search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shivan temple"

    சிவபெருமான் லட்சுமிக்கு அருளியதால் இத்தலத்திற்கு லட்சுமிபுரம் என்ற பெயரும் உண்டு. அதனாலேயே இறைவன் லட்சுமிபுரீஸ்வரர் என்ற நாமகரணம் பூண்டார்.
    சோழ மன்னனான கோச்செங்கோட்சோழன், தில்லை என்னும் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க விரும்பினான். அதற்காக தனது மந்திரியுடனும், படைவீரர்களுடனும் தில்லை நோக்கிப் பயணமானான். மன்னன் பல்லக்கிலும், மந்திரியும் மற்ற வீரர்களும் நடந்தும் பயணத்தைத் தொடர்ந்தனர். பகலிலும் இரவிலும் நடந்த அவர்கள் இரவில், காடா விளக்கின் துணையோடு காட்டுப்பகுதியைக் கடந்தனர்.

    திருநின்றியூர் என்ற ஊரை அடைந்த போது நன்றாக இருட்டிவிட்டது. காடா விளக்குடன் அவர்கள் நடக்க முயன்ற போது, அந்த ஊரின் எல்லையைத் தொட்டதும் அனைத்து காடா விளக்குகளும் அணைந்தன. மீண்டும் ஏற்றிய போதும் அவை மறுபடியும் அணைந்தன. விளக்கு அணைந்ததால், நல்ல கும்மிருட்டு. தட்டுத் தடுமாறி, ஊரின் எல்லையைக் கடந்த பின்னர், காடா விளக்கை ஏற்ற அது நன்றாக எரிந்தது.

    மன்னருக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தில்லை சென்று ஆடலரசனை தரிசனம் செய்துவிட்டு மன்னரும் மற்றவர்களும் திரும்பினர். வரும் வழியில் திருநின்றியூரில் மறுபடியும் காடா விளக்குகள் குறிப்பிட்ட அதே இடத்திற்கு வந்ததும் அணைந்தன. இதற்கு என்ன காரணம் என்று அறிந்து வர மந்திரியை பணித்தார் மன்னர்.

    விடிந்தது.. மந்திரி யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து சுற்றிலும் பார்வையை படரவிட்டபோது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

    அவனை அழைத்து இந்த ஊரில் ஏதாவது விசேஷம் உண்டா? எனக்கேட்டார் மந்திரி. ‘உண்டு’ என்ற அந்தச் சிறுவன்.. ‘தினம் இரவில் காமதேனு வானிலிருந்து இங்கே ஓரிடத்தில் வந்து இறங்கி, அங்கே பாலை சுரக்கிறது’ என்று ஓரிடத்தை சுட்டிக்காட்டினான். வியந்த மன்னரும், மந்திரியும் அவன் சுட்டிக் காட்டிய இடத்தை நோக்கி நடந்தனர். சிறிது தொலைவு சென்றதும் மன்னரின் கால் சேற்றில் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து விடுபட அவரால் இயலவில்லை.

    மந்திரி பெரிய கல் போன்ற ஒரு இரும்பு குண்டைக் கொண்டு வந்தார். ‘மன்னா! இதை சேற்றில் ஊன்றி மேலே வாருங்கள்’ என்றார் மந்திரி.

    அவர் சொன்னபடியே மன்னர் அந்த இரும்பு குண்டை வாங்கி தரையில் பலமாக ஊன்றினார். மறுகணம் தரையிலிருந்து ரத்தம் பீரிட்டது. பதறிப்போன மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்ய அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கக்கண்டார். அனைவருக்கும் வியப்பு. மன்னன் கண்டெடுத்த அந்த சிவலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயமே திருநின்றியூரில் உள்ள ‘லட்சுமி புரீஸ்வரர்’ ஆலயம்.

    கோவில் அமைப்பு :

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் அகன்று விரிந்த பிரகாரம். நடுவே நந்தியும் பலிபீடமும் உள்ளன. தொடர்ந்து சிறப்பு மண்டபமும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்க இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அதை அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளது. கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.


    லட்சுமி புரீஸ்வரர், உலகநாயகி

    மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி உலகநாயகி, நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் பத்மமும், அட்சயமாலையும் அலங்கரிக்க கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன.

    இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அருள்புரிகின்றன. திருச்சுற்றில் பிள்ளையார், பரிகேஸ்வரர், மகாவிஷ்ணு, பரசுராமர், சுப்ரமணியர், நால்வர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர் என மூவராலும் பாடப் பெற்ற தலம் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான இந்த ஆலயத்தில், திரிபுவன சக்கரவர்த்தி ராஜ ராஜ தேவனின் கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    சிவபெருமானை நினைத்து, மகாலட்சுமி வரம் வேண்டி தவம் இருந்த தலம் இது. அவளது தவத்தைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றி ‘என்ன வரம் வேண்டும்?’ என வினவினார்.

    மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, ‘தான் என்றும் விஷ்ணுவின் மார்பில் குடியிருக்க வேண்டும்’ என்று வேண்ட சிவபெருமானும் அப்படியே அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு.

    சிவபெருமான் லட்சுமிக்கு அருளியதால் இத்தலத்திற்கு லட்சுமிபுரம் என்ற பெயரும் உண்டு. அதனாலேயே இறைவன் லட்சுமிபுரீஸ்வரர் என்ற நாமகரணம் பூண்டார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் அவர்களின் துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தல இறைவிக்கு சந்தனக்காப்பிட்டு, அந்த சந்தனத்தை பிரசாதமாக தினமும் பயன்படுத்தினால், மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற சொல்படி தந்தை கட்டளையிட தன் தாயைக் கொன்றார் பரசுராமர். பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றியது. தனது தோஷம் நீங்க இத்தல இறைவனை சரணடைந்து பாவவிமோசனம் பெற்றார் பரசுராமர். அவரது திருமேனி ஆலயத்தில் மேற்கு திருச் சுற்றில் தனி சன்னிதியில் உள்ளது.

    ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பல நூறு பக்தர்கள் இறைவனை தரிசித்து அன்று பலன் பெறுகின்றனர்.

    இந்தக் கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை - சீர்காழி பேருந்து தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது திருநின்றியூர். 
    பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.
    அம்மனின் பாதங்கள் கொண்ட கோவில், சோழப்பேரரசியின் பெயரால் உருவான திருத்தலம், சித்தர் சமாதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.

    இந்த இறைவன் முன்காலத்தில் குலோத்துங்கச் சோழீஸ்வரமுடைய மகாதேவன் என்று அழைக்கப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. தினசிந்தாமணி என்ற பேரரசியின் பெயரால் அழைக்கப்பட்ட இவ்வூர், இன்று ‘சிந்தாமணி’ என்று வழங்கப்படுகிறது. முதலாம் குலோத்துங்கசோழனின் பேரரசி மதுராந்தகி. இவளுக்கு தினசிந்தாமணி என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. இவளின் பெயரால் சோழமன்னன் உருவாக்கிய தலமே இன்றைய சிந்தாமணி

    ஆலயஅமைப்பு :

    ஊரின் கடைக்கோடியில் வயல்வெளிகள் சூழ இயற்கையான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், ராஜகோபுரம் ஏதுமில்லை என்றாலும், விசாலமான இடத்தில் ஆலயம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் வேம்பும், அரசும் காணப்படுகின்றன. அருகே விஸ்வரூப அனுமன் வணங்கிய நிலையில் காட்சிதருகிறார். அருகே, நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. சற்று நடந்ததும், அம்மன் சன்னிதி தனிச் சன்னிதியாக கிழக்கு முகமாய்க் காட்சியளிக்கிறது. அன்னை தையல்நாயகி என அழைக்கப்படுகின்றாள். சன்னிதியின் எதிரில் அம்பிகையின் பாதக் கமலங்கள் தனி பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன.

    இதனைக் கடந்த பின் சுவாமி சன்னிதி வருகிறது. பெரியநந்திதேவர் இறைவனை நோக்குகிறது. மகாமண்டபம் கடந்ததும், கருவறை முன்மண்டபம், கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் நீண்ட லிங்கத் திருமேனியராக இறைவன் காட்சிதருகின்றார். குலோத்துங்கச் சோழீஸ்வரமுடையமகாதேவரின் இன்றைய பெயர் வைத்தீஸ் வரர். இங்கு வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதால் இந்த திருநாமத்தைப் பெற்றுள்ளார். இந்தத் திருமேனியும், கோட்டத்தில் அமைந்துள்ள திருமேனிகளும், சுவாமி சன்னிதியும் மட்டுமே பழமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன.

