search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் உறுப்பு தானம்"

    • மனைவி அபூர்வாவும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தானமாக அளிக்கப்படும் உறுப்புகளால் குறைந்தது 11 பேருக்கு மறு வாழ்வு கிடைக்கும்.

    மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரைச் சேர்ந்த மருத்துவ தம்பதியினர் மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்த தங்களின் 30 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

    பெங்களூரு அருகே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் டாக்டர் தம்பதியின் மகன் சாகேத் தண்ட்வாட் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஐஎம்ஏவின் விரார் தலைவரான அவரது தந்தை டாக்டர் வினீத் தாண்டாவதே, தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார்.

    ஐந்து மாதங்களுக்கு முன்புதான் சாகேத்திற்கு திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி அபூர்வாவும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, மகாராஷ்டிரா இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) உறுப்பு தானக் குழுவின் தலைவரான டாக்டர் கதம் கூறுகையில், "தானமாக அளிக்கப்படும் உறுப்புகளால் குறைந்தது 11 பேருக்கு மறு வாழ்வு கிடைக்கும்.

    சாகேத்தின் பெற்றோர் டாக்டர் வினீத் மற்றும் டாக்டர் சுமேதா ஆகியோர் இறந்த தங்கள் மகனின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    நாட்டில் ரத்த தானம் குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ள நிலையில், உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவை" என்றார்.

    • தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 12 மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வந்து அடைந்தார்.
    • நான் கடந்து வந்த பாதையில் கடுமையான சூறாவளி காற்று, பனி மற்றும் வெயிலின்தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.

    கன்னியாகுமரி:

    மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்தவர் பிரீத்தி மாஸ்க் (வயது 46).

    இவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்ட தூர விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் தனது சைக்கிள் பயணத்தை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் இருந்து கடந்த 12-ந்தேதி தொடங்கினார்.

    அவர் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 12 மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வந்து அடைந்தார்.

    இவர் மொத்தம்உள்ள 3ஆயிரத்து 676 கிலோமீட்டர் தூரத்தை 11 நாட்கள் 22 மணி நேரம் 21 நிமிடங்களில் கடந்து நேற்று கன்னியாகுமரி வந்தடைந்து சாதனை புரிந்து உள்ளார். ஒவ்வொரு நாளும் 19 மணி நேரம் அவர் தொடர்ந்து சைக்கிள் மிதித்து உள்ளார். தனது சாதனை குறித்து சைக்கிள் பயண வீராங்கனை பிரீத்தி கூறுகையில், மக்களிடம் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

    நான் கடந்து வந்த பாதையில் கடுமையான சூறாவளி காற்று, பனி மற்றும் வெயிலின்தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். என்றாலும் வழிநெடுகிலும் மக்கள் எனது கோரிக்கைக்கு பெரும் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் என்றார்.

    • இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க, அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
    • மதுரையில் இருந்து விமானம் வாயிலாக 1.45 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு இதயம் கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    மதுரையைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    இதையடுத்து அந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க, அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு அவரிடம் இருந்து தானமாகப் பெற்ற இதயத்தைப் பொருத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி, மதுரையில் இருந்து விமானம் வாயிலாக 1.45 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு இதயம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் அந்த உறுப்பு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

    மதுரையில் இருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு, 2 மணி நேரத்தில் இதயம் கொண்டு வர உதவியாக இருந்த சென்னை காவல்துறை மற்றும் மருத்துவர்களுக்கு, காவேரி மருத்துவமனை நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

    • மற்றவர்களின் நலனை பற்றி சிந்திப்பதே நமது கலாச்சார பாரம்பரியம்.
    • மனித நேயத்திற்காக உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க வேண்டும்.

    ஆரோக்கியமான வலுவான இந்தியா மாநாட்டை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சிக்கிம் ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்தியாவில் உடல் உறுப்பு, கண் தானத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும் எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    மாநாட்டில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, நமது சொந்த நலன் மட்டுமல்ல, மற்றவர்களின் நலனையும் பற்றி சிந்திப்பதே நமது கலாச்சார பாரம்பரியம் என்று கூறினார். உறுப்பு தானம் பற்றிய பிரச்சினை அத்தகைய பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 


    மனித நேயத்திற்காக தங்கள் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க, மக்கள் இயக்கமாக இதனை மாற்றவேண்டும் என்று மத்திய மந்திரி கேட்டுக்கொண்டார். உறுப்பு தானம் செய்ய மக்களை ஊக்குவிக்க அரசாலோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலோ மட்டும் சாத்தியமில்லை என்றும், அந்த இயக்கம் வெற்றிபெற அது மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    உடல் உறுப்பு, கண் தானம் குறித்த தேசிய மக்கள் இயக்கம் வெற்றி பெற உழைக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார். உடல் உறுப்பு தான இயக்கத்தின் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதற்கு தமது அமைச்சகம் முழு மனதுடன் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    • ரிஷாந்த் என்ற 16 மாத ஆண் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கடந்த 24-ந் தேதி, அக்குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி :

    டெல்லியை சேர்ந்த உபிந்தர் என்ற தனியார் ஒப்பந்ததாரருக்கு பிறந்து 16 மாதங்கள் ஆன ரிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி அந்த குழந்தை தரையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. மூளையில் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 8 நாட்கள் சிகிச்சை பலனளிக்காத நிலையில், கடந்த 24-ந் தேதி, அக்குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    அதையடுத்து, குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் பேசி உறுப்பு தானம் அளிக்க சம்மதம் பெற்றனர். குழந்தையின் சிறுநீரகங்களும், கல்லீரலும் எடுக்கப்பட்டு, வேறு 2 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. அந்த குழந்தைகள் உயிர் பிழைத்தனர். மேலும், இதய வால்வுகளும், விழி வெண்படலமும் எடுக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேமித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மிக இளம் வயதில் உறுப்பு தானம் அளித்தவர் என்ற பெருமை, அந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது.

    • அண்ணாமலையின் ஒரு சிறுநீரகம் அவர் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவருக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
    • அண்ணாமலையின் உடல் உறுப்புதானத்தால் 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    சரவணம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது61).

    இவர் ஜவுளி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் தனது உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி இவர் திருப்பூருக்கு துணிகள் எடுப்பதற்கு வந்தார். அங்கு துணிகளை எடுத்து கொண்டு மீண்டும் கோபி நோக்கி சரக்கு வேனில் சென்றார். வேன் மொடச்சூர் அருகே சென்ற போது, திடீரென விபத்தில் சிக்கியது.

    இதில் வேனில் இருந்த அண்ணாமலை பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து அண்ணாமலையின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.

    உறவினர்கள் அண்ணாமலையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதனை தொடர்ந்து உரிய அனுமதியுடன் டாக்டர்கள் அண்ணாமலையின் உடல் பாகங்களை எடுத்தனர்.

    அண்ணாமலையின் ஒரு சிறுநீரகம் அவர் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவருக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புதானத்தால் 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    ×