search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "police surveillance"

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது
  • குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

  தாராபுரம்:

  தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள், தங்க நகைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி, பொள்ளாச்சி ரோடு, சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தவிர்க்கவும், சீரான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நகரின் மையப்பகுதியான பூக்கடைக்கார்னரில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (சட்டம்-ஒழுங்கு), சஜினி (போக்குவரத்து), குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

  இப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வண்ணம் 24 மணி நேரமும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் நடமாட்டத்தையும தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் "பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது பணம் மற்றும் நகைகள்,செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினர். 

  • ரவுடிகளால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
  • குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் அடுத்தடுத்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார்கள்.

  சென்னை:

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.

  இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ரவுடி ஒழிப்பு பிரிவு படையினரும், உளவு பிரிவு போலீசாரும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ரவுடிகளை ரகசியமாகவும், தீவிரமாகவும் கண்காணித்து வருகிறார்கள்.

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டி பண வசூலில் ஈடுபடுவது என்பது ரவுடிகளின் திரைமறைவு தொழிலாகவே இருந்து வருகிறது. இது போன்ற மாமூல் வசூல் வேட்டையில் ஏ பிளஸ் மற்றும் ஏ வகையை சேர்ந்த ரவுடிகளே ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள்தான் கூலிப்படை கும்பல் தலைவனாகவும் செயல்படுகிறார்கள். இவர்கள் நில விவகாரங்களில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதும் உண்டு.

  தொழிற்சாலைகளை நடத்தி வரும் தொழில் அதிபர்களை போனில் அழைத்து பேசி மிரட்டி பணம் பறிப்பது ஏ மற்றும் ஏ பிளஸ் வகை ரவுடிகளின் தினசரி செயல்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ரவுடிகள் கொன்று விடுவார்களோ? என பயந்து போய் புகார் அளிக்க முன் வருவதில்லை.

  ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுக்காவிட்டால் உயிரோடு இருக்க முடியாது என்று ரவுடிகள் மிரட்டுவதால் உயிருக்கு பயந்து பலர் புகார் அளிப்பது இல்லை என்கிறார்கள் போலீசார்.

  இதன் காரணமாகவே சத்தமின்றி ரவுடிகள் தங்களது மாமூல் வேட்டையை தொடரும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று கூறும் போலீசார் எனவே ரவுடிகளால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

  சோழவரம் அருகே என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகளான முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் அப்பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுதல், மாமூல் தர மறுப்பவர்களை தீர்த்துக் கட்டுவது போன்ற குற்ற செயல்களில் துணிச்சலாக ஈடுபட்டு வந்தனர்.

  இந்நிலையில்தான் இருவரும் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருக்கிறார்கள். இது போன்று குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் அடுத் தடுத்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக ரவுடிகளின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  சென்னை போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் ஏ மற்றும் ஏ பிளஸ் வகையை சேர்ந்த ரவுடிகள் 100-க்கும் மேற்பட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் சில ரவுடிகளை தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்று தெரிவித்துள்ள போலீசார் அவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஏ பிளஸ், ஏ, பி, சி, பிரிவு ரவுடிகள் என மொத்தமாக 1,500-க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

  இது தொடர்பாக ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  ரவுடிகளை கண்காணிப்பது என்பது மிகப்பெரிய வேலை. அதனை சென்னை போலீசார் கச்சிதமாகவே செய்து வருகிறார்கள். குறிப்பாக ரவுடிகளின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கிறோம். ரகசியமாக தகவல் தெரிவிப்பதற்காக ஆட்களும் இருக்கிறார்கள்.

  இதன் மூலமாக ரவுடிகள் என்ன செய்தாலும் எங்களுக்கு தெரிந்துவிடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் கொட்டம் படிப்படியாக ஒடுக்கப்படும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரவுடிகளை ஒழிப்பதற்கான அதிரடி வேட்டை தொடரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
  • வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

  புதுச்சேரி:

  புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:-

  புதுவை சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள்கள், கார்களுக்கு ரூ.1,000-மும், வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். இதற்காக புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

  புதுவை கடற்கரை சாலை பகுதியில் மணிக்கு 20 கி.மீ. வேகத்திலும், டவுண் பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, சுப்பையா சாலை, அண்ணா சாலை, கடலூர் சாலை (வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் அரியாங்குப்பம் பாலம் வரை), கடற்கரை சாலை முதல் வில்லியனூர் ஆரிய பாளையம் பாலம் வரை, காமராஜர் சாலை , ராஜீவ்காந்தி சிலை முதல் பாண்லே வரை மரப்பாலம் சந்திப்பு முதல் முத்தியால்பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.