    இவ்வாலயத்தின் சிறப்பு, இங்கு வடிக்கப்பட்டுள்ள சிலா வடிவங்கள அனைத்தும் கலைநயத்தினை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்துவதாகும். நர்த்தன விநாயகர், ஊர்த்துவத் தாண்டவம், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அடிமுடிதேடும் காட்சி, பிரம்மன், அம்மையப்பன், துர்க்கை, காலபைரவர் போன்ற சிலா வடிவங்கள் வெகுசிறப்புடன் அமைந்துள்ளன. இவை சோழ மன்னர்களின் காலத்தை உறுதி செய்கின்றன.

    இது தவிர விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் சன் னிதிகளும் அமைந்துள்ளன. இந்த முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்கிறார்கள். சித்திரகுப்தர், விசித்திரகுப்தர் சன்னிதி சிறிய அளவில் உள்ளது. இவர்கள் எமபயம் போக்கி, உடல்நலம், தருபவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். ஆலய தீர்த்தம் திருக்கோவிலின் ஊறல் குளம். இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், சிக்கலான நோய்கள் கூட விலகி விடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்தக் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரங்களில் துர்க்கை பூஜை, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் பால்குட விழா என அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    சித்தர் பீடம் :

    ஆலயத்தின் ஈசான்ய மூலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமான ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. இவரின் மீது பஞ்சபூதேஸ்வரர் திருமேனியும், ஞானவிநாயகர், நாகங்கள் திருமேனியும், அரசமரமும், வேப்பமரமும் அமைந்துள்ளன. இவரை பவுர்ணமி தினத்தில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவரை வணங்கும் போது பலவித வாசனைகள் வருவதைச் சிலரால் மட்டுமே உணர முடியும் என்று கூறுகிறார்கள்.

    அமைவிடம்:

    விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சாலையோர ஊராக சிந்தாமணி அமைந்துள்ளது. விழுப்புரம், திண்டிவனத்தில் இருந்து எண்ணற்ற பேருந்து வசதி உள்ளது. 
    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.
    கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.

    தலவரலாறு :

    முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும் அழைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்ற போது, கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பலநாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது அதிசயமாக கடம்பக்கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

    இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார்.

    ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் ரத்தம் வடிவது நின்று விடும் எனக்கூறி, அந்த வனப்பகுதியில் சந்தனமரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள், அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து சந்தனத்தை ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். சந்தனத்தைப் பூசியதும் ரத்தம் நின்று விட்டது.

    உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோவில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். சுவாமியின் அற்புத லீலைகளால் சுவாமியின் பெருமை நாடெங்கும் பரவியது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது.



    உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம், விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரைவிசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு, விஜயதசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.

    சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.

    உவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக் காலம், இரவு 7 மணிக்கு சாயரட்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

    அமைவிடம் :

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோ மீட்டர் தூரத்திலும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் ‘திருத்தெளிச்சேரி’ எனவும், ‘கோவில் பத்து’ எனவும் அழைக்கப்படும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு.
    இந்திரப் பதவியில் இருந்த தேவராஜன், விஷிராகரன் என்ற அசுரனைக் கொன்றான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. கொடி வடிவில் அது தொடர்ந்து துன்புறுத்தியது. இதையடுத்து தேவேந்திரன், தொஷ்டா என்பவரை இந்திரப் பதவியில் அமர்த்தி விட்டு பூலோகம் சென்றான்.

    தொஷ்டா தனது புதல்விகளான சாயை, சுவைச்சளை இருவரையும், சூரியனுக்கு மணம் முடித்து வைத்தான். சூரியனின் பிரியம் சுவைச் சளையிடம் மட்டுமே இருந்தது. சாயை தேவியிடம் பாராமுகமாய் நடந்து கொண்டான் சூரியன். இந்த தகவலை நாரதர் மூலம் அறிந்த தொஷ்டாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. சூரியனை ஒளி இழக்கும்படி சபித்தான்.

