search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் ஏரி"

    • கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    • புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் குடிநீர்வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.

    இதைத்தொடர்ந்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 626 மில்லியன் கனஅடி (10 டி.எம்.சி)தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 90.38 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 3076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 737 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 257 கன அடிதண்ணீர் வருகிறது. 396 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 189 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3259 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து 485 கனஅடியாக குறைந்தது. 624 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 54 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை குடிநீர் ஏரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேர்த்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி முழுவதுமாக வறண்டு விடும்போது சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று மாலை பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது நீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை, பிற நீா்த்தாவரங்கள் மற்றும் இதர கழிவுப் பொருள்களை வரும் பருவ மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும்.

    மேலும், இணைப்பு கால்வாயின் இருபுறமும் சேதம் அடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரிப்பு செய்து கால்வாயின் இரு புறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் தகவல் பலகைகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி இணைப்பு கால்வாய்களில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினாா்.

    இந்த ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    அப்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய நிர்வாக இயக்குனர் கிரிலோஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தலைமை பொறியாளர் ஜேசுதாஸ், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் இவர்கள் புதிதாக கட்டப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தமிழகத்தில் உள்ள 90 குடிநீர் ஏரி, அணைகளில் மொத்தம் 224.297 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
    • சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு பெய்துவரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து உள்ளது எனினும் ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லை.

    எனவே வருகிற ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி. இதில் தற்போது 2,999 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதேநாளில் 3 ஆயிரம் மி.கனஅடியை தாண்டி இருந்தது. இதேபோல் முக்கிய குடிநீர் ஏரியான புழலில் தற்போது 2,544 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன.அடி கடந்த ஆண்டு இதே நாளில் ஏரியில் 2,956 மி.கன. அடி தண்ணீர் இருந்தது.

    இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, அணைகளில் கடந்த ஆண்டை விட தற்போது தண்ணீர் இருப்பு குறைந்த அளவிலேயே உள்ளது.

    மேட்டூர் அணையில் தற்போது 69 ஆயிரத்து 145 மி.கன.அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 93,470 மி.கன. அடி). ஆனால் கடந்த ஆண்டு 71,513 மி.கன. அடி தண்ணீர் இருந்தது.

    வைகை அணையில் கடந்த ஆண்டை விட தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்து விட்டது. அணையில் தற்போது 2,535 மி.கன.அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (மொத்த கொள்ளளவு 6.091 மி.கன.அடி). கடந்த ஆண்டு 5,643 மி.கன.அடி தண்ணீர் இருந்தது. பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 5,500 மி.கன.அடி. இதில் 269 மி.கன. அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு 1,737 மி.கன. அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பவானி சாகர், அமராவதி, பெரியார் அணை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிகுளம், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளிலும் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டை விட குறைந்தே காணப்படுகிறது.

    வரும் நாட்களில் வெப்பத்தின் காரணமாக தண்ணீர் இருப்பு மேலும் குறையும் என்பதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் சப்ளை செய்வதற்காக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது:-

    தமிழகத்தில் உள்ள 90 குடிநீர் ஏரி, அணைகளில் மொத்தம் 224.297 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது 135.087 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கோடைகாலம் முடியும் வரை தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். பருவமழையின் போது டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெரும்பாலான ஏரி, அணைகள் முழு கொள்ளளவை எட்டி இருந்தன.

    சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது. அனைத்து மாவட்டங்களிலும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×