search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மீட்பு"

    • ஷிவானி கடற்கரையில் கடல் அலைகளில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • ஷிவானி வந்தனம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஷிவானி (வயது25). பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வந்த இவர், தனது நண்பர்கள் சிலருடன் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா வந்தார்.

    பல்வேறு இடங்களை சுற்றுப்பார்த்த அவர்கள், ஆலப்புழா மாவட்டம் மாராரி கடற்கரைக்கு நேற்று சென்றனர். ஷிவானி உள்ளிட்டவர்கள் கடற்கரையில் கடல் அலைகளில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை ஷிவானியை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

    இதனை அவருடன் வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் பயத்தில் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர். அப்போது அந்த வழியாக அர்த்துங்கல் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் சைரஸ் மற்றும் ஜெரோம் வந்தனர்.

    அவர்கள் கடலுக்குள் 20 மீட்டர் தொலைவில் ஷிவானி தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு கடலுக்குள் நீந்திச்சென்று ஷிவானியை மீட்டு கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது அவர் சுய நினைவின்றி இருந்தார்.

    இதனால் அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்று தவித்தபடி இருந்தனர். அப்போது அங்கு மற்றொரு போலீஸ்காரரான விபின் விஜய் வந்தார். அவர், சுயநினைவின்றி கிடந்த ஷிவானிக்கு சுவாசம் அல்லது இயதத்துடிப்பு நின்றுவிட்டால் செய்யப்படும் அவசர கால உயிர்காக்கும் செயல்முறையான சி.பி.ஆர். சிகிச்சையளித்தார்.

    இதையடுத்து அவர் சுய நினைவுக்கு வந்தார். பின்பு போலீசார் மூவரும் அவரை கைத்தாங்கலாக நடத்திச்சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஷிவானி வந்தனம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணை, விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்களை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். போலீஸ்காரர்கள் சரியான நேரத்தில் செய்த செயலே அந்த இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றியது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் தெரிவித்தார். 

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தக்கலை அருகே உள்ள கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பபாபு. மத்திய ரிசர்வ் போலீசில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி சுபலெஜா (வயது 38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அய்யப்ப பாபுவுக்கு மது பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி, 3 மகள்களுடன் சுபலெஜா மாயமானார்.

    இதுகுறித்து அவரது தந்தை அய்யப்பன், தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெகபர் விசாரணை நடத்தினர். சுபலெஜாவின் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போது, அவர் சென்னையில் இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் சென்னை சென்று அவர்களை மீட்டு தக்கலை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் விசாரணையில், தனது கணவர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதால் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை சென்றதாகவும் கோவிலுக்கு சென்று ஓய்வு எடுக்கும் போது தனது மனம் மாறியதாகவும் அதன் பிறகு தற்கொலை முடிவை மாற்றியதாகவும் சுபலெஜா போலீசாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      போரூர்:

      வடபழனி, வெள்ளாளர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.

      இதையடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 2 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் அங்கிருந்த வடமாநில இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சென்று வீட்டின் உரிமையாளரிடம் தம்பதிகள் போல நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்பது தெரிந்தது. தலைமறைவான அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

      • கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
      • சுமித்ரா தனக்கு குழந்தை பிறந்தது குறித்து பெருந்துறையில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

      ஈரோடு:

      ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் ராஜ். இவரது மகள் சுமித்ரா (22). இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

      அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலம் கலான்பூர் அம்தோப் பகுதியைச் சேர்ந்த சுப்ரததாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்று விட்டனர்.

      இந்த நிலையில் மகளை காணாத அவர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது சுமித்ரா தனது பெற்றோருக்கு போன் செய்து தான் காதல் திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவில் வசித்து வருவதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.

      இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து அவர் பெருந்துறையில் உள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

      இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுமித்ராவை அவரது கணவர் குடித்து விட்டு வந்து வீட்டில் அடைத்து வைத்து சூடு போட்டு சித்ரவதை செய்வதாகவும், சாப்பாட்டில் எச்சில் துப்பி கொடுப்பதாகவும், தனது பெற்றோரிடம் வீடியோ காலில் பேசி கதறி அழுதார். மேலும் தன்னையும், குழந்தையும் மீட்க வேண்டும் என்றும் கதறினார்.

      இதையடுத்து சுமித்ராவின் பெற்றோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் செய்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்த பெருந்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

      பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த 17-ந் தேதி கொல்கத்தாவுக்கு புறப்பட்டனர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்கள் சுமித்ராவை தேடினர். அப்போது அவர் இடத்தை கண்டுபிடித்து சுமித்ராவையும், அவரது குழந்தையையும் தனிப்படை போலீசார் மீட்டு மங்கள் கோட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

      மேலும் அம்மாநில போலீசார் நடத்திய விசாரணையில் சுமித்ராவை அவரது கணவர் சுப்ரததாஸ் சித்ரவதை செய்தது உண்மை என தெரிய வந்தது.

      இதையடுத்து தனிப்படை போலீசார் சுமித்ரா மற்றும் அவரது குழந்தையை மீட்டு பெருந்துறைக்கு புறப்பட்டனர். அவர்கள் பெருந்துறைக்கு வந்ததும் சுமித்ரா மற்றும் அவரது குழந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சுமித்ராவின் கணவரிடம் அம்மாநில போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×