search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஷ்டமி திதி"

    • பூஜையின் போது நெய்விளக்கு ஏற்றுவது சிறப்பு.
    • அம்பிகை உமாதேவி கடைப்பிடித்து பரமேஸ்வரனின் இடப்பாகத்தை பெற்றார்.

    பரமேஸ்வரனை விட்டுப்பிரியாமல் இருக்க வேண்டும். அவர் இடப் பாகத்தில் ஐக்கியம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அம்பிகை உமாதேவி தவம் செய்வதற்காக திருக்கேதாரம் என்ற திருத்தலத்தை அடைந்தார். அங்கு, கவுதம முனிவரை சந்தித்து தன் எண்ணத்தை சொல்ல, அவர் அப்போது அம்பிகை உமாதேவிக்கு சொல்லும் முகமாக நமக்கு உபதேசித்ததே கேதார கௌரி விரதம்.

    புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதி முதலாக தொடங்கி, அமாவாசை வரும் வரையிலும் இந்த விரதத்தை கடைபிடிப்பது முறை. நன்றாக இழைத்து தயார் செய்யப்பட்ட 21 இழைகள் கொண்ட சரடை (நூலை) சங்கல்பத்தோடு (வேண்டுதல் நிறைவேற வேண்டும்) இடக்கையில் கட்டி கொள்ள வேண்டும். புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும்.

    சூரியன் மறைந்தபின் இரவில் மட்டும் ஒரு வேளை உண்ண வேண்டும். இரவில் படுக்கையில் படுக்காமல் தரையில் தூங்க வேண்டும். தூங்கும் போது கூட அவசிந்தனை இல்லாமல் சிவ சிந்தனையோடு தூங்க வேண்டும். இப்படி விரதம் இருந்து

    தேய்பிறை சதுர்தசி அன்று கோவில் சென்று பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மரக்கால் அளவு செந்நெல்லை சதுரமாகப் பரப்பி, அதன் நடுவே மந்திர பூர்வமாகப் பிரணவ எழுத்தை எழுதி, அதன் நடுவில் பூர்ண கும்பம் வைக்க வேண்டும். கும்பத்தில் தர்ப்பையை முறைப்படி சார்த்தி கும்பத்தில் சிவபெருமானை ஆவாகனம் செய்ய வேண்டும். பிறகு முறையாக பூஜை செய்து துதிப்பாடல்களை பாடி வணங்க வேண்டும். பூஜையின் போது நெய்விளக்கு ஏற்றுவது சிறப்பு.

    இப்படி அன்றைய தினம் (சதுர்த்திசியில்) பூஜை முடிந்த பிறகு, மறுநாள், முன்னால் கையில் கட்டிக்கொண்ட சரடை அவிழ்த்து விட்டு பரமேஸ்வரனை வணங்க வேண்டும்.

    கவுதம முனிவர் உபதேசித்த இந்த கேதாரகவுரி விரதத்தை அம்பிகை உமாதேவி கடைப்பிடித்து பரமேஸ்வரனின் இடப்பாகத்தை பெற்றார். அத்துடன் தான் கடைபிடித்த இந்த கேதாரகௌரி விரதத்தை யார் கடைபிடித்தாலும், அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் தந்து, முடிவில் சிவன் திருவடிப்பேற்றையும் அடையும் பாக்கியத்தை செய்ய வேண்டும் என்று பரமேஸ்வரனிடம் நமக்காக வேண்டிக் கொண்டார் அம்பிகை.

    குழந்தைக்காக தாய் பத்தியம் இருப்பது போல, நமக்காக அம்பிகை செய்து வழி காட்டிய விரதம் இது. இந்த விரதத்தை கடைபிடித்து தம்பதிகள் ஒற்றுமையாக இருந்து சகல செல்வங்களையும் பெறலாம்.

    நோன்பு கதை

    பூவுலகில் ஒரு அரசனுக்கு புண்ணியவதி, பாக்கியவதி என்ற இரண்டு பெண்கள் இருந்தனர். அவ்வரசன் தன்நாடு நகரமெல்லாம் இழந்தான். அப்பெண்கள் ஒரு முறை கங்கை கரையில் கேதாரேஸ்வரர் விரதம் இருக்கும் தேவ கன்னியரிடமிருந்து நோன்பு கயிற்றை வாங்கி கையில் கட்டிக்கொண்டனர். அதனால் அவர்களுக்கு தொலைந்து போன ஐஸ்வர்யம் மீண்டும் கிடைத்தது.

    பாக்கியவதி அந்த நோன்பு கயிற்றை அவிழ்த்து அதை அவரைப் பந்தலின் மேல் போட்டு விட்டாள். அதனால் அவள் இல்லத்தில் வறுமை சூழ்ந்தது. அவள் தன் மகனை தன் சகோதரி இல்லத்துக்கு சென்று சிறிது பொருள் வாங்கி வருமாறு அனுப்பினாள். அவனும் சென்று வாங்கி வந்தான். ஆனால், அப்பொருளை வழியிலேயே பறி கொடுத்தான். இது போல் முன்று முறை நடந்தது. இறுதியில் அவனது பெரிய தாயார் அவனது தாய் கேதாரேவரன் விரதம் அனுஷ்டிக்கிறாளா? என்று கேட்ட போது அவன் இல்லை என்றான்.

    அதன் காரணமாகவே பொருளை இழக்க நேர்ந்தது என்றும் இனி தொடர்ந்து அவ்விரதத்தை அனுஷ்டிக்க சொல் என்று சொல்லி அவனை அனுப்பினாள். இப்போது அவன் வரும் வழியில் தொலைந்த பொருட்களெல்லாம் மீண்டும் கிடைத்தன.

    வீட்டிற்கு வந்து தன் தாயிடம் நடந்ததை கூறினான். அவளும் தன் தவறுக்கு வருந்தி மீண்டும் அவ்விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தாள். இழந்த எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்றாள். அதனால் இப்பூவுலகில் கேதாரி விரதத்தை மனப்பூர்வமாக செய்பவர்களுக்கு பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் வழங்குவார் என்பது ஐதிகம்.

    ×