search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஷா"

    • லிங்கபைரவி சந்நிதியில் பெளர்ணமி அபிஷேகம்.
    • நந்தி முன்பு லிங்கபைரவி மஹா ஆரத்தியும் நடைபெற்றது.

    கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ 26) ஒட்டுமொத்த ஈஷாவும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்தது.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், நந்தி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 

    மேலும், சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 24வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனையும் நடைபெற்றது.

    லிங்கபைரவி சந்நிதியில் பெளர்ணமி அபிஷேகமும், அதை தொடர்ந்து நந்தி முன்பு லிங்கபைரவி மஹா ஆரத்தியும் நடைபெற்றது.

    • ஈஷா தன்னார்வலர்களும் திரளாக பங்கேற்றனர்.
    • ஈஷா சார்பில் புத்தாடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆதியோகி முன்பு ஒன்றாக இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதில் தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, நல்லூர்பதி, சீங்கபதி, சாடிவயல்பதி உள்ளிட்ட ஏராளமான மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அவர்கள் மாலை 4 மணியளவில் சர்ப்பவாசலில் இருந்து தாம்பூல தட்டுக்களை ஏந்தி ஆதியோகிக்கு ஊர்வலமாக நடந்து சென்றார்கள்.

    பின்னர், ஆதியோகி முன்பு இருக்கும் சப்தரிஷிகளின் திருமேனிகளுக்கு பூ, பழங்களை படைத்து ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். மேலும், அங்கு சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு பழங்குடி மக்கள் தங்கள் கரங்களாலேயே தீர்த்தங்களை அர்ப்பணித்தனர். இதை தொடர்ந்து பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான ஈஷா தன்னார்வலர்களும் திரளாக பங்கேற்றனர்.

    முன்னதாக, தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி ஆகிய மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுகணக்கான குழந்தைகளுக்கு ஈஷா சார்பில் புத்தாடைகள்  இலவசமாக வழங்கப்பட்டது. இதுதவிர, ஈஷா யோக மையத்தில் இருந்து இருட்டுப்பள்ளம் வரை உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று நேற்றும் இன்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை பரிமாற உள்ளனர்.

    • தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு.
    • விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2000 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் அவர்கள் பேசுகையில் "இயற்கை முறையில் காய்கறிகளை விளைப்பது எப்படி? அதை மதிப்பு கூட்டுவது மற்றும் சந்தைப்படுத்துவது எப்படி" என்பது தொடர்பாக இந்த விழாவில் பேசப்பட்டுள்ளது.

    மேலும், ரசாயன விவசாயத்துக்கு நிகரான மகசூலை இயற்கை முறையில் எடுப்பது எப்படி என்பதை வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    மேலும், இன்று ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் இயற்கை விவசாயியாக மாறும் வகையில், மூன்று மாத பயிற்சி ஒன்றை வடிவமைத்துள்ளோம். கோவையில் உள்ள ஈஷா மாதிரி விவசாய பண்ணையில் இந்த மூன்று மாத பயிற்சி நடைபெற இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் விருப்பம் உள்ள இளைஞர்கள் அங்கேயே தங்கி மூன்று மாதம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி .ராமர் பேசுகையில் "நான் கமுதியில் 30 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பிரதான பயிராக மிளகாய் வற்றலை பயிரிட்டுள்ளேன். ஆண்டுக்கு 200 டன் மிளகாய் வற்றலை தரமான முறையில் உற்பத்தி செய்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்கிறேன். என்னை பார்த்து இன்று கிட்டதட்ட 400 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்" எனக் கூறினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் அவர்கள் நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர், பல்லடம் விவசாயி பொன்முத்து இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து பேசினார். 

    அத்துடன், இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் பலர் இயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்புக் கூட்டி பொதுமக்களுக்காக விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதற்காக 40 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பாரம்பரிய அரிசி, சிறு தானியம், தேன், கை வினை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் நம் மரபு இசையை பேணி காக்க சவுண்ட் மணி அவர்கள் 80க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    அதனை தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் படையல் சிவா குழுவினருடன் இணைந்து அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் ஆரோக்கியமான உணவு தயார் செய்து வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும் காய்கறி சாகுபடியை இயற்கை முறையில் செய்வது குறித்த கையேடும், பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    • ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் மூன்று மாத பயிற்சி அறிவிப்பு.
    • கோவையில் உள்ள ஈஷா மாதிரி பண்ணையில் இயற்கை விவசாயம் குறித்த முறையான வழிகாட்டுதல் மற்றும் மூன்று மாத பயிற்சி வழங்கப்படுகிறது.

