search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student harassment"

    ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சேலம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள முல்லூரை சேர்ந்தவர் அகில். இவர் உத்தரபிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த சில நாட் களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் நேற்று இரவு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    ரெயில் நள்ளிரவு 12 மணி அளவில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அவரது இருக்கைக்கு அருகில் இருந்த கல்லூரி மாணவியிடம் அகில் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று அதிகாலை ரெயில் சேலம் ஜங்‌ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த மாணவி கீழே இறங்கி வந்து சேலம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    இதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி ராணுவ வீரரை அழைத்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தார்.

    இந்த சம்பவம் சேலம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தொடர்புடைய உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். #ChennaiStudentharassment #AgriCollege
    திருவண்ணாமலை:

    சென்னையை சேர்ந்த ஒரு மாணவி, திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் படித்து வருகிறார். அந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஒருவர், அந்த மாணவிக்கு அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்; அவருக்கு ஒத்துழைப்பு தருமாறு, அந்த மாணவியிடம் விடுதி காப்பாளர்களாக உள்ள 2 பேராசிரியைகள் செல்போனில் பேசி தொல்லை கொடுத்தனர் என பரபரப்பு புகார் எழுந்து உள்ளது.

    இதில் விசாரணை நடத்துவதற்கு பெண் போலீஸ் அதிகாரி வனிதா (கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு) நியமிக்கப்பட்டு உள்ளார்.



    இவர் சம்பந்தப்பட்ட மாணவி, உதவி பேராசிரியர், விடுதி காப்பாளர்கள், கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்துகிறார். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி அறிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வேளாண்மை கல்லூரியின் முதல் மற்றும் இறுதி ஆண்டு மாணவ, மாணவிகள் 50 பேர், பாலியல் தொல்லை புகார் கொடுத்த மாணவிக்கு எதிராகவும், புகாருக்கு ஆளான உதவி பேராசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு ஆதரவாகவும் கல்லூரியின் எதிர்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    தகவல் அறிந்து அங்கு சென்ற திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முதலில் அதற்கு உடன்படாதவர்கள், பின்னர் அங்கு இருந்து கலைந்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதன் பின்னர் மீண்டும் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கு மத்தியில் கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்களும் கல்லூரிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து மாலை 3 மணியளவில் மீண்டும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டு கல்லூரி முகப்பு பகுதியில் படியில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி நேற்று முன்தினம் போலவே நேற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    2-ம் ஆண்டு தேர்வு நடைபெறுவதால், புகார் கூறிய மாணவி தனது பெற்றோர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் தேர்வு அறைக்கு சென்றார். தேர்வு முடிந்த பிறகு போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரியில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.

    இதற்கிடையில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள உதவி பேராசிரியர் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதாக கோவை வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் சுதாகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  #ChennaiStudentharassment #AgriCollege
    உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து 5 பேர் கொண்ட குழு இன்று வேளாண் கல்லூரிக்கு விசாரணை நடத்த வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் மதுரையை சேர்ந்த தங்கபாண்டியன் (40). என்பவர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இரவு நேரத்தில் விடுதிக்கு சென்று சென்னை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதற்கு துணை பேராசிரியை மைதிலி, விடுதி வார்டன் புனிதா ஆகியோர் துணையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டனர்.

    அப்போது அந்த பகுதி கிராம மக்கள் மாணவியின் பெற்றோருடன் இணைந்து கல்லூரி முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.

    மேலும் தகவலறிந்த டி.எஸ்.பி. பழனி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையில் கல்லூரி மாணவியை பெண் பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

    இந்நிலையில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மக்கள் நீதிமன்றத்தில் தனது தந்தையுடன் ஆஜராகி மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து நீதிபதி மகிழேந்தி, மாணவி மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினார். பின்னர் வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு சென்று உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் மற்றும் கல்லூரி, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் நீதிபதியிடம், எங்களது ஐடி கார்டு, பேனா, பென்சில், கண் கண்ணாடிகளை அந்த மாணவி திருடிக் கொள்வார் என்று கூறினர்.

    அதற்கு நீதிபதி மகிழேந்தி, அந்த மாணவிக்கு அனைவரது பொருட்களை திருடுவதுதான் வேலையா? படிக்கும் வேலையில்லையா? தொலைந்து போன பொருட்களுக்கு புகார் தெரிவித்தீர்களா? என்று அவர்களிடம் கேட்டார்.

    தொடர்ந்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம், தொலைந்ததாக கூறப்படும் பழைய ஐடி கார்டுக்கு பதில் மறு ஐடி கார்டுக்கு பணம் பெற்றதற்கான ரசீது உள்ளதா? என்று கேட்டார். அந்த ரசீதுகள் பழைய கட்டிடத்தில் உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

    கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்

    பின்னர் நீதிபதி மகிழேந்தி, கல்லூரி விடுதியில் பாலியல் புகார் தெரிவித்த மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அந்த அறைக்கு உள்தாழ்ப்பாள், வெளிதாழ்ப்பாள் எதுவும் இல்லை. இதையடுத்து மாணவ, மாணவிகளிடம் பேராசிரியர்கள் சொன்னதையே ஒன்றுபோல் சொல்லியுள்ளீர்கள்.

    கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய சொன்னால் செய்கிறீர்கள். சாலையில் அமர சொன்னால் அமருவீர்கள். அவர்கள் கூறும் கருத்துக்களையே கூறுகிறீர்கள் என்று தெரிவித்ததுடன், பேராசிரியர்களை பார்த்து, மனித உரிமை கழகத்தினர் இங்கு வந்து 4 அல்லது 5 நாட்கள் தங்கி விசாரணை நடத்துவார்கள் என்று கூறினார்.

    இதை தொடர்ந்து நீதிபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க திருவண்ணாமலை எஸ்.பி.க்கு பரிந்துரை செய்யப்படும். அந்த விசாரணை முடிந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியும் என்று கூறினார்.

    மாணவி பேராசிரியர்கள் மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகள் 40 பக்கத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த புகார் கடிதம் மற்றும் நீதிபதியின் விசாரணை அறிக்கை எஸ்.பி. அலுவலகத்தில் இன்று கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மாணவி புகார் கூறிய பேராசிரியர் தங்க பாண்டியன், பேராசிரியைகள் புனிதா, மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாணவி கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து 5 பேர் கொண்ட குழு இன்று வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு விசாரணை நடத்த வருகின்றனர்.

    அந்த குழு மாணவி மற்றும் புகாரில் சிக்கியுள்ள பேராசிரியர் மற்றும் பேராசியைகளிடம் விசாரணை நடத்துகின்றனர். அதன் அடிப்படையில் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் மனித உரிமை கழகத்தினரும் விசாரணை நடத்த வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege
    ×