search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போட்டா போட்டி காட்டா குஸ்தி... ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க காரணம் இதுதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளாசல்
    X

    போட்டா போட்டி காட்டா குஸ்தி... ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க காரணம் இதுதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளாசல்

    • புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை ஆளுநரிடம் கோரிக்கை மனுவாக அளித்ததாக அமைச்சர் விமர்சனம்
    • பாஜக தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்குகிறது

    சென்னை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 10 பக்க மனுவை கவர்னரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக தெரிவித்தார். கமிஷன், கலெக்சன், கரெப்சன் தான் திராவிட மாடலாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து, பொய்களின் ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.

    அதிமுகவை யார் கைப்பற்றுவது என்று அவர்களுக்கிடையே ஒரு பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் தான் வெற்றி பெற வேண்டி தன் எஜமானர்களை சந்தித்துவிட்டு அதே கையோடு இப்போது தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்பு திடீரென வந்தவுடன் ஆளுநரை சந்தித்திருக்கிறார்.

    அந்த அறிக்கையில் அவர் சொன்னதாக பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23ம் தேதி நடந்தது. கனியாமுர் பள்ளி சம்பவம் ஜூலை 17ல் நடந்தது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் நவம்பர் 15ல் நடந்தது. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பல மாத இடைவெளியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், திடீரென ஞானோதயம் வந்தவராக, இன்று ஆளுநரிடம் கூறியிருப்பதற்கு என்ன உண்மையான காரணம்? என்ன என்று தெரியவில்லை.

    ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து வைத்து அப்போதைய ஆளுநர் சமரச உடன்படிக்கை உருவாக்கியதுபோல், இப்போது இருக்கக்கூடிய உள்கட்சி போட்டா போட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு ஆளுநரிடம் போய் முறையிட்டாரா? என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுகிறது.

    இன்னொரு பக்கம், தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்கி அதன் வாயிலாக நாங்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்கிற தோற்றத்தை தொடர்ச்ச்சியாக எழுப்பி அதை நிலைநிறுத்தக்கூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறபோது, பாஜகவுக்கு பதிலடி கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்போடு மட்டும் ஆளுநரை சந்தித்திருப்பது ஏன்? இப்போதாவது இந்த விழிப்பு வந்திருக்கிறதே?

    அவர்கள் யாரை கொழுகொம்பாக நம்பி பற்றியிருக்கிறார்களோ, அவர்களே அவர்களுக்கு சத்ருவாக உள்ளே இருக்கிறார்கள் என்ற ஞானோதயம் இப்போதாவது அவருக்கு வந்திருக்கிறதே என எண்ணுகிறேன்.

    ஒருவேளை, பாஜகவில் இப்போது உள்ள உட்கட்சி பிரச்சனையை திசைதிருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு கருவியாக மாறி ஆளுநரை சந்தித்து நாடகத்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    Next Story
    ×