    கோவை:

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் மூன்று மாத பயிற்சி அறிவிப்பு. கோவையில் உள்ள ஈஷா மாதிரி பண்ணையில் இயற்கை விவசாயம் குறித்த முறையான வழிகாட்டுதல் மற்றும் மூன்று மாத பயிற்சி வழங்கப்படுகிறது.

    மூன்று மாத பயிற்சிக்கு பின், பங்குபெறும் இளைஞர்கள் முழுமையான இயற்கை விவசாயியாக மாறியிருப்பார்கள் என மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் கூறியுள்ளார்.

    • 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 2022-2023க்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
    • மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா அவுட்ரீச் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான மண் பரிசோதனை ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.

    ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலுடன் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம், கோவை ஈஷா யோக மையத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

    வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்ட முதல் FPO நிறுவனமாகும். சத்குருவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் 2013 இல் தொடங்கப்பட்டது. 5859 ஏக்கர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர், அதில் 404 பேர் பெண் விவசாயிகள் மற்றும் 776 சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.

    இந்நிறுவனம் அதனுடடைய சிறந்த செயல்பாட்டிற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. குறிப்பாக அக்டோபர் 2023 இல் புதுடெல்லியில் நடைபெற்ற CII - FPO எக்ஸலன்ஸ் விருது விழாவில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மூலம் 'மெம்பர்ஷிப் என்கேஜ்மென்ட் ' பிரிவில் சிறந்து விளங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.

    600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 2022-2023க்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் அதன் செயல்பாடுகளின் மூலம் ரூ.14.72 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    தேங்காய், மட்டை, காய்கறி, விவசாய இடுபொருள் அங்காடி, விற்பனை அங்காடி, போக்குவரத்து, சொட்டு நீர் பாசனம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் என விவசாயிகளின் பல தரப்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்து இந்த நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது. குறிப்பிடப்பட்ட இந்த ஆண்டில் இந்த நிறுவனம் அதன் விவசாயிகள் உற்பத்தி செய்த 1.02 கோடி தேங்காய், 156 டன் காய்கறிகள் மற்றும் 10.4 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்துள்ளது.

    இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் இதன் வருங்கால திட்டம் குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் திரு. குமார் பேசுகையில், "மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா அவுட்ரீச் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான மண் பரிசோதனை ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பயிர்களை பாதிக்கும் நோய்களைக் கண்டறியவும் மற்றும் வளர்ச்சி மேம்பாட்டிற்காகவும் பிரத்தியேக மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், "Fair trade certification" சான்றிதழ் பெறுவதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகிறது" என்றார்.

    மத்திய அரசின் 10,000 FPO க்களை உருவாக்கி ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ஈஷா அவுட்ரீச் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் 24 FPOக்களை ஆதரித்து ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த 24 FPO க்களுக்கும் முன்மாதிரி நிறுவனமாக வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது.

    • ஈஷா கிராமோத்சவ போட்டிகளால் அனைவரும் ஒன்றாக கூடி மாலை நேரத்தில் விளையாட்டு பயிற்சி செய்கிறோம்.
    • இளைஞர்களை மது, புகை உள்ளிட்டபோதை பழக்கத்திலிருந்து மீட்டுள்ளது ஈஷா கிராமோத்சவம்.

    கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதன் மூலம் மது, புகை உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து அவர்கள் மீள்வதாக தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர் கிராம மக்கள்.

    ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழா என்பது மற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலிருந்தும் மாறுபட்ட ஒன்று. இதில் தேசிய, மாநில அளவில் உள்ள விளையாட்டு வீரர்களோ, கல்வி நிறுவனம் அல்லது தொழில் முறை விளையாட்டு வீரர்களோ அல்லது ஏற்கனவே சிறந்து விளங்கும் வீரர்களுக்கோ அனுமதி இல்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அணியை உருவாக்கி இப்போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்.

