search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கயிலாசநாதர் கோவில்
  X

  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கயிலாசநாதர் கோவில்

  சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது.
  தென்பாண்டிய நாட்டை ஆண்டுவந்த ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன், மிகச் சிறந்த சிவ பக்தன். அவன் ஒருமுறை தம் படைகளோடு நகரை வலம் வந்தான். அப்போது மாலை வேளை நெருங்கியது. தினமும் சாயரட்சையில் பூஜைசெய்து சிவனை வழிபடும் வழக்கமுள்ள ஸ்ரீவல்லபன், வழிபாட்டுக்காக தாமிருந்த பகுதியில் ஆலயம் ஏதாவது உள்ளதா? என்று தேடினான்.

  நீருக்குள் நீலகண்டன் :

  ஆலயம் ஏதுமின்றிப் போகவே, தவித்த மன்னனுக்கு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உதவ முன்வந்தனர். அங்கிருந்த குளத்து மண்ணில் சிவலிங்கம் உருவாக்க முயன்றனர். இதற்காக, களிமண் எடுக்க குளத்துக்குள் மூழ்கியபோது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த கல் விக்கிரகத்தை அரசனிடம் வழங்கினர். அதனைக் கொண்டு சந்தியா கால சிவ பூஜையை நிறைவுசெய்த ஸ்ரீவல்லபன், மனநிறைவுடன் திரும்பிச்சென்றான்.

  அரண்மனைக்குத் திரும்பினாலும், அலுவல் நினைப்பைவிட அரனின் நினைப்பே அந்த அரசனின் சிந்தையில் மேலோங்கியிருந்தது. மன்னனின் மனமுருகிய பக்தியில் நெஞ்சம் நெகிழ்ந்தார் எம்பெருமான். மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘குளத்தில் கண்டெடுத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைத்து வழிபடு’ என்று கூறி மறைந்தார்.

  ஈசனின் கருணைக்கு தாம் ஆட்பட்டு விட்டதை எண்ணி பூரிப்படைந்த ஸ்ரீவல்லபன், மறுநாளே சிவலிங்கத்தைக் கண்டெடுத்த பகுதிக்குச் சென்று, குளத்தில் கிடைத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். ஈசன் விருப்பப்படியே கோவில் அமைத்து அளவிலா ஆனந்தம் கொண்டான்.

  ஈசனைக் குளிர்வித்த பசுக்கள் :

  காலச்சுழற்சியில் இவ்வாலயம் கவனிப்பார் இன்றி, மண்ணுக்குள் புதையுண்டது. எனினும் ஈசனின் திருவிளையாடலால் 600 ஆண்டுகளுக்கு முன்பு வெளியுலகுக்குத் தெரியவந்தது. அவ்வூரில் இருந்த பசு வளர்த்த சிலர், மேய்ச்சலுக்குச் சென்ற தங்களது பசுக்கள் பால் தராதது கண்டு வருந்தினர். பால் தராததற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்ட அவர்கள், ஒருநாள் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களைப் பின் தொடர்ந்தனர்.

  அப்போது மேய்ச்சலை முடித்த பசுக்கள் அனைத்தும் ஓரிடத்தில் கூடிநின்று, தானாகவே பாலைச் சொரிந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். பால் சொரிந்த இடத்தைப் பார்த்தபோது, அதில் ஸ்ரீவல்லப மன்னன் பூஜித்த லிங்கம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஊர்மக்களை ஒன்றுதிரட்டி புதையுண்ட கோவிலை மீட்டுருவாக்கம் செய்து, வழிபாட்டுக்குக் கொண்டு வந்தனர்.

  சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வாலய நாயகன் கயிலாசநாதர் எனவும், நாயகி ஆவுடையம்மாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். பசு மாட்டின் குளம்படித் தடம் லிங்கத்தின்மீது உள்ளதைக் காணலாம்.


  ஆவுடையம்மாள், இரட்டை பைரவர், கயிலாசநாதர்

  ஆலய அமைப்பு :

  சிவ- விஷ்ணு ஆலயமாக விளங்கும் இத்திருக்கோவிலில், கயிலாசநாதருக்குப் பின்புறமுள்ள சன்னிதியில் கோமளவல்லி மற்றும் குமுதவல்லித் தாயார்கள் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இந்தப் பெருமாளை வழிபட்டால் குடும்பப் பிரச்சினைகள் தீரும். பூந்தி, லட்டு, கற்கண்டு படையலிட்டு, துளசி மாலை சாத்தி, நெய் தீபமேற்றி இந்தப் பெருமாளை வழிபடுவது சிறப்பு.

  வேளாண்மைப் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு ஆலயத்தில் வழிபாடு செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி வயல்கள் சூழ அமைந்துள்ள இந்த சிவனை வழிபாடு செய்வோருக்கு செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது திண்ணம். உடலும் ஆரோக்கியம் பெறும். ஆவுடையம்மாளை ஆடித் தபசுக் காலத்தில் வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது; குழந்தை வரமும் கிடைக்கிறது. இங்கு தட்சிணாமூர்த்தி சிரசில் லிங்கம் அமைத்திருப்பது விசித்திரமான காட்சி.

  இரட்டை பைரவர் :

  நவக்கிரகங்கள் தத்தமது வாகனத்துடன் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சம். இதையடுத்து ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்கள் வீற்றிருப்பது அபூர்வமானது. இவர் களுள் ஒருவருக்கு வாகனம் இல்லை. ஒரு பைரவர் உயரமானவர், மற்றொருவர் உயரம் குறைவானவர். இந்த இரட்டை பைரவர்களைத் தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை வேளையில் வழிபாடு செய்தால், செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

  தொழில், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் ஐந்து தேய்பிறை அஷ்டமி திதியில், 60 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் இட்டு, நல்லெண்ணெய்யில் இரண்டு தீபங்கள் ஏற்றி, தயிர்ச் சாதம் படைத்து இரட்டை பைரவரை வழிபட நஷ்டம் நீங்கி, பெருத்த லாபம் ஏற்படும். புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குபவர்களும் இங்கு வந்து பைரவரை வழிபட்டு பயன் பெறலாம்.

  இந்த ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை மகாதீபம், மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். இவ்வாலய தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் வருண தீர்த்தம். ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  பெயர்க் காரணம் :

  தம் முன்னோர்களுக்கு ஈஸ்வரம் அமைக்கும் மகாபாக்கியம் கிடைத்ததை பெரும்பேறாகக் கருதிய ஸ்ரீவல்லப பாண்டியனின் வழித்தோன்றலான மாறவர்மன் சுந்தரபாண்டியன், இப்பேறு கிடைக்க மக்கள் செய்த உதவிக்குப் பிரதிபலனாக, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து அந்தப் பகுதி மக்களுக்கு விலக்கு அளித்தான். இதனால் அப்பகுதி ‘மாறன் தாய நல்லூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘மாறன்’ என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். ‘தாயம்’ என்பதற்கு ‘உரிமை’ என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை மக்களுக்கு விட்டுக்கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும் படியாக அப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது ‘மாறாந்தை’ என அழைக்கப்படுகிறது.

  12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கல்வெட்டில், இவ்வூர் ‘விக்கிரம பாண்டியபுரம்’ என்றும், இறைவன் ‘கயிலாசமுடைய நாயனார்’ என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. ஸ்ரீவல்லப பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்கள் இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ள விவரங்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன.

  அமைவிடம் :


  திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்காக 38 கி.மீ. தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் மாறாந்தை உள்ளது. மாறாந்தை பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. அருகில் கோவில் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.
  Next Story
  ×