search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐப்பசி திருவிழா"

    • 20-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 22-ந்தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.

    10.30 மணிக்கு கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்டவற்றில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 20-ந்தேதி காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 22-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • 23-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஊஞ்சல் விழா நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கோவில் யானை காந்திமதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடக்கிறது.

    வருகிற 21-ந்தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார்.

    22-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லையப்பர் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது.

    23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 26-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 22-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 6 மணிக்கு விளாபூஜையும், 7 மணிக்கு செண்பகவல்லி அம்மன், பூவனநாதர், பலிபீடங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு, கொடி ஏற்று விழா விமரிசையாக நடந்தது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாநாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது.

    ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி வரும் 19-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 22-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.25 மணிக்குள் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், இதனைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைபிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 22-ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
    • 23-ந்தேதி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    நெல்லை, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி பெருந்திருவிழா, ஆடிப்பூர உற்சவம், ஆவணி மூலத்திருவிழா, பங்குனி உத்திரத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையிலும் சிறப்பு அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். 22-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பா நதியில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.

    நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் 23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. ஐப்பசி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • வருகிற 12-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
    • 16-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

    குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி - அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. வருகிற 12-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 13-ந் தேதி விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மை ஆகிய நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.

    15-ந் தேதி காலை 9.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

    விழாவின் கடைசி நாளான 18-ந் தேதி காலை 10.40 மணிக்கு விசு தீர்த்தவாரியும், ரிஷப வாகன காட்சியும், இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கின்றது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா, கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    ×