    தன்னுடைய சாபம் நீங்குவதற்காக சூரியன், தன் தேவியுடன் பூலோகம் அடைந்தான். சமீவனநாதரை நோக்கி தவம் செய்து வணங்கி, லிங்கத்திற்கு மேல் பாகத்தில் தாமரை ஓடை உண்டாக்கி, அந்த நீரால் இறைவனை வணங்கித் துதித்தான். அவனது பிரார்த்தனை பலித்தது. சமீவன நாதர் அவன் முன் தோன்றி, அவனது சாபத்தை நீக்கியருளினார்.

    சூரியனும் அவரை மகிழ்வோடு வணங்கி ‘நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என்னால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம், என் பெயரால் ‘சூரிய புஷ்கரணி’ என்று அழைக்கப்பட வேண்டும். அதில் நீராடுபவர் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட வேண்டும். தங்களுக்கும் என் நாமத்தால் பெயரிடப்பட வேண்டும். எனக்கு இரு பிள்ளைகள் பிறக்க வேண்டும்’ என்று கேட்க, சமீவனநாதரும் அவ்வாறே அருளினார்.

    இதன்படி இத்தலத்து இறைவன் பாஸ்கரலிங்கம் என்றும், தீர்த்தம் சூரிய புஷ்கரணி எனவும், தலம் பாஸ்கர ஷேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

    காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் பார்வதீஸ்வரர்தான் இந்த பெருமைக்கும் பெயருக்கும் உடையவர். இங்கு அருள்பாலிக்கும் இறைவி பெயர், சுயம்வரத பஸ்வினி என்பதாகும்.

    ஆலயம் அமைந்துள்ள இடம் ‘திருத்தெளிச்சேரி’ எனவும், ‘கோவில் பத்து’ எனவும் அழைக்கப்படும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு. இத்தலம் கிரேதாயுகத்தில் ‘சமீவனம்’ எனவும், துவாபர யுகத்தில் ‘ஆனந்தவனம்’ எனவும் அழைக்கப்பட்டு, இந்த கலியுகத்தில் ‘முக்தி வனம்’ என அழைக்கப்படுகிறது.

    இத்தலத்திற்கு திருத்தெளிச்சேரி என்று பெயர் வந்ததற்கு காரணம் உண்டு.

    ஒரு சமயம் சோழ வள நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. ஊர் எங்கும் மக்கள் பசி பட்டினியால் தவித்தனர். அதனால் இசுவாகு வம்சத்தில் வந்த அரசன் ஒருவன், இத்தல இறைவனை வழிபட்டு மக்களின் வேதனையை போக்கும்படி வேண்டி நின்றான். கருணை கொண்ட இறைவன் மழை பொழியச்செய்தார். பின் இறைவனே உழவனாக வேடங்கொண்டு விதை தெளித்தார். இதனால்தான் இத் தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப் படுகிறது.

    இன்றும் ஆனி மாதம் ‘விதை தெளி உற்சவம்’ இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவன்-இறைவி எதிரே உள்ள சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளி, விதை தெளிக்கும் வைபவம் நடைபெறும். பின்னரே விவசாயிகள் விதை தெளிக்கத் தொடங்குவர்.

    பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை வழிபட்டு, அவரையே மணந்து இறைவனை அடைந்த தலம் இது. எனவே கன்னியர் தாங்கள் விரும்பும் கணவரை அடைய இத்தல இறைவன் அருள்புரிவார் என பக்தர்களின் நம்பிக்கை.



    ஆலய அமைப்பு :

    இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரமும், அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வட திசையில் இறைவி சுயம்வர தபஸ்வினியின் சன்னிதி உள்ளது. அன்னை நான்கு திருக்கரங்களுடன் தென்திசை நோக்கி காட்சி அளிக்கிறாள்.

    திருச்சுற்றில் மேற்கில் வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமி, தெற்கில் நடராஜர்- சிவகாமி, வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் பைரவர், சூரியன், ரேணுகாதேவி, சனீஸ்வரர், பிடாரி அம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இதனை அடுத்து மகாலிங்கமும், தெற்கில் அறுபத்து மூவர் திருமேனிகளும் உள்ளன. தேவக் கோட்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். வடகிழக்கில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது.

    இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. நவராத்திரியின் போது இறைவன்-இறைவிக்கு 9 நாட்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 10-ம் நாள் அம்பு போடும் வைபவம் நடைபெறும். திருக்கல்யாணம், சங்காபிஷேகம், கடைஞாயிறு, வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, புனர்பூசம், திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை தீபம், பிரதோஷம், ஐவர் ஐக்கிய உற்சவம் ஆகியவை திருவிழா நாட்களே.

    சைவத்தை நிலைநாட்டிய சம்பந்தர் :

    தனது தல யாத்திரையின் போது திருஞானசம்பந்தர் சமீவனமான இந்தப் பகுதிக்கு வந்தார். அதுசமயம் சோழநாட்டை வீரசோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சைவத்தின் பெருமை உணராது வேறு ஒரு பிரிவினரை ஆதரித்து வந்தான்.

    அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம், ‘நீங்கள் ஈசனைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்வது உண்மையானால்.. தீயால் காய்ச்சப்பட்ட பீடத்தில் அமர்ந்து அதனை மெய்ப்பித்துக் காட்டுங்கள். ஒரு வேளை நீங்கள் தோற்றுவிட்டால் உங்களை கழுமரத்தில் ஏற்றுவேன்’ என்றான்.

    அதற்கு சம்மதித்த சம்பந்தர், சிவபெருமானை வேண்டிக்கொண்டு ‘வேதங்கள் உண்மையானால், திருநீறு மற்றும் ருத்ராட்சங்கள் அழியாதவை என்பது உண்மையானால், பரமசிவம் ஒருவனே மூல முதல் பொருள் என்பது உண்மையானால், எனக்கு எந்த சிறு துன்பமும் நேராமல் இருக்கட்டும்’ என்று கூறிக்கொண்டே தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்தார்.

    அவருக்கு எந்தவித தீங்கும் நேரவில்லை. வியப்பில் ஆழ்ந்த மன்னன் வீர சோழன், சம்பந்தர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். அவரிடம் உபதேசம் பெற்றான்.

    சூரிய வழிபாடு :


    இத்தலத்தில் நடைபெறும் சூரிய பூஜை மிகவும் விசேஷமானது. இங்குள்ள இறைவனை வழிபட்டு சூரிய பகவான் சாபம் நீங்கப் பெற்றான் அல்லவா? அதனால் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அஸ்தமனச் சூரியன், தன் பொன் நிறக்கதிர்களால் இறைவனை ஆராதனை செய்யும் காட்சியை இங்குக் காணலாம்.

    அந்த நாட்களில் சூரிய பூஜை வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. சூரியனின் கதிர்கள், மூலவரின் கருவறை வழியாக சிவபெருமானின் சிரசில் படும். அது சமயம் தாமரை மலர் கொண்டு மூலவருக்கு சோடச ஆராதனைகளுடன், அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான தீர்த்தங்கள் எதிரே உள்ள சூரிய புஷ்கரணியில் இருந்தே கொண்டு வரப்படும்.

    ஆலயத்தின் தலவிருட்சம் வன்னி மற்றும் வில்வ மரமாகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற சிவ தலம், தற்போது ‘திருச்செங்கோடு’ என்று கூறப்படுகிறது. இறைவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பாகம்பிரியாள் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது.

    இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவ தீர்த்தம். இத்தலமரமாக இலுப்பை மரம் உள்ளது. இது விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம் ஆகும்.

    அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள்.

    மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

    திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது. இதில் இருபாதைகள் உண்டு. ஒன்று நடைப்பயணமாகப் படிக்கட்டு வழிச் செல்வோருக்கானது. மற்றொன்று வாகனம் மூலம் செல்வோருக்கானது. கோவில் நிர்வாகத்தாரால் மலைமேல் செல்ல கட்டணச் சிற்றுந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இந்த மலைக் கோவிலுக்குச் செல்லும் பாதை, 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழக்கு மேற்கில் 262 அடி நீளமும், தெற்கு வடக்காக 201 அடி நீளமும் கொண்டது இந்தக் கோவில். இதன் வடக்கு வாசல் ராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென் திசைகளிலும் இக்கோவிலுக்கு வாசல்கள் உண்டு. அவற்றுள் தென் திசை வாசலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.

    செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இந்த ஆலயம். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாசல் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி இருக்கிறது.

    அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.



    ஆதிசேஷன், மகாவிஷ்ணு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு தனிக்கோவிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, இவருக்கு தனியே கொடியேற்றி 10-ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.

