search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple land"

    • மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • மீட்கப்பட்ட இடங்களில் கோவில் சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பல நூறு ஏக்கர்கள் உள்ளன. கோவில்களுக்கான தினசரி பூஜை, பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான வருவாயைப் பெறும் வகையில் வழங்கப்பட்ட இந்த கோவில் நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.அவற்றை மீட்டெடுக்க தற்போது அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உடுமலை தாலுகா வாகத்தொழுவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் திருப்பூர் இணை ஆணையரின் உத்தரவுப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த இடத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் ரூ. 3 கோடி மதிப்புள்ள 10.69 ஏக்கர் நிலத்தை தானாகவே ஒப்படைக்க முன் வந்தனர். மேலும் கொங்கல்நகரம் மாரியம்மன், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 17.88 ஏக்கர் புன்செய் நிலத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஒப்படைக்க முன்வந்தனர். இதனையடுத்து திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர் சுமதி, செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் இடம் மீட்கப்பட்டு கோவில் சார்பாக அந்த இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

    உடுமலை தாலுகாவில் 2 கோவில்களுக்குச் சொந்தமான ரூ. 6 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 28.57 ஏக்கர் புன்செய் நிலங்கள் மீட்கப்பட்ட தகவலால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கோரிக்கை மனுவை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடமும் பொதுமக்கள் அளித்தனர்.
    • கோயில் திருப்பணி தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரவேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் ராஜசேகரன் தலைமையில் சேடபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகராட்சி 2 வது வார்டு சேடபாளையத்தில் பிள்ளையார், மாரியம்மன், மாகாளியம்மன், சென்னியாண்டவர் கோயில்கள் உள்ளன. இவை சுமார் 200 ஆண்டுகள் பழமையானவையாகும். தற்போது இந்த கோயில்கள் சிதிலமடைந்த காரணத்தினால் புதிய கோயில் கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளோம். நாரணாபுரம் கிராமம் நத்தம் சர்வே எண் 687 சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் மைதானத்தை சுத்தம் செய்து புதிய கோயில் கட்டட பணிகளை தொடங்க உள்ளோம். கோயில் நிலத்திற்கு அருகில் உள்ள தனிநபர் ஒருவர் கோயிலுக்கு சொந்தமான இடத்தையும், பொது கிணற்றையும் ஆக்கிரமித்து அதில் மதில் சுவர் மற்றும் குடியிருப்புகள் கட்டியுள்ளார். கோயில் திருப்பணி தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரவேண்டும். மேலும் அதே பகுதியில் நத்தம் சர்வே எண் 148 சாலையில் நீரோடையினை முழுமையாக ஆக்கிரமித்து குடியிருப்புகளுக்கு கழிவறைகள் அமைத்துள்ளார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார். அந்த இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போல கோரிக்கை மனுவை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடமும் பொதுமக்கள் அளித்தனர்.

    ×