search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "professors"

    பேராசிரியர்கள் மீதான பாலியல் புகாரில் மாணவி ஆடியோ உரையாடலை ஒப்படைத்ததையடுத்து, போலீஸ் சூப்பிரண்டு வனிதா பேராசிரியர்களை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் தொல்லைக்கு விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டிய மாணவி, பேராசிரியைகள் பேசியதாக ஆடியோவை வெளியிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில், பாலியல் புகார் குறித்து மாணவியின் தோழிகள் 4 பேரை விசாரணைக்கு ஆஜராக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டுள்ளார். உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளின் ஆடியோ பதிவுகளையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் மாணவி ஒப்படைத்துள்ளார்.

    இதில், 10-க்கும் மேற்பட்ட உரையாடல் பதிவுகள் இருந்தன. முதலில் சி.டி.க்களில் பதிவு செய்த ஆடியோவை வழங்குவதாக மாணவி கூறினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆடியோவின் ஒரிஜினல் பதிவுகளையும், பேராசிரியைகளின் உரையாடல்களை பதிவு செய்த செல்போனையும் ஒப்படைக்க உத்தரவிட்டார்.



    அதன்படி, உரையாடலை பதிவு செய்த செல்போன், தன்னிடம் இருந்த அத்தனை ஆவணங்களையும் மாணவி ஒப்படைத்துள்ளார். இதனை வைத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    விசாரணை வளையத்திற்குள் பேராசிரியைகள் கொண்டுவரப்படுவதால் மாணவியின் பாலியல் தொல்லை புகாரில் பரபரப்பு தகவல்கள் வெளியாக கூடும் என தெரிகிறது. ஒரு வேளை விசாரணைக்கு ஆஜராக உதவி பேராசிரியரும், பேராசிரியர்களும் மறுத்தால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, மாணவியின் பாலியல் புகாரில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியைகளிடம் பணம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    பணம் கொடுக்கவில்லையெனில் பிரச்சினையை பெரிதுப்படுத்திவிடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டு அடிப்பணிய வைக்க முயற்சி நடப்பதாக கல்லூரி முதல்வர் புகார் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege

     

    புகார் கூறிய மாணவி தன் மீதுள்ள தவறை மறைக்கவே கல்லூரி மீதும் பேராசிரியர்கள் மீது பழி சுமத்தியுள்ளார் என்று கல்லூரி முதல்வர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

    மாணவி புகார் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்லூரியின் மீது புகார் கூறியுள்ள மாணவி, கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் செல்போனை உடைப்பதும் அவர்களை இழிவாக பேசுவதுடன் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். திருடிய பொருட்களை டாய்லெட்டில் வீசியுள்ளார்.

    அவரை கல்லூரி விடுதியில் இருந்து நீக்கியதற்கான உத்தரவு கடிதத்தை கடிதம் மூலம் அனுப்பினோம். ஆனால், அந்த கடிதத்தை அவர்கள் வாங்கவில்லை.

    பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கூறிய மாணவி தன் மீதுள்ள தவறை மறைக்கவே கல்லூரி மீதும் பேராசிரியர்கள் மீது பழி சுமத்தியுள்ளார் என்றார்.

    திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இரு பேராசிரியைகள் மாணவியை மிரட்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அக்கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிக்கு கல்லூரியின் பேராசிரியர் தங்க பாண்டியன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

    இதற்காக மாணவியின் விடுதி அறைக்கே சென்று அத்துமீறல்களை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பேராசிரியரின் இத்தகைய தரம் தாழ்ந்த செயலுக்கு விடுதிக் காப்பாளர்களான பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பேராசிரியர் தங்க பாண்டியனின் அத்துமீறல்கள் குறித்து புகார் செய்த மாணவியை தொலைத்துக்கட்டி விடுவோம்; பட்டப் படிப்பை முடிக்க முடியாது என்று பேராசிரியைகள் மிரட்டும் ஒலிப்பதிவும் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கல்லூரிகளில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று அஞ்சி நடுங்கும் வகையில் தான் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் நடந்துள்ள நிகழ்வுகள் அமைந்துள்ளன. மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்குள் பேராசிரியர்கள் உள்ளிட்ட எந்த ஆண்களும் சாதாரணமான நேரங்களில் செல்லக்கூடாது என்பது தான் விதியாகும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளை பாதுகாக்க வேண்டியது காப்பாளர்களின் கடமை ஆகும். ஆனால், திருவண்ணாமலைக் கல்லூரியில் அனைத்தும் தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன.

    கல்லூரி விடுதியில் மாணவி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறி தனிமைப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தங்கியிருந்த அறையின் தாழ்ப்பாள்கள் அகற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவியை உளவியல் ரீதியாகக் கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாணவிக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்ற நோக்கத்துடனும் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

    மாணவி திட்டமிட்டு, பிற மாணவிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தாழ்ப்பாள் கூட இல்லாத தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதைப் பார்க்கும் போது, பேராசிரியர் விடுதிக்கே வந்து பாலியல் தொல்லைக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. இது குறித்த மாவட்ட நீதிபதியின் விசாரணையில் இக்குற்றச் சாற்றுகள் உண்மை என்பது உறுதியாகியுள்ளது.