    இதன் மூலமாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு புது அணி உருவாகவும்,பழைய அணி புத்துணர்வு பெறவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. போட்டி மனப்பான்மை, ஜாதி, மதம், வயது உள்ளிட்ட எந்த பேதமும் இன்றி குழுவாக சேர்ந்து பயிற்சி செய்வதால், இளைஞர்களின் தலைமை பண்பு மற்றும் ஒற்றுமை அதிகரிக்கிறது. இந்த போட்டியில் பரிசுகளை வெல்வது என்கிற ஒற்றை பலனை தாண்டி கிராமத்தின் சமூக ஒற்றுமை, கிராம மக்களின் ஆரோக்கிய மேம்பாடு, பெண்களின் சுய சார்புதன்மை என பல அம்சங்களை பயனாக பெற முடிகிறது. மிக முக்கியமாக இளைஞர்களை மது, புகை உள்ளிட்டபோதை பழக்கத்திலிருந்து மீட்டுள்ளது ஈஷா கிராமோத்சவம்.

    இந்த மாற்றத்தை கண்கூடாக பார்த்த கிராம மக்கள் தங்கள் அனுபவத்தை பகிரும் போது, "மாலை நேரங்களில் செய்வதற்கு ஏதுமின்றி பலர் தீய பழக்கத்திற்கு அடிமையாகி வந்தனர். ஆனால் ஈஷா கிராமோத்சவ போட்டிகளால் அனைவரும் ஒன்றாக கூடி மாலை நேரத்தில் விளையாட்டு பயிற்சி செய்கிறோம். நேரத்தை ஆக்கபூர்வமாக செலவிடுவதால் தீய பழக்கத்திலிருந்து பலர் விடுபட்டுள்ளனர்" என்று கருத்து தெரிவித்தனர்.

    விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் உருவாக்குவது தான் ஈஷா கிராமோத்சவத்தின் அடிப்படை நோக்கம். இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக, 15 ஆவது முறையாக நடைபெற்ற இந்த ஆண்டின் ஈஷா கிராமோத்சவம்  இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக கலந்து கொண்டார் நடிகர் சந்தானம்.  அவர் பேசுகையில் "புகை மது உள்ளிட்ட போதைப் பழக்கத்திலிருந்து வெளியே வருவதற்கான ஆற்றலை விளையாட்டு கொடுக்கும். அதை சரியாக கையில் எடுத்திருக்கிறார் சத்குரு" என பாராட்டு தெரிவித்தார்.

    • இசை கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை இசையின் மூலம் வெளிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சி.
    • இசைக்கப்பட்ட இசையும் பாடல்களும் அரங்கில் இருந்த பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

    ஈஷா நவராத்திரி விழாவின் 4-ம் நாளான இன்று புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய, கர்நாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி இசையின் கலவையாக அமைந்த "ஜூகல்பந்தி" இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக, 4-ம் நாளான இன்று புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய "தேவி ப்ரோவ சமயமிதே" என்ற ஜூகல்பந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பொருள், "என்னைக் காப்பதற்கு இதுவே தருணம் தேவி" என்பதாகும். பாரதத்தின் பாரம்பரிய இசை மரபில் "ஜூகல் பந்தி" என்பது பல்வேறு இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பலவிதமான இசைக் கருவிகளை அல்லது வாய்ப்பாட்டு கலையை ஒரு கலவையாக வெளிப்படுத்துவது. அடிப்படையில் இசை கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை இசையின் மூலம் வெளிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சி.

    தெய்வீகமான பெண் தன்மையைக் கொண்டாடும் வகையில் புராஜெக்ட் சமஸ்கிருதி மாணவர்கள் "ஜெகதீஸ்வரி பிரம்ம ஹ்ரிதயேஸ்வரி" என்கிற பாடலை முதல் பாடலாகப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர். தொடர்ந்து இசைக்கப்பட்ட இசையும் பாடல்களும் அரங்கில் இருந்த பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

    முன்னதாக, ஜாகீர்நாயக்கன் பாளையம் பஞ்சாயத்து தலைவர் திருமதி. அன்னபூரணி துரைசாமி, நரசீபுரம் பஞ்சாயத்து தலைவர் திருமதி. விஜயராணி பாரதிராஜா, கோவை மாவட்டம் விவசாய சங்க தலைவர் திரு. ஆறுச்சாமி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் திரு. பி. வேலுச்சாமி மற்றும் ஆலாந்துறை பஞ்சாயத்து கவுன்சிலர் திரு. மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    நவராத்திரியின் 5-ம் தினமான நாளை மாலை 6.30 மணிக்கு திரு. விவேக் சதாசிவம் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