  அரியாங்குப்பம் பாலம் முதல் முள்ளோடை சந்திப்பு வரை, ஆரிய பாளையம் பாலம் முதல் மதகடிப்பட்டு எல்லை வரை, முத்தியால்பேட்டை மார்க்கெட் முதல் கனகசெட்டிகுளம் எல்லை வரை, 50 கி.மீ. வேகம் வரை இயக்கலாம். அதே நேரத்தில் இந்த பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், மார்க்கெட் பகுதிகளில் 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.

  வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார். 

  • விழுப்புரம் பஸ் நிலையத்தில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போதை பொருட்களான குட்கா, கஞ்சா, பான் மசாலா போன்ற பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் தொடர் போதை பொருள் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தத் தொடர் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் பல்வேறு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு போலீஸ் டி .எஸ். பி ரவி, மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ ,ரவுடிகள் கண்காணிப்பு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்ட் மற்றும் இவர்களது தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகே சந்தேகப்படும்படி இருந்த 2 நபரை அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கி பிடி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ குட்கா கஞ்சா போன்ற போதை பொருள்கள் கடத்துவது தெரிவ வந்தது. மேலும் இவர்கள் விழுப்புரம் கண்டாச்சிபுரம் கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (28) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தநாடு அருகே மட்டிகை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் (26) இவர்கள் மினி லாரி டிரைவர் மற்றும் மீன் விற்பனையும் மோட்டார் சைக்கிளில் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் இந்த போதைப் பொருள்களை வியாபார ரீதியாக சென்னையில் இருந்து நண்பர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதால் தூத்துக்குடி முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். #sterliteissue #supremecourt

  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர், காற்று மாசு ஏற்படுவதாக கூறி பல்வேறு கிராம மக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடந்தது. 100-வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 14 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

  இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

  பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தூத்துக்குடி பேராசிரியை பாத்திமாபாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு மதுரை ஐகோர்ட்டு தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

  இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நார்மன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது வைகோவும் ஆஜராகி தனது மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த அனைத்து மனுக்களையும் விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று நேற்று தீர்ப்பு கூறினார்கள்.

  இதைத்தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், பண்டாரபுரம், மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

  ஏற்கனவே தூத்துக்குடியில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15.12.18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்தவுடன், முதல்அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

  இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுனர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும்.

  இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை. மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது.

  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.

  நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

  இவ்வாறு கலெக்டர் கூறினார். #sterliteissue #supremecourt

  ஆரல்வாய்மொழி அருகே போலீஸ் கண்காணிப்பில் எஸ்.ஏ. ராஜா மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  நாகர்கோவில்:

  நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மறைந்த எஸ்.ஏ. ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா (வயது 55). இவர், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ஜான்சல் ராஜா ஆரல்வாய்மொழி அருகே உள்ள கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இவரை ஒடிசா மாநில போலீசார் வழக்கு ஒன்றில் கைது செய்து நாகர்கோவில் ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

  ஜான்சல் ராஜாவை வருகிற 30-ந்தேதி ஒடிசா கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜான்சல் ராஜா திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஜான்சல் ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  ஒடிசா மாநில போலீசாரும் குமரி மாவட்ட போலீசாரும் ஜான்சல் ராஜா சிகிச்சை பெறும் வார்டின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் கண்காணிப்பில் அவருக்கு இன்று 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரை ஒடிசா மாநில போலீசார் அங்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

  இதற்கிடையே ஜான்சல் ராஜாவின் வக்கீல்கள் மதுரை ஐகோர்ட்டில் அவருக்கு ஜாமீன் கேட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
  ×