search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலுக்கட்டை ஸ்பெஷல்"

    • ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி.
    • சத்தான கொழுக்கட்டை உணவுகளுடன் சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக கொண்டாடுங்கள்.

    விநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்த வகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம்.

    டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

    தேவையானவை:

    அரிசி மாவு - ஒரு கப்,

    பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10,

    முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10,

    திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம்,

    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    கடாயில் தண்ணீர்,உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு.

    முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்சியில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் பூரணம் தயார்.

    கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    ஸ்பிரவுட் கொழுக்கட்டை

    தேவையானவை:

    முளைகட்டிய பயறு - ஒரு கப்,

    பச்சை மிளகாய்- 3 (நறுக்கவும்),

    தேங்காய் துருவல் - கால் கப்,

    அரிசி மாவு - ஒரு கப்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    எண்ணெய் - 4 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

    பயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும்.கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும்.

    ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால் ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்.

    தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை

    தேவையானவை:

    தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்),

    பனைவெல்லம் - தலா ஒரு கப்,

    தேங்காய் துண்டுகள் - அரை கப்,

    ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தினை மாவை வெறும் கடாயில் வறுத்து உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும்.

    பனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து

    சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவி, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இத்தகைய சத்தான கொழுக்கட்டை உணவுகளுடன் சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக கொண்டாடுங்கள்.

    ×