search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MDMK volunteer"

    தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து செல்போன் டவர் மேல் ஏறி நாகை ம.தி.மு.க. தொண்டர் போராட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    இதேபோல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.

    நாகையை அடுத்த கீழ்வேளூர் அருகே வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் திலகர் (வயது 32). ம.தி.மு.க. தொண்டர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் திலகர் ஏறினார். அப்போது கையில் ம.தி.மு.க. கொடியுடன் ஏறி நின்று தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார். பின்னர் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்று மிரட்டினார்.

    இதை பார்த்து இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கீழ்வேளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். அங்கு செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த திலகரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் மறுத்தார். இங்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வந்து தனது கோரிக்கையை ஏற்றால்தான் கீழே இறங்குவேன். டவரில் ஏறி தன்னை பிடிக்க வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று கூறினார்.

    இதனால் போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து சென்றனர். இன்று காலை 9 மணிவரையிலும் திலகர் கீழே இறங்காமல் தொடர்ந்து 5 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகிறார்.

    தஞ்சை கரந்தை வடவாறு பாலம் அருகே நேற்றுமாலை தமிழ் தேச மக்கள் முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் அருண்சோரி தலைமை தாங்கினார்.

    சாலை மறியல் போராட்டம் பற்றி அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேலு தலைமையில் அதிரடி படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது வடவாறு பாலம் அருகே நின்று கொண்டிருந்த 5 இளைஞர்கள் அரசு பஸ்சுக்கு அடியில் படுத்து கொண்டனர். இவர்களை வெளியே வர கூறி அதிரடிபடையினர் வலியுறுத்தினர்.

    ஆனால் அவர்கள் பஸ்சுக்கு அடியில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டனர். இதனால் அவர்களை அதிரடிப்படையினர் தரதரவென இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரியும், நேற்று பாபநாசத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.

    பாபநாசம் கோர்ட்டு முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கர், தலைமையில் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஜெயக்குமார், வக்கீல்கள் சிவசாமி, சதீஷ், சுரேஷ், கண்ணன், சிவக்குமார், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் அம்பிகா பதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ×