search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiruchengode arthanareeswarar temple timings"

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற சிவ தலம், தற்போது ‘திருச்செங்கோடு’ என்று கூறப்படுகிறது. இறைவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பாகம்பிரியாள் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது.

    இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவ தீர்த்தம். இத்தலமரமாக இலுப்பை மரம் உள்ளது. இது விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம் ஆகும்.

    அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள்.

    மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

    திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது. இதில் இருபாதைகள் உண்டு. ஒன்று நடைப்பயணமாகப் படிக்கட்டு வழிச் செல்வோருக்கானது. மற்றொன்று வாகனம் மூலம் செல்வோருக்கானது. கோவில் நிர்வாகத்தாரால் மலைமேல் செல்ல கட்டணச் சிற்றுந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இந்த மலைக் கோவிலுக்குச் செல்லும் பாதை, 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழக்கு மேற்கில் 262 அடி நீளமும், தெற்கு வடக்காக 201 அடி நீளமும் கொண்டது இந்தக் கோவில். இதன் வடக்கு வாசல் ராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென் திசைகளிலும் இக்கோவிலுக்கு வாசல்கள் உண்டு. அவற்றுள் தென் திசை வாசலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.

    செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இந்த ஆலயம். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாசல் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி இருக்கிறது.

    அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.



    ஆதிசேஷன், மகாவிஷ்ணு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு தனிக்கோவிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, இவருக்கு தனியே கொடியேற்றி 10-ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.

    இக்கோவிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்த நாரீஸ்வரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற லிங்கத்துடன் நாகேஸ்வரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) சன்னிதியும் உள்ளன.

    கோவை மாவட்டத்தில் உள்ள காடாம்பாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாததூளி. இவரது மனைவி சுந்தரியம்மாள். இந்த தம்பதியருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. எனவே அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் ஏறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தான, தருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றிணைந்து திருச்செங்கோடு மலைமீது ராஜகோபுரம் அமைத்துத் தந்துள்ளனர்.

    இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107-வது திருப்பதிகத்திலும், திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116-வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். இக்கோவிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டுவேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனு பூதியில் பாடியுள்ளார்.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்தூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்பு உள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினால் ஆன சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன.

    அமைவிடம்

    அர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மலையின் மீதுள்ளது. இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் திருச்செங்கோடு கயிலாசநாதர் கோவில் உள்ளது. 
    ×