search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus2 Exam"

    • விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தவறு செய்யும் ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பாடங்களின் விடைத்தாள்களும் பாதுகாப்பாக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள்கள் கலெக்டர் கட்டுப்பாட்டில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

    சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்வதை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    விடைத்தாள்கள் 10-ந்தேதி முதல் திருத்தப்படுகின்றன. விடைத்தாள்கள் மாவட்டங்களுக்கு இடையே இடமாற்றம் செய்து திருத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இந்த பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

    விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டல் தவறும், மதிப்பெண் போடாமல் விடுதல் உள்ளிட்ட பிழைகள் ஏற்படாதவாறு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சிய போக்கு வேண்டாம் எனவும் மையங்களில் செல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்தம் செய்த ஆசிரியர்களில் சிலரின் கவனக்குறைவின் காரணமாக மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவதோடு, விபரீத முடிவுகளை எடுக்கும் சூழலும் உருவாகிறது.

    தவறு செய்யும் ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள். இந்த போக்கு தொடரக்கூடாது என்பதில் கல்வித்துறை உறுதியாக உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் மதிப்பெண் பதிவேற்ற பணிகள் நடைபெறும்.

    • உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
    • தமிழ் மொழிப்பாட தேர்வை உமாமகேஸ்வரி ஆர்வமுடன் எழுதினார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி (வயது 17). திருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க உமாமகேஸ்வரி சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது 2 கால்கள், இடது கை, குறுக்கெலும்பு உடைந்தது. இதையடுத்து உமாமகேஸ்வரி கடந்த 2 மாதங்களாக கை, கால்களில் கட்டுபோடப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு சிகிச்சையில் இருக்கும்போதே தேர்வுக்கு தயாரானார். ஆசிரியைகள் மற்றும் தோழிகளிடம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு படித்து வந்தார். அரசு பொது தேர்வை எழுதும் ஆர்வத்தில் இருந்த உமா மகேஸ்வரிக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தது. அதன்படி இன்று தேர்வு தொடங்கிய நிலையில் உமாமகேஸ்வரி வீட்டில் இருந்து வேனில் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    உதவியாளர்கள் அவரை தேர்வு அறைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர். அங்கு உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழிப்பாட தேர்வை அவர் ஆர்வமுடன் எழுதினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கர்ணன், சமூக ஆர்வலர்கள் காளீஸ்வரன், இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

    இதுகுறித்து மாணவி உமாமகேஸ்வரி கூறுகையில், "கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுத கடந்த சில வாரங்களாக தயாராகினேன். தேர்வு எழுத எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிப்பேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    • தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்து தரப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இந்த பணிகளை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

    தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது.

    • சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது.
    • மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என உத்தரவு.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்க இருக்கிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட வேண்டிய தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, செய்முறை கொண்ட பாடங்களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.225-ம், செய்முறை இல்லாத பாடங்களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.175-ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தேர்வு கட்டணங்களில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேசாத மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.சிஏ., எஸ்.எஸ்., எஸ்.டி., எம்.பி.சி. பிரிவை சேர்ந்த மாணவர்கள், அதேபோல், பி.சி., பி.சி.எம் பிரிவில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

    சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது. மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. #Plus2Exam

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தின் படி இந்த தேர்வு நடத்தப்பட்டது.

    பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். 2941 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது.

    கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களை தவிர மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த பணி ஏப்ரல் 11-ந்தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 19-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. #Plus2Exam

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் புது நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி விஜயா. இவர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு பிரியங்கா(வயது 17) என்ற மகளும் இருந்தார். இவர், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள மூங்கில் பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரியங்கா தேர்ச்சி பெற்றார். ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

    மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த தியாகராஜன், தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் மாணவி பிரியங்காவுக்கும், அவருடன் படித்த சக மாணவிகளுக்கும் இடையே பிளஸ்-2 பொதுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுவது? என்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டதாகவும், அதில் சக மாணவிகளை விட பிரியங்கா குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர், தனது தாயிடம் கூறி அழுது உள்ளார். அதன்பிறகே இந்த மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
    ×