search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்கருட சேவை"

    • நாச்சியார் கோயில் மார்கழி பிரம்மோற்சவம் விசேஷமானது.
    • நான்காம் நாள் கல்கருட சேவையும் அற்புதமானது.

    சோழநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநறையூரில் (நாச்சியார் கோயில்) மார்கழி பிரம்மோற்சவம் விசேஷமானது. அதில் நடைபெறும் நான்காம் நாள் கல்கருட சேவையும் அற்புதமானது. திருநறையூரில் ஐந்து உருவங்களிலும் தாயார் பெருமாளை மணந்து கொள்கிறார். இந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆசாரியர் என்று கருதப்படுகிறார்.

    அதனால்தான் திருமங்கையாழ்வார் மற்ற எந்த திவ்ய தேசங்களுக்கும் இல்லாமல் திருநறையூர் என்கின்ற நாச்சியார் கோயிலுக்கு 110 பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார். இந்த திவ்யதேசத்தில் மார்கழி, பங்குனி என இரண்டு முறை கல்கருட சேவை புறப்பாடு உண்டு.

    முதலில் கருடன் புறப்பட்டு தரிசனம் தருவார். அதற்குப் பிறகு, அதன் மேல் பெருமாள் ஆரோகணித்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். `பட்சிராஜன்' என்ற பெயரோடு இத்தலத்தில் உள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார்.

    இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்துவந்தால், நினைத்த காரியம் நடக்கும்.

    கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம் முதலியவற்றை வாழைச் சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றி இவருக்கு பூஜை செய்தால், நாகதோஷம் நீங்கும், திருமணத்தடை விலகும், நல்வாழ்வு கிடைக்கும், வியாழக்கிழமை தோறும் பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது.

    கல்கருட சேவை புறப்பாட்டில் சந்நதியில் இருந்து கருடனை 4 பேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். படிக்கட்டுகளில் இருந்து தூக்கி வரப்படும் கருடாழ்வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள்.

    இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். கோயிலுக்குத் திரும்பும்பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சந்நதியை அடைவார்கள். வேறு எங்கும் காணக்கிடைக்காத கல்கருட சேவை இன்று.

    ×