    • பல்வேறு நாட்டுப் புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

    ஈஷா நவராத்திரி கொண்டாட்டத்தின் 2-ம் நாளான  நேற்று தஞ்சாவூரைச் சேர்ந்த கலைமாமணி சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

    கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2-ம் நாளான நேற்று கிராம தெய்வங்களை போற்றி வணங்கும் பல்வேறு நாட்டுப் புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் திரு. கிட்டுசாமி, கோவை விவசாய சங்க தலைவர் திரு. சுந்தரராமசாமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    30 வருடங்களாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கலைமாமணி சிவாஜி ராவ் அவர்களின் தலைமையில் இக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முருக பெருமானை வணங்கி அவர் ஆடிய காவடியாட்டத்தை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்து பாராட்டினர். மேலும், தஞ்சை ராணி கோகிலா அவர்களின் கரக்காட்டம், ஜீவாராவ், பொன்னி ஆகியோரின் பொய்க்கால் குதிரையாட்டம், சித்தார்த்தன், ரியாஸ், குமார் ஆகியோரின் மாடு மற்றும் மயில் நடனங்கள், செல்வம் அவர்களின் பறையாட்டம் மற்றும் சக்கரை குழுவினரின் நையாண்டி ஆட்டம் என அடுத்தடுத்து சுமார் 2 மணி நேரம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் விழா களைக்கட்டியது.

    கலைஞர் சிவாஜி ராவ் அவர்கள் அமெரிக்கா, லண்டன், மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும், இந்தியா முழுவதும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நவராத்திரியை முன்னிட்டு ஈஷாவில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் வரும் 23-ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறும். இன்று உமா நந்தினி அவர்களின் தேவாரம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

    • தூய்மை பணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.
    • கிராமங்களில் உள்ள பொது இடங்கள், சாலைகள் மற்றும் தெருக்களில் ஈஷா தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.

    தூய்மை பாரத விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், கோவை ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஈஷா தன்னார்வலர்கள் இன்று தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். குறிப்பாக, பழங்குடி மக்களின் வீடுகள் மற்றும் கழிப்பறைகளை அவர்கள் சுத்தம் செய்தனர்.

    நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் 'தூய்மை பாரதம்' என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக சத்குரு அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (செப்.30) வெளியிட்ட பதிவில் "நம் கோவில்களையும், வீதிகளையும், மிக முக்கியமாக, நம் மனங்களையும் சுத்தமாக வைத்திருக்க உழைப்பது நம் செழிப்பின் உச்சத்தை எட்டுவதற்கு ஒரு முக்கிய படியாகும். பாரதத்திற்கும், அது தொடர்ந்து உயர்வதற்கு அடித்தளமாக விளங்கும் ஆழமிக்க நாகரிகத்திற்கும், நம் அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமையட்டும்" என்று பதிவிட்டு இருந்தார்.

    மேலும், அந்தப் பதிவுடன் வெளியிட்டுள்ள வீடியோவில் தூய்மை பாரத திட்டத்தின் செயல்பாடுகளை சத்குரு அவர்கள் பாராட்டி பேசி இருந்தார். மேலும், பொது இடங்களில் தூய்மையை பேண வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர் அக்.1-ம் தேதி நடைபெறும் தூய்மை பணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.

    இதை தொடர்ந்து கோவை ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள தாணிக்கண்டி, முள்ளாங்காடு, மடக்காடு, பட்டியார் கோவில் பதி, கொளத்தேரி, முட்டத்துவயல், காந்தி காலனி, செம்மேடு, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது இடங்கள், சாலைகள் மற்றும் தெருக்களில் ஈஷா தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். மேலும், அங்கு மக்களிடம் பொது இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய மேம்பாடு குறித்தும் எடுத்துரைத்தனர். இப்பணியில் ஈஷா தன்னார்வலர்களுடன் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    இப்பிரச்சாரத்தில் இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்களும் கலந்து கொண்டார். ஈஷாவின் சுகாதாரப் பணிகள் குறித்து அவர் கூறும் போது, "ஈஷா இன்று ஒரு நாள் மட்டுமின்றி தினமும் தூய்மை பணியை எங்கள் பஞ்சாயத்துடன் இணைந்து செய்து வருகிறது. ஈஷாவின் தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகனங்களில் தினமும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். மேலும், அக்குப்பைகளை முறையாக தரம் பிரித்து, அப்புறப்படுத்தும் பணியையும், மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியையும் அவர்கள் செய்கின்றனர். சத்குரு அவர்களின் அறிவுறுத்தலின்படி, இதை ஈஷா தனது சொந்த செலவில் கிட்டதட்ட 5, 6 வருடங்களாக செய்து வருகிறது. சத்குருவும் ஈஷாவும் எங்கள் பகுதியில் இருப்பது எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்" என கூறினார்.

    • அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய இடங்களில் பணியாற்றும் 20 கப்பற்படை வீரர்கள் பங்கேற்றனர்.
    • படைப் பிரிவுக்கு சென்று அங்குள்ள மற்ற வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

    84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

    இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படைப் பிரிவும், ஈஷா யோக மையமும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு யோகா வகுப்புகள் கடந்த சுதந்திர தினத்தன்று (ஆக.15) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சென்னை, பெங்களூரு, செகந்தராபாத், மும்பை, புனே, அகமதாபாத், குவாலியர், ஜான்சி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் சுமார் 10,000 ராணுவ வீரர்களுக்கு ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள் இலவசமாக யோகா கற்றுக்கொடுத்தனர்.

    இந்நிலையில் இதன் அடுத்தகட்டமாக, ராணுவ வீரர்களையே ஹத யோகா பயிற்றுநர்களாக மாற்றும் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் வகுப்பு கோவை ஈஷா யோக மையத்தில் செப்.1-ம் தேதி முதல் செப்.15-ம் தேதி வரை நடைபெற்றது.



    இதில் தரைப்படையின் தெற்கு பிராந்திய படைப் பிரிவில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் 84 ராணுவ வீரர்கள் மற்றும் விசாகப்பட்டினம், கொச்சின், டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய இடங்களில் பணியாற்றும் 20 கப்பற்படை வீரர்கள் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு சூர்ய க்ரியா, அங்கமர்த்தனா மற்றும் உப யோகா வகுப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும், அவர்கள் தங்கள் படைப் பிரிவுக்கு சென்று அங்குள்ள மற்ற வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இவ்வகுப்பில் கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளை ராணுவ வீரர்கள் தினமும் செய்வதன் மூலம் தங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை சிறப்பாக கையாள முடியும்.

    • கபடியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ. 2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.
    • சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ஈஷா கிராமோத்வம் திருவிழாவின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

    விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஈஷா கிராமோத்சவம் என்னும் விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் முதல்கட்டமாக, கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் கோவையில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தேர்வான வாலிபால், த்ரோபால் மற்றும் கபடி வீரர்கள் பங்கேற்றனர்.

    போட்டியை கோவை மேயர் திருமதி. கல்பான தொடங்கி வைத்தார். மேலும், தொடக்க விழா நிகழ்வில் 13-வது வார்டு கவுன்சிலர் திருமதி. சுமதி மற்றும் 14-வது கவுன்சிலர் திருமதி. சித்ரா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

    ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் சூலூர் அணியை வீழ்த்தி நஞ்சுண்டாபுரம் அணி முதலிடம் பிடித்தது. இதேபோல், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் தேவராயபுரம் அணியை வீழ்த்தி புள்ளாகவுண்டன் புதூர் அணி முதலிடம் பிடித்தது.

    இதுதவிர, தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கபடி போட்டியில் ஆண்கள் பிரில் ஈரோடு மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் கரூர் மாவட்ட அணியும் முதலிடம் பிடித்தன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் திருமதி. வாசுகி அவர்கள் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.

    மண்டல அளவில் தேர்வாகியுள்ள அணிகள் செப்.23-ம் தேதி கோவையில் ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. அதில் கபடியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ. 2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. மேலும், வாலிபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும், த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட உள்ளது. சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7 அணிகளும் பங்கேற்க உள்ளன.
    • கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல்நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்'குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி, திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன.

    வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7 அணிகளும் பங்கேற்க உள்ளன.

    இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

    மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இறுதி போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும். இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

    இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×