    பள்ளிகளையும், கல்லூரிகளையும் கல்விக் கோயில்கள் என்று தான் நான் அழைத்து வருகிறேன். அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கடவுளர்களாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தார்கள். பேராசிரியர்களும், பேராசிரியைகளும் மாணவ, மாணவியருக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து அன்பும், கண்டிப்பும் காட்டி மாணவர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தனர்.

    ஆனால், இப்போது நிர்மலா தேவி, புனிதா, மைதிலி போன்ற பேராசிரியைகள், தங்க பாண்டியன் போன்ற பேராசிரியர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளால் ஆசிரியர் சமுதாயம் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து வருகிறது. அப்பழுக்கற்ற உன்னதமான ஆசிரியர்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

    தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் எண்ணிக்கை இப்போது தான் அதிகரித்து வருகிறது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த நமது மக்கள் இப்போது தான் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இத்தகைய சூழலில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் இருப்பதாக அறிந்தால், பெரும்பான்மையான பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்குவார்கள். அது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமையும். எனவே, பேராசிரியர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில மனித விலங்குகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கல்வித்துறையில் கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வருவதன் மூலம் கல்விக்கூடங்களை பாதுகாப்பு நிறைந்த கல்விக் கோயில்களாக மாற்ற வேண்டும். அப்போது தான் மகளிர் சமுதாயம் கல்வி கற்று முன்னேற்றப் பாதையில் பயணிப்பார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான சூழலில் பெண்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege #Ramadoss
    உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து 5 பேர் கொண்ட குழு இன்று வேளாண் கல்லூரிக்கு விசாரணை நடத்த வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் மதுரையை சேர்ந்த தங்கபாண்டியன் (40). என்பவர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இரவு நேரத்தில் விடுதிக்கு சென்று சென்னை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதற்கு துணை பேராசிரியை மைதிலி, விடுதி வார்டன் புனிதா ஆகியோர் துணையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டனர்.

    அப்போது அந்த பகுதி கிராம மக்கள் மாணவியின் பெற்றோருடன் இணைந்து கல்லூரி முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.

    மேலும் தகவலறிந்த டி.எஸ்.பி. பழனி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையில் கல்லூரி மாணவியை பெண் பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

    இந்நிலையில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மக்கள் நீதிமன்றத்தில் தனது தந்தையுடன் ஆஜராகி மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து நீதிபதி மகிழேந்தி, மாணவி மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினார். பின்னர் வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு சென்று உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் மற்றும் கல்லூரி, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் நீதிபதியிடம், எங்களது ஐடி கார்டு, பேனா, பென்சில், கண் கண்ணாடிகளை அந்த மாணவி திருடிக் கொள்வார் என்று கூறினர்.

    அதற்கு நீதிபதி மகிழேந்தி, அந்த மாணவிக்கு அனைவரது பொருட்களை திருடுவதுதான் வேலையா? படிக்கும் வேலையில்லையா? தொலைந்து போன பொருட்களுக்கு புகார் தெரிவித்தீர்களா? என்று அவர்களிடம் கேட்டார்.

    தொடர்ந்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம், தொலைந்ததாக கூறப்படும் பழைய ஐடி கார்டுக்கு பதில் மறு ஐடி கார்டுக்கு பணம் பெற்றதற்கான ரசீது உள்ளதா? என்று கேட்டார். அந்த ரசீதுகள் பழைய கட்டிடத்தில் உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

    கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்

    பின்னர் நீதிபதி மகிழேந்தி, கல்லூரி விடுதியில் பாலியல் புகார் தெரிவித்த மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அந்த அறைக்கு உள்தாழ்ப்பாள், வெளிதாழ்ப்பாள் எதுவும் இல்லை. இதையடுத்து மாணவ, மாணவிகளிடம் பேராசிரியர்கள் சொன்னதையே ஒன்றுபோல் சொல்லியுள்ளீர்கள்.

    கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய சொன்னால் செய்கிறீர்கள். சாலையில் அமர சொன்னால் அமருவீர்கள். அவர்கள் கூறும் கருத்துக்களையே கூறுகிறீர்கள் என்று தெரிவித்ததுடன், பேராசிரியர்களை பார்த்து, மனித உரிமை கழகத்தினர் இங்கு வந்து 4 அல்லது 5 நாட்கள் தங்கி விசாரணை நடத்துவார்கள் என்று கூறினார்.

    இதை தொடர்ந்து நீதிபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க திருவண்ணாமலை எஸ்.பி.க்கு பரிந்துரை செய்யப்படும். அந்த விசாரணை முடிந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியும் என்று கூறினார்.

    மாணவி பேராசிரியர்கள் மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகள் 40 பக்கத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த புகார் கடிதம் மற்றும் நீதிபதியின் விசாரணை அறிக்கை எஸ்.பி. அலுவலகத்தில் இன்று கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மாணவி புகார் கூறிய பேராசிரியர் தங்க பாண்டியன், பேராசிரியைகள் புனிதா, மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாணவி கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து 5 பேர் கொண்ட குழு இன்று வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு விசாரணை நடத்த வருகின்றனர்.

    அந்த குழு மாணவி மற்றும் புகாரில் சிக்கியுள்ள பேராசிரியர் மற்றும் பேராசியைகளிடம் விசாரணை நடத்துகின்றனர். அதன் அடிப்படையில் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் மனித உரிமை கழகத்தினரும் விசாரணை நடத்த வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege
    ×