search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thangam Thennarasu"

    • அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து தலைமை என்ஜினீயர்கள், மேற்பார்வை என்ஜினீயர்களுடன் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
    • மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு மின் பராமரிப்பு பணிகள், பழுதடைந்த மற்றும் சாய்வான மின்கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல், புதிதாக நிறுவப்பட வேண்டிய பில்லர் பெட்டிகள், மழைக்காலத்தின்போது தண்ணீர் தேங்குவதன் பொருட்டு பில்லர் பெட்டிகளை உயர்த்துதல், மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட மின் வினியோக தொடர்பான பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து தலைமை என்ஜினீயர்கள் மற்றும் மேற்பார்வை என்ஜினீயர்களுடன் சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

    தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ள தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரியான உயரத்தில் மாற்றியமைக்க புதிய மின்கம்பங்கள் நிறுவுதல், மின்பகிர்மான பெட்டி பராமரிப்பு, மரக்கிளைகளை அகற்றுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை உரிய முறையில் முன் அறிவிப்பு செய்து அதிகநேரம் மின்தடை ஏற்படாமல் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.

    மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க சிறப்பு பெயர் மாற்ற முகாமை அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் 24-ந் தேதி முதல் நடத்திட உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குனர் விசு மஹாஜன், மேலாண்மை இயக்குனர் (மின் தொடரமைப்பு கழகம்) மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார்.
    • ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை.

    ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறார்கள். அது ஒரே பாரதம் ஒரே இந்தியா கொள்கைக்கு பொருந்தாத ஒன்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தியாகிகளின் நினைவு மற்றும் வரலாற்றை அழிக்கும் வகையில் பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

     

    ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டிக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

    அதில், "கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை பார்க்கும் போது அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்திருப்பது போல் தெரிகிறது. ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான். ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை."

    "ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் அவர் செய்து கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம். எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி நிர்வாக விவரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார் ஆளுநர்."

    "மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பம் இல்லை என்றால், வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர, அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவியல்ல. ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது." என்று தெரிவித்தார்.

    • பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
    • தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம்.

    விருதுநகர் :

    விருதுநகர் மாவட்டம மல்லாங்கிணற்றில் கூட்டுறவுத்துறை சார்பில் சுயஉதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    இதில் 179 மகளிர் குழுக்களை சேர்ந்த 1777 பேருக்கான கடன்தொகை ரூ.3 கோடியே 5 ஆயிரம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழை சுயஉதவி குழு பெண்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மகளிருக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், இதே போன்று, இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் வழங்கக்கூடிய நாள் வரும். இந்த மண்ணில் பெண்ணாக பிறந்ததற்காக உரிமைத்தொகை ரூ.1,000 இன்னும் மூன்றே மாதத்தில் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

    தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம். எனவே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    • புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை ஆளுநரிடம் கோரிக்கை மனுவாக அளித்ததாக அமைச்சர் விமர்சனம்
    • பாஜக தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்குகிறது

    சென்னை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 10 பக்க மனுவை கவர்னரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக தெரிவித்தார். கமிஷன், கலெக்சன், கரெப்சன் தான் திராவிட மாடலாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து, பொய்களின் ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.

    அதிமுகவை யார் கைப்பற்றுவது என்று அவர்களுக்கிடையே ஒரு பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் தான் வெற்றி பெற வேண்டி தன் எஜமானர்களை சந்தித்துவிட்டு அதே கையோடு இப்போது தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்பு திடீரென வந்தவுடன் ஆளுநரை சந்தித்திருக்கிறார்.

    அந்த அறிக்கையில் அவர் சொன்னதாக பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23ம் தேதி நடந்தது. கனியாமுர் பள்ளி சம்பவம் ஜூலை 17ல் நடந்தது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் நவம்பர் 15ல் நடந்தது. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பல மாத இடைவெளியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், திடீரென ஞானோதயம் வந்தவராக, இன்று ஆளுநரிடம் கூறியிருப்பதற்கு என்ன உண்மையான காரணம்? என்ன என்று தெரியவில்லை.

    ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து வைத்து அப்போதைய ஆளுநர் சமரச உடன்படிக்கை உருவாக்கியதுபோல், இப்போது இருக்கக்கூடிய உள்கட்சி போட்டா போட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு ஆளுநரிடம் போய் முறையிட்டாரா? என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுகிறது.

    இன்னொரு பக்கம், தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்கி அதன் வாயிலாக நாங்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்கிற தோற்றத்தை தொடர்ச்ச்சியாக எழுப்பி அதை நிலைநிறுத்தக்கூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறபோது, பாஜகவுக்கு பதிலடி கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்போடு மட்டும் ஆளுநரை சந்தித்திருப்பது ஏன்? இப்போதாவது இந்த விழிப்பு வந்திருக்கிறதே?

