search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மா.சுப்பிரமணியன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வு விலக்கு பெறுவதில் அரசு உறுதியாக உள்ளது. அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை.
    • விட்டு கொடுக்கவும் இல்லை. சட்ட ரீதியாக பதில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த மருத்துவமனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு செயற்கை கை, கால்கள் வழங்கப்பட்டு உள்ளன. கை விரல்கள் துண்டிக்கப்படுபவர்களுக்கு இங்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மிக சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    நீட் தேர்வை பொறுத்தவரை விலக்கு பெறுவதுதான் தமிழக முதல்-அமைச்சரின் நோக்கம். ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து இதற்காக முயற்சி எடுத்து வருகிறார்.

    சட்டசபையில் 8.2.22 அன்று 2-வது முறையாக மீண்டும் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதனை கவர்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு ஒன்றிய அரசு உள்துறை மூலம் மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பியது. அதனை தொடர்ந்து நீட் தேர்வு குறித்த குறிப்புகள் கவர்னருக்கு அனுப்பப்பட்டு தமிழக அரசின் சட்டத்துறைக்கு கடந்த வாரம் வந்துள்ளது.

    நீட் மசோதா நிறைவேற்றப்பட்டதில் சட்ட மன்றத்திற்கு உள்ள அதிகாரம் என்ன, இது ஒன்றிய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறதா, தேசிய ஆணைய சட்டத்திற்கு அது உட்பட்டதா? முரண்பட்டு அமைந்துள்ளதா? நீட் தேர்வு தகுதி அடிப்படையிலான தேர்வு எனவும் தரமான கல்வி, இது வெளிப்படையான தன்மை, தேசிய தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு ஆகிய வரலாற்று சீர்திருத்தங்களை உள்ளடக்கி உள்ளது எனவும் அதற்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா என்றும் கேட்டுள்ளது.

    இது நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்துமா, இந்திய அரசியல் சட்டத்தை மீறுகிறதா, தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதா என்றும் விளக்கங்கள் கோரி உள்ளது.

    இத்தகைய குறிப்புகள் மாணவர்களுககு எதிரானது, எந்த விதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, இவற்றை எல்லாம் ஆராய்ந்து பதில் அளிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை சுட்டி காட்டியுள்ளோம். ஒன்றிய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும்.

    நீட் தேர்வு விலக்கு பெறுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை. விட்டு கொடுக்கவும் இல்லை. சட்ட ரீதியாக பதில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் தமிழக மாணவர்கள் நலன் காக்கப்படும். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருக்கிறோம். சட்டப்பூர்வமான கோப்புகளுக்கு பதில் தயாரித்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    • தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு இதுவரை 2,882 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மத்திய சுகாதாரத் துறை மந்திரி மாண்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் நிலை பற்றியும், அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு இதுவரை 2,882 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது 140 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் 21 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    மேலும் தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் கொசு ஒழிப்பு பணிகளுக்கான கொசு ஒழிப்பு தெளிப்பான் எந்திரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் போதிய அளவில் இருப்பில் உள்ளன.

    தமிழ்நாட்டில் மலேரியா நோய் தொற்று பெருமளவில் குறைந்து வருகிறது. சென்ற ஆண்டு 772 பேரும், இந்த ஆண்டு இதுவரை 140 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழ்நாட்டில் 17 மாவட்டங்கள் மலேரியா நோய் பரவல் இல்லாத மாவட்டங்களாக உள்ளது. மலேரியாவை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    யானைக்கால் நோய் ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நோய் பரவல் இல்லாத நிலைக்கான சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழக அரசு சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் உதவித் தொகை 8,023 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.9.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் இதுவரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதநகர், மதுரை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 15 மாதங்களுக்கும், 16-ல் இருந்து 24 மாதங்களுக்கும் 2 தவணைகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கூறிய அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் தமிழ்நாட்டில் 78,78,980 கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன எனவும் அவற்றை பயன்படுத்தி தமிழ்நாட்டில் 18 வயது முதல் 59 வயதுக் குட்பட்ட அனைருக்கும் அரசு கொரோனா தடுப்பூசி மையங்களிலேயே முன் எச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதிக்குமாறும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
    • தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல பிரிவிற்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது கர்ப்பிணி பெண்களுக்கு உதவிகள், காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் புதிய சி.டி ஸ்கேன் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கொடைக்கானல் நகர்புற சுகாதார மையம் மேம்படுத்துவதற்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி பண்ணைக்காடு அரசு ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டி மேம்படுத்துவதற்கு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பழனி ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக ஆக்கப்பட உள்ளது.இதற்கு ஏற்கனவே ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.69 கோடியே 96 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.124 கோடியே 98 லட்சத்து 12 ஆயிரம் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் தொடங்குவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

    தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குரங்கு அம்மை நோய் காரணமாக 22 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்களது உடல்களில் சிறு தழும்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யப்படும்.

    தமிழகத்தில் தற்போது பரவிவரும் பி.ஏ.4.மற்றும் பி.ஏ.5 வகை ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதி கண்காணிக்கப்படும். தமிழகத்தில் நோய்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலில் விபத்து சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர்.

    வெளிநாடு குறிப்பாக உக்ரைன் நாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ மேல்படிப்புக்கு பணிக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது பணியில் உள்ள 10,000 செவிலியர்கள் படிப்படியாக காலமுறை ஊதியத்தில் இருந்து நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார், வேலுச்சாமி எம்.பி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி உள்பட பலர் உடனிருந்தனர்.


    • மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவனியாபுரம்:

    இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த 7 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இதையொட்டி மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனையை காட்டும் கருவியின் செயல்பாடுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனையை காட்டும் கருவியின் செயல்பாடுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    மேலும் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த போது பணிக்கு வர வேண்டிய பூபேஸ்குமார் என்ற டாக்டர் வராததது தெரிய வந்தது. இது தொடர்பாக கேட்ட போது, டாக்டர் 2 மணி நேரம் தாமதாக பணிக்கு வருவேன் என்று தெரிவித்து இருந்ததாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர் எந்த ஆவணமும் வழங்கவில்லை என்று தெரிய வந்ததால் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொது சுகாதாரதுறை இயக்குனரை தொலைபேசியில் அழைத்து டாக்டர் பூபேஸ்குமார் பணிக்கு வராததை தெரிவித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

    ×