search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி வேட்டை"

    • ரவுடிகளால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
    • குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் அடுத்தடுத்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.

    இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ரவுடி ஒழிப்பு பிரிவு படையினரும், உளவு பிரிவு போலீசாரும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ரவுடிகளை ரகசியமாகவும், தீவிரமாகவும் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டி பண வசூலில் ஈடுபடுவது என்பது ரவுடிகளின் திரைமறைவு தொழிலாகவே இருந்து வருகிறது. இது போன்ற மாமூல் வசூல் வேட்டையில் ஏ பிளஸ் மற்றும் ஏ வகையை சேர்ந்த ரவுடிகளே ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள்தான் கூலிப்படை கும்பல் தலைவனாகவும் செயல்படுகிறார்கள். இவர்கள் நில விவகாரங்களில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதும் உண்டு.

    தொழிற்சாலைகளை நடத்தி வரும் தொழில் அதிபர்களை போனில் அழைத்து பேசி மிரட்டி பணம் பறிப்பது ஏ மற்றும் ஏ பிளஸ் வகை ரவுடிகளின் தினசரி செயல்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ரவுடிகள் கொன்று விடுவார்களோ? என பயந்து போய் புகார் அளிக்க முன் வருவதில்லை.

    ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுக்காவிட்டால் உயிரோடு இருக்க முடியாது என்று ரவுடிகள் மிரட்டுவதால் உயிருக்கு பயந்து பலர் புகார் அளிப்பது இல்லை என்கிறார்கள் போலீசார்.

    இதன் காரணமாகவே சத்தமின்றி ரவுடிகள் தங்களது மாமூல் வேட்டையை தொடரும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று கூறும் போலீசார் எனவே ரவுடிகளால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சோழவரம் அருகே என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகளான முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் அப்பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுதல், மாமூல் தர மறுப்பவர்களை தீர்த்துக் கட்டுவது போன்ற குற்ற செயல்களில் துணிச்சலாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில்தான் இருவரும் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருக்கிறார்கள். இது போன்று குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் அடுத் தடுத்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக ரவுடிகளின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் ஏ மற்றும் ஏ பிளஸ் வகையை சேர்ந்த ரவுடிகள் 100-க்கும் மேற்பட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் சில ரவுடிகளை தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்று தெரிவித்துள்ள போலீசார் அவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஏ பிளஸ், ஏ, பி, சி, பிரிவு ரவுடிகள் என மொத்தமாக 1,500-க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரவுடிகளை கண்காணிப்பது என்பது மிகப்பெரிய வேலை. அதனை சென்னை போலீசார் கச்சிதமாகவே செய்து வருகிறார்கள். குறிப்பாக ரவுடிகளின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கிறோம். ரகசியமாக தகவல் தெரிவிப்பதற்காக ஆட்களும் இருக்கிறார்கள்.

    இதன் மூலமாக ரவுடிகள் என்ன செய்தாலும் எங்களுக்கு தெரிந்துவிடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் கொட்டம் படிப்படியாக ஒடுக்கப்படும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரவுடிகளை ஒழிப்பதற்கான அதிரடி வேட்டை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்கள் இரவு முதல் அதிகாலை வரையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.
    • போலீசாரின் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரமாக இருக்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் சென்னையில் நடை பெறாமல் தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் நகரம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்கள் இரவு முதல் அதிகாலை வரையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இது தவிர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பெரியமேடு, எழும்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். தங்குபவர்களின் பெயர் விவரங்கள், ஆதார்எண் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும் ரவுடிகள் செயல்பாட்டை கண்காணித்து பிடிக்கவும் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். பழைய மற்றும் புதிய குற்றவாளிகள், கொலை, கொள்ளை, வழிபறி சம்பவங்களை தடுக்கும் வகையில் அதிரடி வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை வரையில் போலீசாரின் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரமாக இருக்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் ஆயுதங்கள், போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும் தலைமறைவாக உள்ள பழைய குற்றவாளிகளை வேட்டையாடி கைது செய்யவும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு போலீசார் லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர். 377 லாட்ஜுகள் மற்றும் 100 மேன்சன்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் எதற்காக அறை எடுத்து உள்ளனர்? அவர்களது முகவரி சரியானதுதானா? என்பதை எல்லாம் போலீசார் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காட்டும் கேமராவையும் போலீசார் பயன்படுத்தினர்.

    இதில் 4123 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 4 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். பிடிபட்ட இந்த குற்றவாளிகள் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் ஆயுதங்கள், போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    லாட்ஜுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்றது. சென்னை மாநகரம் முழுவதும் 7195 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டியதாக மொத்தம் 60 பேர் பிடிபட்டனர். இது தவிர விதிமீறல் வாகனங்களும் சிக்கின. மொத்தம் 142 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 517 வாகனங்களின் பதிவு எண்கள் சரிபார்க்கப்பட்டதில் முறைகேடாக இயங்கிய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்த வேட்டை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×