    அவர்கள் யாரை கொழுகொம்பாக நம்பி பற்றியிருக்கிறார்களோ, அவர்களே அவர்களுக்கு சத்ருவாக உள்ளே இருக்கிறார்கள் என்ற ஞானோதயம் இப்போதாவது அவருக்கு வந்திருக்கிறதே என எண்ணுகிறேன்.

    ஒருவேளை, பாஜகவில் இப்போது உள்ள உட்கட்சி பிரச்சனையை திசைதிருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு கருவியாக மாறி ஆளுநரை சந்தித்து நாடகத்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    • சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும்.
    • புதிய விமான நிலையத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை விலையைவிட கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும்

    சென்னை:

    தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பயணிகள் போக்குவரத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) (2009-2019 காலத்தில்), சராசரியாக 9 விழுக்காடு ஆகும். இவ்வளர்ச்சி விகிதத்தின்படி, தற்போதைய விமான நிலையம் அதன் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகும், 2028 ஆம் ஆண்டில் அதன் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் என்ற எண்ணிக்கையை எட்டும்.

    தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில், பொது மக்கள் வசிக்கும் நிறைய குடியிருப்புகளும் கட்டடங்களும் நிறைந்திருப்பதாலும், நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அவசியம் தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும். மேலும், ஏற்கனவே அமைந்துள்ள மூன்று விமான நிலைய முனையங்கள் (Terminals) மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் நான்காவது முனையம் ஆகியவை இணையாக அமைந்துள்ளதால், முனையங்களுக்கு அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்தினை தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைப்பது கடினமாகும்.

    சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்களின் வளர்ந்து வரும் வணிகம், வர்த்தகம், தொழில்கள், சுற்றுலா, விமான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சென்னைக்கு அருகில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பது மிகவும் இன்றியமையாததாகும். மேலும், சென்னையுடன் தமிழ்நாட்டின் இதர நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைப்பதற்கும், உலக வளர்ச்சியுடன் இணைந்து செயல்படுவதற்கும், புதிய விமான நிலையத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    இந்திய விமானப் பயணிகள் போக்குவரத்தில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், 2008ம் ஆண்டில் மூன்றாவது இடத்தை வகித்தது. தற்போது, 5வது இடத்தினை வகிக்கிறது. 2008ம் ஆண்டில், 5வது இடம் வகித்த அப்போதைய பெங்களூர் விமான நிலையம், புதிய விமான நிலையம் அமைத்தப் பின், சென்னை விமான நிலையத்தை விட அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை முறையே 14 விழுக்காடு மற்றும் 12 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 9 விழுக்காடு மட்டுமே.

    2028ற்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லையெனில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கமடையும். மேலும், விமானப் போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    எனவே தான் பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம், அடுத்த 30-35 வருடங்களுக்கான எதிர்கால விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படவுள்ளது. மேலும், தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்துவதற்கும், விமான நிலைய முனையம் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு அமைப்பதற்கும், சுமார் 4700 ஏக்கர் தொடர்ச்சியான நிலங்கள் தேவைப்படுகின்றது. பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தொடர்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு மற்றும் சமூக பொருளாதார காரணிகளை கருத்திற்கொண்டு, பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

    பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி (360 ஏக்கர்) திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளே இருந்தாலும், அதனை ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும்.

    புதிய விமான நிலைய திட்ட பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் நீர்நிலைகள், விவசாய நிலங்களின் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள நீர்நிலைகள் தேவைப்படும் இடங்களில் ஆழப்படுத்தப்படும். விமான நிலைய திட்டப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், வடிகால் மூலம் சுற்றியுள்ள நீர்நிலைகளுடன் இணைக்கப்படும். இந்நீர் சுற்றுப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் முதலில் நிரம்பும் வகையிலும், பின்பு அதிகப்படியான நீர் கால்வாயில் வெளியேறும்படியும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

    புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்வதற்கும், அதனை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும், ஒரு உயர்மட்ட தொழில் நுட்ப குழு அமைக்கப்படும். இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததான இப்புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு, விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கும் சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்கும்.

    சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் (ICAO) ஆய்வின்படி, விமான போக்குவரத்திற்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 325 ரூபாய் அளவிற்கு பொருளாதார பலன்கள் கிடைக்கும் (3.25 மடங்கு) மற்றும் ஒவ்வொரு 100 நேரடி வேலை வாய்ப்புக்கும் 610 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    இப்புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு அதிகமாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமின்றி, விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களையும் அவர்கள் கிடைக்கப் பெறுவர்.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    ×