்பு பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர். எனவே இந்த பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது.

    • ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
    • மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார்.

    ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே குடும்பத்தினர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், இனி தங்களை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார்கள்.

    அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலும், தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலும் அமர்ந்து கொண்டு ஆட்டம் போட்டனர். அவர்களது குடும்பத்தினர் மந்திரிகளாகவும், அரசின் உயர்துறைகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகார மையங்களாகவும் மாறி இருந்தனர்.

    அவர்கள் செய்த தவறுகளும், சொத்து குவிப்பும் மிக விரைவில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து இலங்கை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அதிபர் கோத்தபய ராஜபக்சே மிகப்பெரிய தவறு ஒன்றை செய்தார்.

    அன்னிய செலாவணி விஷயத்தில் தவறான முடிவுகளை எடுத்தார். அதோடு அரசின் அனைத்து துறைகளிலும் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு தனக்கு நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளை நியமித்தார்.

    ராணுவ அதிகாரிகளை அவர் மலைபோல நம்பி பல அதிகாரங்களை ஒப்படைத்தார். ஆனால் அந்த ராணுவமே அவருக்கு எதிராக திரும்பியதால் தான் ராஜபக்சே குடும்பத்தினர் இன்று நாட்டைவிட்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் நாட்டில் முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அடுத்து சீனாவை முழுமையாக நம்பி மற்ற நாடுகளை பகைத்துக்கொண்டு செயல்பட்டது. அடுத்து தொலைநோக்கு பார்வையில்லாமல் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகள் பொருளாதாரத்தை மீட்க முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கை தள்ளாடித் தொடங்கியது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தை பொறுத்து பார்த்த மக்கள் மார்ச் மாதம் வீதிக்கு வந்து போராடத்தொடங்கினர். மார்ச் 31-ந்தேதி கொழும்பில் முதலில் போராட்டம் ஆரம்பித்தது.

    ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார். மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார்.

    ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் செய்த அட்டூழியம் பாவமாக மாறி இன்று அவர்களை நாட்டை விட்டே துரத்தியுள்ளது. இதனால்தான் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு துரத்தப்பட்டதும், ஈழத் தமிழர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட தொடங்கிவிட்டனர்.

    • இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகும் பட்சத்தில் ஒரு வாரத்துக்குள் தற்காலிக அதிபர் பதவி ஏற்க வேண்டும்.
    • இலங்கை பாராளுமன்றம் 3 நாட்களில் கூடி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே மக்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளார். அவர் வருகிற 13-ந்தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    இதையடுத்து இலங்கையில் அடுத்து என்ன அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே விலகியிருப்பதால் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் யார் என்பதை அறிய இலங்கை மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    இது தொடர்பாக நேற்று மாலையில் இருந்து இலங்கை சபாநாயகர் மகிந்த யப்பா அபவக்தனே தலைமையில் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடந்தபடி உள்ளது. மகிந்த யப்பா இடைக்கால அதிபர் பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் பிரதமர் பதவியை ஏற்கக்கூடும் என்று மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் இன்று மதியம் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்காக இலங்கையில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மற்றும் சிறிய கட்சிகள் கொண்ட சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பில் நடக்கிறது. அதில் கூட்டாட்சிக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகும் பட்சத்தில் ஒரு வாரத்துக்குள் தற்காலிக அதிபர் பதவி ஏற்க வேண்டும். இலங்கை பாராளுமன்றம் 3 நாட்களில் கூடி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பிறகு 30 நாட்களில் நிரந்தர அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    இதற்கிடையே பிரதமரையும் இதே முறையில் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய இலங்கை தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள்.

    ×