    இக்கோவிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்த நாரீஸ்வரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற லிங்கத்துடன் நாகேஸ்வரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) சன்னிதியும் உள்ளன.

    கோவை மாவட்டத்தில் உள்ள காடாம்பாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாததூளி. இவரது மனைவி சுந்தரியம்மாள். இந்த தம்பதியருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. எனவே அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் ஏறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தான, தருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றிணைந்து திருச்செங்கோடு மலைமீது ராஜகோபுரம் அமைத்துத் தந்துள்ளனர்.

    இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107-வது திருப்பதிகத்திலும், திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116-வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். இக்கோவிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டுவேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனு பூதியில் பாடியுள்ளார்.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்தூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்பு உள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினால் ஆன சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன.

    அமைவிடம்

    அர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மலையின் மீதுள்ளது. இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் திருச்செங்கோடு கயிலாசநாதர் கோவில் உள்ளது. 
    சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது.
    தென்பாண்டிய நாட்டை ஆண்டுவந்த ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன், மிகச் சிறந்த சிவ பக்தன். அவன் ஒருமுறை தம் படைகளோடு நகரை வலம் வந்தான். அப்போது மாலை வேளை நெருங்கியது. தினமும் சாயரட்சையில் பூஜைசெய்து சிவனை வழிபடும் வழக்கமுள்ள ஸ்ரீவல்லபன், வழிபாட்டுக்காக தாமிருந்த பகுதியில் ஆலயம் ஏதாவது உள்ளதா? என்று தேடினான்.

    நீருக்குள் நீலகண்டன் :

    ஆலயம் ஏதுமின்றிப் போகவே, தவித்த மன்னனுக்கு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உதவ முன்வந்தனர். அங்கிருந்த குளத்து மண்ணில் சிவலிங்கம் உருவாக்க முயன்றனர். இதற்காக, களிமண் எடுக்க குளத்துக்குள் மூழ்கியபோது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த கல் விக்கிரகத்தை அரசனிடம் வழங்கினர். அதனைக் கொண்டு சந்தியா கால சிவ பூஜையை நிறைவுசெய்த ஸ்ரீவல்லபன், மனநிறைவுடன் திரும்பிச்சென்றான்.

    அரண்மனைக்குத் திரும்பினாலும், அலுவல் நினைப்பைவிட அரனின் நினைப்பே அந்த அரசனின் சிந்தையில் மேலோங்கியிருந்தது. மன்னனின் மனமுருகிய பக்தியில் நெஞ்சம் நெகிழ்ந்தார் எம்பெருமான். மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘குளத்தில் கண்டெடுத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைத்து வழிபடு’ என்று கூறி மறைந்தார்.

    ஈசனின் கருணைக்கு தாம் ஆட்பட்டு விட்டதை எண்ணி பூரிப்படைந்த ஸ்ரீவல்லபன், மறுநாளே சிவலிங்கத்தைக் கண்டெடுத்த பகுதிக்குச் சென்று, குளத்தில் கிடைத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். ஈசன் விருப்பப்படியே கோவில் அமைத்து அளவிலா ஆனந்தம் கொண்டான்.

    ஈசனைக் குளிர்வித்த பசுக்கள் :

    காலச்சுழற்சியில் இவ்வாலயம் கவனிப்பார் இன்றி, மண்ணுக்குள் புதையுண்டது. எனினும் ஈசனின் திருவிளையாடலால் 600 ஆண்டுகளுக்கு முன்பு வெளியுலகுக்குத் தெரியவந்தது. அவ்வூரில் இருந்த பசு வளர்த்த சிலர், மேய்ச்சலுக்குச் சென்ற தங்களது பசுக்கள் பால் தராதது கண்டு வருந்தினர். பால் தராததற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்ட அவர்கள், ஒருநாள் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களைப் பின் தொடர்ந்தனர்.

    அப்போது மேய்ச்சலை முடித்த பசுக்கள் அனைத்தும் ஓரிடத்தில் கூடிநின்று, தானாகவே பாலைச் சொரிந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். பால் சொரிந்த இடத்தைப் பார்த்தபோது, அதில் ஸ்ரீவல்லப மன்னன் பூஜித்த லிங்கம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஊர்மக்களை ஒன்றுதிரட்டி புதையுண்ட கோவிலை மீட்டுருவாக்கம் செய்து, வழிபாட்டுக்குக் கொண்டு வந்தனர்.

