search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை
    X

    கொரோனா தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை

    • தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு இதுவரை 2,882 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மத்திய சுகாதாரத் துறை மந்திரி மாண்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் நிலை பற்றியும், அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு இதுவரை 2,882 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது 140 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் 21 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    மேலும் தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் கொசு ஒழிப்பு பணிகளுக்கான கொசு ஒழிப்பு தெளிப்பான் எந்திரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் போதிய அளவில் இருப்பில் உள்ளன.

    தமிழ்நாட்டில் மலேரியா நோய் தொற்று பெருமளவில் குறைந்து வருகிறது. சென்ற ஆண்டு 772 பேரும், இந்த ஆண்டு இதுவரை 140 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழ்நாட்டில் 17 மாவட்டங்கள் மலேரியா நோய் பரவல் இல்லாத மாவட்டங்களாக உள்ளது. மலேரியாவை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    யானைக்கால் நோய் ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நோய் பரவல் இல்லாத நிலைக்கான சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழக அரசு சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் உதவித் தொகை 8,023 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.9.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் இதுவரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதநகர், மதுரை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 15 மாதங்களுக்கும், 16-ல் இருந்து 24 மாதங்களுக்கும் 2 தவணைகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கூறிய அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் தமிழ்நாட்டில் 78,78,980 கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன எனவும் அவற்றை பயன்படுத்தி தமிழ்நாட்டில் 18 வயது முதல் 59 வயதுக் குட்பட்ட அனைருக்கும் அரசு கொரோனா தடுப்பூசி மையங்களிலேயே முன் எச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதிக்குமாறும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×