search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு விலக்கு: மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியான பதில் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நீட் தேர்வு விலக்கு: மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியான பதில் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • நீட் தேர்வு விலக்கு பெறுவதில் அரசு உறுதியாக உள்ளது. அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை.
    • விட்டு கொடுக்கவும் இல்லை. சட்ட ரீதியாக பதில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த மருத்துவமனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு செயற்கை கை, கால்கள் வழங்கப்பட்டு உள்ளன. கை விரல்கள் துண்டிக்கப்படுபவர்களுக்கு இங்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மிக சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    நீட் தேர்வை பொறுத்தவரை விலக்கு பெறுவதுதான் தமிழக முதல்-அமைச்சரின் நோக்கம். ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து இதற்காக முயற்சி எடுத்து வருகிறார்.

    சட்டசபையில் 8.2.22 அன்று 2-வது முறையாக மீண்டும் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதனை கவர்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு ஒன்றிய அரசு உள்துறை மூலம் மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பியது. அதனை தொடர்ந்து நீட் தேர்வு குறித்த குறிப்புகள் கவர்னருக்கு அனுப்பப்பட்டு தமிழக அரசின் சட்டத்துறைக்கு கடந்த வாரம் வந்துள்ளது.

    நீட் மசோதா நிறைவேற்றப்பட்டதில் சட்ட மன்றத்திற்கு உள்ள அதிகாரம் என்ன, இது ஒன்றிய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறதா, தேசிய ஆணைய சட்டத்திற்கு அது உட்பட்டதா? முரண்பட்டு அமைந்துள்ளதா? நீட் தேர்வு தகுதி அடிப்படையிலான தேர்வு எனவும் தரமான கல்வி, இது வெளிப்படையான தன்மை, தேசிய தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு ஆகிய வரலாற்று சீர்திருத்தங்களை உள்ளடக்கி உள்ளது எனவும் அதற்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா என்றும் கேட்டுள்ளது.

    இது நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்துமா, இந்திய அரசியல் சட்டத்தை மீறுகிறதா, தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதா என்றும் விளக்கங்கள் கோரி உள்ளது.

    இத்தகைய குறிப்புகள் மாணவர்களுககு எதிரானது, எந்த விதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, இவற்றை எல்லாம் ஆராய்ந்து பதில் அளிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை சுட்டி காட்டியுள்ளோம். ஒன்றிய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும்.

    நீட் தேர்வு விலக்கு பெறுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை. விட்டு கொடுக்கவும் இல்லை. சட்ட ரீதியாக பதில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் தமிழக மாணவர்கள் நலன் காக்கப்படும். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருக்கிறோம். சட்டப்பூர்வமான கோப்புகளுக்கு பதில் தயாரித்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×