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வாலய நாயகன் கயிலாசநாதர் எனவும், நாயகி ஆவுடையம்மாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். பசு மாட்டின் குளம்படித் தடம் லிங்கத்தின்மீது உள்ளதைக் காணலாம்.


    ஆவுடையம்மாள், இரட்டை பைரவர், கயிலாசநாதர்

    ஆலய அமைப்பு :

    சிவ- விஷ்ணு ஆலயமாக விளங்கும் இத்திருக்கோவிலில், கயிலாசநாதருக்குப் பின்புறமுள்ள சன்னிதியில் கோமளவல்லி மற்றும் குமுதவல்லித் தாயார்கள் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இந்தப் பெருமாளை வழிபட்டால் குடும்பப் பிரச்சினைகள் தீரும். பூந்தி, லட்டு, கற்கண்டு படையலிட்டு, துளசி மாலை சாத்தி, நெய் தீபமேற்றி இந்தப் பெருமாளை வழிபடுவது சிறப்பு.

    வேளாண்மைப் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு ஆலயத்தில் வழிபாடு செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி வயல்கள் சூழ அமைந்துள்ள இந்த சிவனை வழிபாடு செய்வோருக்கு செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது திண்ணம். உடலும் ஆரோக்கியம் பெறும். ஆவுடையம்மாளை ஆடித் தபசுக் காலத்தில் வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது; குழந்தை வரமும் கிடைக்கிறது. இங்கு தட்சிணாமூர்த்தி சிரசில் லிங்கம் அமைத்திருப்பது விசித்திரமான காட்சி.

    இரட்டை பைரவர் :

    நவக்கிரகங்கள் தத்தமது வாகனத்துடன் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சம். இதையடுத்து ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்கள் வீற்றிருப்பது அபூர்வமானது. இவர் களுள் ஒருவருக்கு வாகனம் இல்லை. ஒரு பைரவர் உயரமானவர், மற்றொருவர் உயரம் குறைவானவர். இந்த இரட்டை பைரவர்களைத் தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை வேளையில் வழிபாடு செய்தால், செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

    தொழில், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் ஐந்து தேய்பிறை அஷ்டமி திதியில், 60 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் இட்டு, நல்லெண்ணெய்யில் இரண்டு தீபங்கள் ஏற்றி, தயிர்ச் சாதம் படைத்து இரட்டை பைரவரை வழிபட நஷ்டம் நீங்கி, பெருத்த லாபம் ஏற்படும். புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குபவர்களும் இங்கு வந்து பைரவரை வழிபட்டு பயன் பெறலாம்.

    இந்த ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை மகாதீபம், மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். இவ்வாலய தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் வருண தீர்த்தம். ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    பெயர்க் காரணம் :

    தம் முன்னோர்களுக்கு ஈஸ்வரம் அமைக்கும் மகாபாக்கியம் கிடைத்ததை பெரும்பேறாகக் கருதிய ஸ்ரீவல்லப பாண்டியனின் வழித்தோன்றலான மாறவர்மன் சுந்தரபாண்டியன், இப்பேறு கிடைக்க மக்கள் செய்த உதவிக்குப் பிரதிபலனாக, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து அந்தப் பகுதி மக்களுக்கு விலக்கு அளித்தான். இதனால் அப்பகுதி ‘மாறன் தாய நல்லூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘மாறன்’ என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். ‘தாயம்’ என்பதற்கு ‘உரிமை’ என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை மக்களுக்கு விட்டுக்கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும் படியாக அப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது ‘மாறாந்தை’ என அழைக்கப்படுகிறது.

    12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கல்வெட்டில், இவ்வூர் ‘விக்கிரம பாண்டியபுரம்’ என்றும், இறைவன் ‘கயிலாசமுடைய நாயனார்’ என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. ஸ்ரீவல்லப பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்கள் இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ள விவரங்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன.

    அமைவிடம் :


    திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்காக 38 கி.மீ. தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் மாறாந்தை உள்ளது. மாறாந்தை பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. அருகில் கோவில் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.
    ×